நாளை துவங்குவதாக இருந்த அரசு மருத்துவர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

நாளை துவங்குவதாக இருந்த வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக அரசு மருத்துவர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முகமது யூனுஸ் ராஜா என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், அரசு மருத்துவர்கள் டிசம்பர் 8 முதல் 13 வரை அறிவித்துள்ள வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்குமாறு கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு கொண்ட அமர்வு, வேலை நிறுத்தத்தைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறைச் செயலர், அரசு மருத்துவர் சங்க செயலர், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது.

தொடர்ந்து இன்று மீண்டும் நடந்த விசாரணையின் போது சுகாதாரத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், மருத்துவர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைவது குறித்து ஆராய நிதித்துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளதாகக் கூறப் பட்டிருந்தது.

இதையடுத்து, அரசு மருத்துவர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நாளை நடத்த இருந்த வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாகத் தெரிவித்தார். அடுத்த கட்ட வழக்கு விசாரணை டிச.17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.