
அருப்புக்கோட்டை அருகே பெண்கள் கல்லூரி அங்கீகாரம் இன்றி செயல்படுவதாகவும் போலியான ஹால் டிக்கெட் வழங்கியதாகவும் கல்லூரி மாணவிகள் முற்றுகை போராட்டம்.
அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் அருகே தமிழ்நாடு கல்லூரி என்ற பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் BEMS – பேச்சுலர் ஆப் எலெக்ட்ரோ ஹோமியாபதி மெடிசன் Bsc MLT – பேச்சுலர் ஆப் சைன்ஸ் இன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி DNA – டிப்ளமோ நர்சிங் DMLT – டிப்ளமோ லேப் டெக்னாலஜி என்ற நான்கு பிரிவுகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பிரிவுகளில் 222 மாணவிகள் படித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரம் செய்தும் கல்லூரி மாணவிகள் அவர்களது பெற்றோர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தஞ்சாவூர் புதுக்கோட்டை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து இங்கு மாணவிகள் அட்மிஷன் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த கல்லூரியில் இன்று Bsc MLT பிரிவுக்கு செமஸ்டர் தேர்வு நடந்ததாகவும் அதற்காக விநியோகம் செய்யப்பட்ட தேர்வு நுழைவுச்சீட்டில் எந்த கையெழுத்தும் இல்லை எனவும் மேலும் ஒரு சிலருக்கு கையால் எழுதப்பட்ட நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த மாணவிகள் தங்களது பெற்றோருக்கு இது குறித்து தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரித்ததில் இந்த கல்லூரிக்கு முறையான எந்த அங்கீகாரம் இல்லை எனவும் போலியான ஹால் டிக்கெட் வழங்கி தங்களை ஏமாற்றம் முயற்சி செய்வதாகவும் புகார் தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் போராட்டம் காரணமாக கல்லூரியில் போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டம் நடத்திய மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய புகார் அளிக்குமாறு போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளும் பெற்றோர்களும் தாங்கள் கல்லூரியில் சேர்க்கும்போது வழங்கிய மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை திரும்பி வழங்வும் கட்டிய பணத்தையும் திரும்ப வழங்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
இதனை அடுத்து விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து தங்கள் வழங்கிய சான்றிதழ்களை பெற்று செல்லுமாறும் போலீசார் தெரிவித்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் உங்களுக்கு மாற்றுச் சான்றிதழ் மற்றும் கட்டிய பணத்தை திரும்ப வழங்க கோரி மனு அளித்தனர்.
மாற்றுச் சான்றிதழ் கோரிய மாணவிகளுக்கு பெற்றோருடன் வந்த மாணவிகளுக்கு மட்டும் உடனடியாக மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பெற்றோர் இல்லாத மாணவிகள் பெற்றோரை அழைத்து வந்து மாற்றுச் சான்றிதழ் பெற்றுச் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
மேலும் கட்டிய பணத்தை திரும்ப வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.