உண்டியல்களில் கோரிக்கைகளை எழுதிப் போடும் போராட்டம்… இந்து முன்னணி அறிவிப்பு!

மதுரை: கோயில் உண்டியல்களில் கோரிக்கைகளை எழுதி சீட்டுகளாகப் போடும் போராட்டத்தை இந்துமுன்னணி நடத்த உள்ளதாக அதன் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் கூறியுள்ளார்.

இந்து முன்னணி இயக்கத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமனியன் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், தமிழ்நாட்டில் திராவிட ஆட்சிகள் வருகைக்குப் பிறகு கோயில் சிலைகள் திருடப்பட்டு வருகின்றன. கோயில் மறுப்பாளர்களை அதிகாரிகளாக நியமித்து உள்ளனர்.

சிலைத் திருட்டு வழக்கில் விசாரணை அதிகாரி பொன். மானிக்கவேல் சிறப்பாக தன் பணியினை செய்து வந்தார். அவர் பணியில் தமிழக அரசு குறுக்கிட்டு வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர் வரும் என்ற அச்சமே அதற்குக் காரணம். அவரே இந்தப் பணியினை தொடர வேண்டும். இது வரை 1500 சிலைகள் காணாமல் போயிருக்கின்றன.

வருகிற 12 முதல் 18 வரை கோயில்களில் உள்ள உண்டியல்களில் தங்கள் கோரிக்கைகளை உள்ளே போட வேண்டும். இதில் உள்ள வாசகங்கள் கோயிலின் சிலைகள் காப்பற்ற வேண்டும். கோயிலின் சொத்துக்கள் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதாகும். சிலைத்திருட்டு வழக்கில் சிபிஐ தலையிட வேண்டும் என்பது அல்ல.

23, 24, 25 ஆகிய தேதிகளில் திருப்பூரில் யாகம் நடத்த உள்ளோம். இதில் பல லட்சம் மக்கள் பங்கு பெறுவார்கள். கோயில்களின் சொத்துக்கள் இங்கே ஆக்கிரமித்தும் திருடபட்டும் உள்ளது. அவற்றை உடனடியாக மீட்க வேண்டும் எனக் கூறினார்.