விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்திற்கு தூய்மை இந்தியா திட்ட ஆய்வு, கோரிக்கை மனுக்கள் பெறுதல், மாவட்ட திட்ட பணிகள் குறித்து அரசு துறை அதிகாரிகளிடம் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகரில் தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு சாலை மார்க்கமாக வரும் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டுவதற்காக தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் K.K.S.S.R. ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் தலையிடுவதை கண்டித்தும், வரம்புகளை மீறி ஆய்வு நடத்த வரும் ஆளுநர் திரும்பி செல்ல வேண்டும், மத்திய அரசுகளுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.
ஆளுநர் வருவதற்கு முன்னதாகவே முன்னெச்செரிக்கை நடவடிகையாக போராட்டத்தில் ஈடுபட்ட 550 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்