திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியார் கல்குவாரியில் பாறை களில் சிக்கி இருவர் பலியான நிலையில் மேலும் சிக்கியவர்களை தேடும் பணி இன்றும் நடந்து வருகிறது.
கடந்த 14ந்தேதி இரவு சுமார் 400 அடி ஆழம் கொண்ட இந்த குவாரியில் கற்களை அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, திடீரென பலத்த சத்தத்துடன் பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த காக்கைகுளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் ( 30), தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் (35), இளைய நயினார்குளத்தை சேர்ந்த செல்வம் (27), விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன் (40), நாட்டார்குளம் பகுதியை சேர்ந்த விஜய் (27), ஆயன்குளத்தை சேர்ந்த மற்றொரு முருகன் (23) ஆகிய 6 பேர் பாறைகளின் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அங்கு நின்ற 3 லாரிகள், 2 பொக்லைன் எந்திரங்களும் பாறைகளில் சிக்கி நொறுங்கின.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து கயிறு மூலம் குவாரிக்குள் இறங்கி 6 பேரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து இந்திய கடற்படை பருந்து ஹெலிகாப்டர் மீட்பு பணிக்கு வந்தது. ஆனால் மீட்பு பணியில் ஈடுபடுத்த முடியாததால் ஹெலிகாப்டர் திரும்பி சென்றது. தொடர்ந்து நாங்குநேரி, பேட்டை, நாகர்கோவில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அப்போது இடிபாடுகளில் சிக்கி லேசான காயம் அடைந்த விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன், விஜய் ஆகிய 2 பேரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு 3வது நபர் செல்வம் பத்திரமாக மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும், அந்த தொழிலாளிமருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். கல்குவாரியில் இருந்து 4வது நபராக மீட்கப்பட்ட மற்றொரு தொழிலாளியான முருகன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
நாங்குநேரி அருகே உள்ள ஆயன்குளம் பகுதியை சேர்ந்தவரான முருகன் லாரி கிளீனர் ஆவார். இதனால், கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது.
இடிபாடுகளில் சிக்கிய மற்றவர்களை மீட்பதற்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர் 30 பேர் வரவழைக்கப்பட்டு வீரர்கள் கயிறு மூலம் கல்குவாரியில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பணி இரவு வரை நீடித்தது. மேலும் இடிபாடுகளில் சிக்கிய மற்ற 2 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
கல்குவாரியில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குவாரி உரிமையாளரான சங்கர நாராயணனை ஏற்கனவே கைது செய்தனர். நேற்று கல்குவாரி மேலாளர் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த ஜெபஸ்டியானை போலீசார் கைது செய்தனர்.
மீட்புப் பணிகளை தமிழக வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் நேற்று பார்வையிட்டார். அவர் கூறும்போது, குவாரியில் பாறைகள் தொடர்ந்து சரிவதால், மீட்புப் பணியினரின் பாதுகாப்பும் முக்கியம். எனவே, நிலைமையைக் கண்காணித்து மீட்புப் பணி தொடரும் தமிழகம் முழுவதும் கல் குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும். சட்ட விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

