மதுரை: சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி நடந்த அமைதிப் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு மு.க.அழகிரி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு அறிக்கையும் வெளியிட்டார். அதில்
நான்…
ஒரு தலைவன் அல்ல…
ஒரு மேடை பேச்சாளன் அல்ல…
ஒரு நடிகன் அல்ல…
தனி மனிதனாய்…
தொண்டனாகிய என் வேண்டுகோளை ஏற்று கருணாநிதியின் 30வது நாள் நினைவு பேரணிக்கு அஞ்சலி செலுத்த என் மீது பாசங் கொண்டு அலை கடலென வந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தங்களின் பாதங்களில் காணிக்கை ஆக்குகிறேன் – எனக் கூறியுள்ளார்.
இதனிடையே அழகிரியிடம் இந்தியா டுடே சார்பில் ஒரு பேட்டி காணப்பட்டது. அதில், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும். இதில் அழகிரியின் துணையின்றி திமுக., வெற்றி பெற இயலாது. திருவாரூரில் 3ம் இடத்துக்குதான் வரும். திருப்பரங்குன்றத்தில் 4ம் இடத்துக்குப் போனாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்றார் அழகிரி.
நேற்று பேரணி நடந்தது. இன்று உடனே கட்சி பற்றி எல்லாம் சொல்ல முடியாது. ஆனால், தொண்டர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும். இது கார்ப்பரேட் கம்பெனி மாதிரி நடத்தப் படுவதில்லை. யாரோ சொல்வதைக் கேட்டு நடக்க. என்னை நம்பி இத்தனை பேர் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு கடைசி வரை நான் பாதுகாவலனாக இருப்பேன்.
திமுக.,வுக்கு மீண்டும் திரும்பும் எண்ணம் நேற்றோடு முடிந்தது. என்னை அவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற மனநிலையில் இருக்கின்றனர். ஊடகத்தினர் யாருமே அவர்களிடம் சென்று, அழகிரியை சேர்த்துக் கொள்வீர்களா மாட்டீர்களா என்று கேட்பதில்லை. என்னிடம் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள். எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை இருக்கிறது. ஓரளவுக்கு பார்ப்போம். இல்லாவிட்டால் நாங்கள் ஒரு முடிவு எடுத்துக் கொள்வோம்.
திமுக.,வில் இப்போது இருக்கும் ரஜினி ரசிகர்கள், ரஜினி ஒரு கட்சியை தொடங்கினால் நிச்சயம் அனைவரும் ரஜினியிடம் சென்றுவிடுவர் என்று கூறினார் அழகிரி!