
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
பாம்பன் ரயில் பாலம் 1914-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் வழியே நடைபெற்ற போக்குவரத்தின் மூலம் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. கடலுக்கு நடுவில் இருந்த பழைய பாலத்தில் 40 கிமீ., முதல் 50 கிமீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன.
பாம்பன் ரயில் பாலம் 110 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கடல் உப்பு நீர் அரிப்பின் காரணமாக பாலத்தின் பல இடங்களில் உறுதித்தன்மை குறைந்தது. கப்பல் போக்குவரத்துக்காக பயன்படும் ‘தூக்கு பாலத்தில்’ அவ்வப்போது பழுது ஏற்பட்டு வந்தது. எனவே, பாதுகாப்பு கருதி இப்பாலத்தில் 2022 டிசம்பர் 22-ம் தேதியுடன் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பழைய பாம்பன் ரயில் பாலம் அருகே புதிய ரயில் பாலம் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது. ரூ.550 கோடி மதிப்பில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. வருங்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, இரட்டைப் பாதைக்கான இடவசதியுடன் கூடிய வகையில், மின்சார ரயில் போக்குவரத்துக்கு ஏற்ப, கடலின் நடுவே 2.1 கிமீ., தொலைவுக்கு பாலம் கட்டப்பட்டு வந்தது.
இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகளை அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு செய்தபோது, ஒரு சில குறைகளைச் சுட்டிக் காட்டினார். பாதுகாப்பு ஆணையர் சுட்டிக்காட்டிய குறைகள் சரிசெய்யப் பட்டதை அடுத்து, புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.
தொடர்ந்து,பிப்ரவரி மாதத்தில் இந்தப் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் வகையில் திறந்து வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெறாமல் தள்ளிப் போடப்பட்டு வந்தது. பாம்பன் புதிய ரயில் பாலம் மத்திய அரசின், குறிப்பாக பிரதமர் மோடியின் கனவுத் திட்டம் என்பதால், முக்கியமாக காசியான வாரணாசி தொகுதி எம்பி.,யான பிரதமர் மோடியே காசி-ராமேஸ்வரம் இணைப்புப் பாதையை விரும்பிச் செய்வதால், அதை பிரதமர் மோடியே நேரில் வந்து திறந்து வைப்பார் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.
கடந்த மார்ச் 23ம் தேதி தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் கௌஷல் கிஷோர் தலைமையில், ரயில்வே உயர் அதிகாரிகள் பாம்பன் பாலத்தை ஆய்வு செய்தனர். இந்நிலையில், பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியானது. தொடர்ந்து இரு தினங்களுக்கு முன் 12 பெட்டிகள் கொண்ட புதிய ரயில் இந்தப் புதிய பாலம் வழியாக ராமேஸ்வரம் வந்து சேர்ந்தது.
இந்நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நேரடியாக வருவதாகத் தகவல் வெளியானது. அவரது பயண திட்டப் படி, 5-ம் தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அங்கிருந்து நேரடியாக பாம்பன் வருகிறார். 6-ம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
பாம்பன் ரயில்வே பாலம் திறப்பு விழாவில், தமிழக மாநில முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பாஜக., மூத்த தலைவர்கள், தொண்டர்கள் உள்பட பலரும் கலந்துகொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே செய்து வருகிறது.
பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின்னர் பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதஸ்வாமி கோவிலில் தரிசனம் செய்கிறார். அதன் பிறகு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து தில்லி செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நேரத்தில், ராமேஸ்வரத்துக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்னை ராமேஸ்வரம் பகல் நேர எக்ஸ்பிரஸ் உள்பட, பிற மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு நேரடி ரயில் போக்குவரத்துக்கு அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.