சசிகலா புஷ்பா எம்.பி., ‘சக்களத்தி’ சத்யபிரியாவை கைது செய்ய மதுரையில் தில்லி போலீஸ் முகாம்!

தில்லி போலீஸார் சத்யபிரியா வீட்டுக்கு வந்தபோது, அப்பகுதியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தில்லி போலீஸார் கீரைத்துறை காவல் நிலையம் சென்று சத்யபிரியா குடும்பத்தினர் தொடர்பாக விசாரணை நடத்தினர். இவர்கள் இருவரையும் கைது செய்யும் வரை தில்லி போலீஸார் மதுரையில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளனர்.

மதுரை: கடந்த மாதம் பரபரப்பை ஏற்படுத்திய அதிமுக., எம்.பி. சசிகலா புஷ்பா திருமண விவகாரத்தில் தொடர்புடைய ராமசாமியின் மனைவி சத்யபிரியா, அவரது சகோதரர் மணிகண்டன் ஆகியோரைக் கைது செய்ய தில்லி போலீஸார் மதுரையில் முகாமிட்டுள்ளனர். இது தொடர்பாக, மதுரையில் சத்யப்பிரியா வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த சத்யப்பிரியா என்பவர், கடந்த மாதம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ஓரியண்டல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்று கூறிக் கொள்ளும் ராமசாமிதான் தன் கணவர் என்றும், நீதிபதி என்று ஏமாற்றி தன்னை அவர் திருமணம் செய்துகொண்டார் என்றும், தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த பின் அவர் தன்னை விட்டுச்சென்று விட்டார் என்றும், தற்போது சசிகலா புஷ்பா எம்.பி.க்கும், தனது கணவர் ராமசாமிக்கும் இடையே திருமணம் நடக்க இருப்பதாக அழைப்பிதழ்களைப் பார்த்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தப் புகாரின் பேரில், திருப்பரங்குன்றம் மகளிர் போலீஸார் ராமசாமி மற்றும் அவரது சகோதரிகள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். சசிகலா புஷ்பா, ராமசாமி திருமணத்துக்கும் மதுரை மாவட்ட நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் நீதிமன்றத் தடையை மீறி, சசிகலா புஷ்பா, ராமசாமியைத் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர், சத்யபிரியா, அவரது சகோதரர் மணிகண்டன் ஆகியோர் மீது ராமசாமி தில்லி போலீஸாரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், தனது முதல் மனைவியின் மகளை, சத்யபிரியாவும் அவரது சகோதரர் மணிகண்டனும் கொடுமைப்படுத்தியதாகத் தெரிவித்தார். இந்தப் புகாரின்பேரில், சத்யபிரியா, மணிகண்டன் ஆகியோர் மீது தில்லி நார்த் அவென்யூ போலீஸார், குழந்தைகள் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் மார்ச் 26 அன்று வழக்குப் பதிவு செய்தனர். அதன்பேரில், சத்யபிரியா, மணிகண்டன் இருவரையும் கைது செய்வதற்காக, தில்லி காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் விஜய்பால் தலைமையில் இரு பெண் காவலர்கள் உள்பட 5 போலீஸார் மதுரை வந்தனர்.

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, ஞாயிற்றுக்கிழமை மாலை சத்யபிரியாவின் வீட்டுக்குச் சென்றனர். ஆனால் சத்யபிரியா வீடு பூட்டப்பட்டிருந்தது. இதை அடுத்து அவரது வீட்டின் முன், தில்லி நார்த் அவென்யூ காவல் நிலையத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெற உள்ள விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர்.

தில்லி போலீஸார் சத்யபிரியா வீட்டுக்கு வந்தபோது, அப்பகுதியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தில்லி போலீஸார் கீரைத்துறை காவல் நிலையம் சென்று சத்யபிரியா குடும்பத்தினர் தொடர்பாக விசாரணை நடத்தினர். இவர்கள் இருவரையும் கைது செய்யும் வரை தில்லி போலீஸார் மதுரையில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளனர்.