ஆட்சியரகத்தில் பொதுமக்கள் தற்கொலைக்கு முயன்றால் குண்டர் சட்டம் பாயும்! நெல்லை ஆட்சியரின் அறிவிப்பால் பரபரப்பு!

தீப்பற்றக் கூடிய பொருள்களை பொது இடங்களுக்கு எடுத்து வருவதும் மற்ற பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதும் அவசியம் தடுக்கப் பட வேண்டும், இது தண்டனைக்குரிய ஒன்று

Tirunelveli Collector Shilpa

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பாபிரபாகர்சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நீதி நாளின் போது, ஆட்சியரிடம் மனு அளிக்க வருபவர்கள், தற்கொலை முயற்சி உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் எச்சரித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்துவட்டி பிரச்னை, பணம் கொடுத்து ஏமாறுதல், நிலப்பிரச்னை என பல்வேறு பிரச்னைகளில் பாதிக்கப்பட்டவர்கள், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு நீதி நாளின் போது, தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது தொடர்கதையாகி விட்டது !

fire 1

கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் கந்துவட்டி பிரச்னையால் இரு குழந்தைகளுடன் தீக்குளித்து தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியது. இதை அடுத்து, மாவட்டத்தில் கந்து வட்டி பிரச்னை இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. தொடர்ந்து கந்து வட்டி குறித்து புகார் வந்தால், உடனே கவனித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் துறையும் அறிவுறுத்தப் பட்டனர்.

இதே போல், அண்மைக் காலமாக நெல்லை மாவட்ட ஆட்சியரகத்தில் வருபவர்கள், தற்கொலைக்கு முயற்சி செய்வது பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கடந்த திங்கள்கிழமையும் விவசாயி போதர் என்பவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இது போன்ற ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஆட்சியர், சின்ன பையன் வேறோருவரிடம் காசு வாங்கியிருக்கார்னு தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். அரசு பொறம்போக்கு நிலத்தில் தவறான வகையில் பத்திரங்களைத் தயார் செய்தவர், அவரது நிலத்தில் வேறு ஒருவர் குடிசை போட்டார் என்று கூறி மனு கூட எதுவும் நம்மிடம் கொடுக்காமல், மண்ணெண்ணெய் எடுத்துக் கொண்டு ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நெல்லை ஆட்சியர் பேசியவை…

இது, பொதுமக்களுக்கு சிரமம் தருவது. இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. நாம் அலுவலகத்தில் இருக்கும் ஒவ்வொரு நாளும் மனு வாங்கி, நியாயமானதாக இருந்தால் அதை தீர்த்து வைப்போம். எனவே இது போல், தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது மிகத் தவறு. அவர்களுக்கு மன அழுத்தம் இருந்தால் அதை சரி செய்ய ஏற்பாடு செய்வோம்!

ஊடகத்தினர் தான் அதை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். மற்றவருக்கு பிரச்னை ஏற்படுத்துவது தவறு. காவலர்கள் பலவிதங்களில் சோதித்துதான் உள்ளே அனுப்புகிறார்கள். ஆனால், இது போன்ற தீப்பற்றக்கூடிய பொருள்களை வேறு வழியில் உள்ளே கொண்டு வருவது நடக்கிறது.

இது போல் நடந்தால், அடுத்து குண்டர் சட்டத்தில் போடுவது குறித்து யோசிப்போம் என்று கூறினார்.

ஆனால், இது சமூகத் தளங்களில் வேறு விதமாக பரவியது. இது மக்களை மிரட்டும் தொனியில் உள்ளது என்று சிலர் கொளுத்திப் போட்டனர். மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் மிரட்டுகின்றனர் என்று சிலர் கருத்துப் பகிர்ந்தனர்.

இந்நிலையில், இந்தப் பிரச்னை குறித்து நமக்கு வாட்ஸ்அப் வழியே தகவல் அனுப்பி, கருத்து தெரிவித்துள்ள நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தயவுசெய்து நான் கூறியவற்றை தவறாக திரித்துக் கூற வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தீப்பற்றக் கூடிய பொருள்களை ஆட்சியரகத்துக்கு உள்ளே கொண்டு வர வேண்டாம் என்று நான் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது, அவர்களுக்கு மட்டுமல்லாது, உடன் இருக்கும் மற்றவர்களின் உயிருக்கும் பாதுகாப்பில்லாத சூழலை ஏற்படுத்துகிறது என்பதால்தான். தீப்பற்றக் கூடிய பொருள்களை பொது இடங்களுக்கு எடுத்து வருவதும் மற்ற பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதும் அவசியம் தடுக்கப் பட வேண்டும், இது தண்டனைக்குரிய ஒன்று என்பதை மீண்டும் பதிய வைக்கிறேன். எனவே நான் சொன்னதை நீர்த்துப் போகச் செய்து விடாதீர்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்!

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :