அதிமுக – பாஜக இடையேயான உறவு சுமூகமாக இருப்பதாக தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் இன்று ஒளிபரப்பானது. பிரதமரின் வானொலி உரையை கேட்பதற்காக மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் எல்.முருகன் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 2014-லிருந்து அகில இந்திய வானொலியின் “மன் கி பாத்” (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
இதில் நாட்டின் பின் தங்கிய பகுதிகளில் உள்ள மக்கள் செய்யும் சேவைகளை பிரதமர் பாராட்டி வருகிறார். இன்றைய 99வது “மன் கி பாத்” நிகழ்ச்சியில்கூட, ஊட்டியில் ஆம்புலன்ஸ் சேவை செய்வோரையும், பொள்ளாச்சியில் இளநீர் விற்கும் பெண்மணியையும் குறிப்பிட்டு அவர்களது சேவைகளை பாராட்டினார்.
இதேபோல், குஜராத்தில் நடைபெற உள்ள குஜராத் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி பற்றியும் பிரமதர் பேசினார். சவுராஷ்டிரா மக்கள் மதுரை, பரமக்குடி, சேலம், திண்டுக்கல், சென்னை என பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
இந்த மக்களை குஜராத்தில் உள்ள சவுராஷ்டிரா பகுதிக்கு அழைத்து செல்வதற்கான திட்டம் குறித்தும் எடுத்துரைத்தார். காசித் தமிழ் சங்கமம் மிகப்பெரும் வெற்றி பெற்றதைப்போல குஜராத் தமிழ்ச்சங்கமம் வெற்றி பெறவும் பிரதமர் வாழ்த்து கூறியுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசியதால் ராகுல் காந்திக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. அதன் காரணமாகவே அவரது எம்பி பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளது. அதிமுக – பாஜக இடையே சுமூக உறவு நீடித்துக் கொண்டிருக்கிறது. எங்கள் கட்சியின் மாநில தலைவரும் இதனை ஏற்கனவே சொல்லியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக முழு வேகத்தில் தயாராகிக் கொண்டிருக்கிறது. பூத்களை வலிமைப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனொரு பகுதியாகவே, பிரதமரின் “மன் கி பாத்” நிகழ்ச்சி மதுரையில் நடந்துள்ளது” என தெரிவித்தார்