
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளனர்
தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மெயின் அருவியை தவிர ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட மற்ற அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வரத்து கடந்த 1ஆம் தேதி சீரானது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மெயின் அருவியிலும் தண்ணீர் வரத்து சீரானதால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் நீராடி மகிழ்ந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு தென்காசி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவிகளில் ஒரே அருவி போல் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றாலத்திலும் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே போலீஸார் காவலில் நின்று பொதுமக்களை திருப்பி அனுப்பி வருகிறார்கள். கார்த்திகை மாதம் தொடங்கி ஐயப்ப சீசன் களை கட்டியுள்ளதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் ஆல்டைம் பேவரைட்டாக இருப்பது குற்றால அருவிகள்தான். அந்த வகையில் தற்போது வெள்ளப்பெருக்கால் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பது அவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பிற்பகல் முடிந்து அருவிகளில் குளிக்க அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுற்றுலா பயணிகள் ஐயப்ப பக்தர்கள் காத்திருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.