
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் 80அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய புள்ளிமானை தீயணைப்பு மீட்பு பணியினர் உயிருடன் மீட்டனர்.
செங்கோட்டை, மே,31: செங்கோட்டையை அடுத்துள்ள அழகப்பபுரம் குன்னக்குடி பகுதியில் டிகே.ரமணி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது.
சம்பவத்தன்று காலை அந்த வழியாக வந்த முருகன் என்பவர் கிணற்றுக்குள் ஏதோ ஒரு சத்தம் கேட்டதால் கிணற்றை எட்டி பார்த்துள்ளார். அப்போது அந்த கிணற்றில் புள்ளிமான் ஒன்று தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதனை அடுத்து முருகன் செங்கோட்டை தீயணைப்பு மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்ததின் பேரில் நிலைய அலுவலர் சிவசங்கரன் தலைமையில் மீட்பு பணி வீரர்கள் கணேசன், மாரிமுத்து, சிவக்குமார், செந்தில்குமார், இராம்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடி தண்ணீரில் தத்தளித்த புள்ளிமானை உயிருடன் மீட்டு செங்கோட்டை வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்

இதனால் அந்த பகுதியில் கூடிய பொதுமக்கள் தீயணைப்பு மீட்பு நிலைய அலுவலர் மற்றும் மீட்பு பணி வீரர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.