- Ads -
Home உள்ளூர் செய்திகள் மதுரை ஆடி-18 நாளில் சிவகாசியில் 2025ம் ஆண்டுக்கான காலண்டர் பூஜை போட்டு வெளியீடு!

ஆடி-18 நாளில் சிவகாசியில் 2025ம் ஆண்டுக்கான காலண்டர் பூஜை போட்டு வெளியீடு!

சிவகாசியில், 'ஆடி 18ம் பெருக்கு' நாளில், '2025'ம் ஆண்டிற்கான தினசரி காலண்டர் ஆல்பங்கள் வெளியீடு… QR கோடுடன் காலண்டர் அறிமுகம்…

#image_title
sivakasi calender
#image_title
  • சிவகாசியில், ‘ஆடி 18ம் பெருக்கு’ நாளில், ‘2025’ம் ஆண்டிற்கான தினசரி காலண்டர் ஆல்பங்கள் வெளியீடு… QR கோடுடன் காலண்டர் அறிமுகம்…
  • 234 சட்டமன்ற தொகுதிகளின் சிறப்பம்சங்கள் குறித்து மெகா சைஸ் காலண்டர் அறிமுகம்…..

‘2025’ ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க, சிவகாசியின் காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. ‘ஆடி 18ம் பெருக்கு’ நாளான இன்று, புத்தாண்டிற்கான தினசரி காலண்டர் ஆல்பங்கள் பூஜைகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியின் முக்கியமான தொழில்களில் முதன்மையானதாக அச்சகங்கள் இருந்து வருகிறது. இங்குள்ள அச்சகங்களில், 50க்கும் மேற்பட்ட அச்சகங்கள் காலண்டர் தயாரிப்பு பணிகளில் மட்டும் பிரத்யேகமாக ஈடுபட்டு வருகின்றன.

சிவகாசி அச்சகங்களில் வழக்கமான தினசரி காலண்டர்களுடன் பல வடிவங்களில் புதுப்புது ரகங்களில் காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.

ALSO READ:  தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

டை கட்டிங் காலண்டர், பாயில்ஸ் காலண்டர், சில்வர் கோட்டிங் காலண்டர், பெட் பாயில்ஸ் காலண்டர், யூவி காலண்டர், கையடக்க காலண்டர் முதல் மெகா சைஸ் வரையிலான காலண்டர்கள், மாத காலண்டருடன் இணைந்த தினசரி காலண்டர், பல வடிவங்களில் சுவாமி படங்களுடன், அழகிய போட்டோ பிரேம்களுடன் கூடிய காலண்டர்கள், இந்து கடவுள்கள், கிறிஸ்து மற்றும் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்கள், தமிழக பிரபல அரசியல் தலைவர்கள், பிரபல நடிகர், நடிகைகள், இயற்கை காட்சிகள், தமிழகத்தின் பிரபலமான இடங்கள், இந்தியாவின் முக்கிய இடங்கள், உலக நாடுகளில் பிரபலமான இடங்கள் என கண்கவரும் வகையில் அச்சிடப்பட்ட, நூற்றுக்கும் மேற்பட்ட ரகங்களிலான காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் புது ரகம் மற்றும் புது வடிவங்களில் காலண்டர்கள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். ஒரு காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட வடிவங்கள் மற்றும் டிசைன்களில் காலண்டர்கள் தயாராகும்.

தற்போது, வரும் 2025ம் ஆண்டிற்கான காலண்டர்களின் ஆல்பம் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஒவ்வொரு ஆண்டும், ‘ஆடி 18ம் பெருக்கு’ நாளன்று காலண்டர் தயாரிப்பு நிறுவனங்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, புத்தாண்டிற்கான காலண்டர் ஆல்பங்கள் வெளியிடப்படும்.

ALSO READ:  கோயிலை மீட்க போராடவும் பக்தர்களுக்கு உரிமை இல்லை! ஒடுக்குமுறையின் உச்சம்!

தயாராகியுள்ள காலண்டர் ஆல்பங்கள், காலண்டர்கள் ஆர்டர்கள் எடுக்கும் முகவர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆல்பங்களில் இருக்கும் மாதிரிகளை வாடிக்கையாளர் களிடம் காண்பித்து, அவர்கள் விரும்பும் ரக காலண்டர்களை ஆர்டர்கள் பெற்று காலண்டர் நிறுவனத்திற்கு முகவர்கள் தருவார்கள்.

முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் விரும்பும் ரக காலண்டர்களை தயார் செய்து அனுப்பும் பணிகளில் காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபடும். ஆடி 18ம் பெருக்கு நாளிலிருந்தே வரும் புத்தாண்டிற்கான காலண்டர் அச்சடித்து விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கிவிடும்.

ஆடிப் பெருக்கு நாளில், புத்தாண்டு காலண்டர் சீசன் தொடங்கினாலும் விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் தான் காலண்டர் சீசன் உச்சகட்ட விறுவிறுப்பில் இருக்கும்.

தற்போது, முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான காலண்டர் ஆல்பங்கள் இன்று, ‘ஆடி 18ம் பெருக்கு’ நாளில் வெளியிடப்பட்டன. தமிழ்நாடு தினசரி காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ஜெயசங்கர் கூறும்போது, ஒவ்வோர் ஆண்டும் தினசரி காலண்டர்களில் புதுப்புது ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

ALSO READ:  சங்கரன்கோவில் பகுதி புத்த ஆலயம் நோக்கி புத்த பிக்குகள் ‘அமைதி’ நடைபயணம்!

வரும் ‘2025’ ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் மெகா சைஸிலான ‘மரகத காலம்’ காலண்டரும், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள சிறப்பம்சங்கள் குறித்தும் புதுமையான வகையிலான காலண்டர்களும் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும், அன்றைய காலண்டர் தாளில் உள்ள கியூஆர் கோர்டை ஸ்கேன் செய்து பார்த்தால், அந்த சட்டமன்ற தொகுதியின் சிறப்பம்சங்கள், கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் புதுமையாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன், கடிகாரத்துடன் கூடிய மெகா சைஸ் காலண்டர் உட்பட பல ரகங்களிலான வழக்கமான காலண்டர்களும் தயாரிக்கப்பட்டுள்ளன என்று கூறினார். மேலும் மூலப்பொருட்கள், தொழிலாளர்களின் கூலி உயர்வு, மின் கட்டணம் போன்ற விலை உயர்வால் காலண்டரின் விலை 10 சதவீதம் உயரும் – என தெரிவித்தார், தமிழ்நாடு தினசரி காலண்டர்கள் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ஜெயசங்கர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version