ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில், திடீர் திருப்பமாக, 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 12 பேர், ஆலையை உடனடியாகத் திறக்கக் கோரி மனு கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி வருபவர்களை மட்டுமல்ல, ஆதரவளித்து வருவோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இவர்கள் குழுவாகச் சென்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டி.கே. செந்தில் ராஜிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையிலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியில், தாமிர உருக்கு ஆலை நிர்வாகம் இருந்திருக்கவில்லை என்பது உறுதி செய்யப்படவில்லை. எனவே, உடனடியாக ஆலையை திறக்க உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் 2018-இல் தொடா் போராட்டத்தைத் தொடங்கினா். போராட்டத்தின் 100-ஆவது நாளான மே 22-ஆம் தேதி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் பேரணியாகச் சென்றபோது, கலவரம் ஏற்பட்டு, போலீஸாா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா்.
தாமிர உருக்கு ஆலை
சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி, தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு 2018-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.
இதையடுத்து, ஆலை நிர்வாகத்தின் தரப்பில் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்திருந்த உத்தரவை உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, கடந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று தீவிரமாக இருந்தபோது, நாடு முழுவதும் பரவலாக ஆக்சிஜன் நெருக்கடி ஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மையத்தில் ஆக்சிஜனை மட்டும் உற்பத்தி செய்வதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 27 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் பிறகு, ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்வதற்கு வேதாந்தா நிறுவனம் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.