தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மற்றும் கேரளா வனப்பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்ததால் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கடுங்குளிரும் வாடைக்காற்றும் வீசி வரும் நிலையில் திடீரென சாரல் மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பகலில் சுள்ளென வெயிலடித்தாலும் ஜில்லென காற்று வீசி மக்களை வெளியே தலைகாட்ட விடாமல் முடக்கியே வைத்துள்ளது. வடகிழக்கு பருவமழை முடிந்து விட்டது என அறிவித்த பின்னரும் தென் மாவட்டங்களில் சாரல் மழையோடு தொடங்கி பெருமழை பெய்துள்ளது. குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கி டிசம்பர் 15 வரை நீடித்தது. 2 மாதங்களில் நிதானமாக பெய்ய வேண்டிய மழை சில நாட்களிலேயே கொட்டித்தீர்த்தது. டிசம்பர் மாதத்திலேயே குளிர் பனி தொடங்கி விட்டதால் மழை படிப்படியாக குறைந்து போனது. இதற்குக் காரணம் லா நினா தாக்கம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்து.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்ததால் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசியில் கனமழை காரணமாக மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக குற்றாலத்தில் ஜூன் மாதத்தில் சீசன் தொடங்கும் அக்டோபர் வரை நீடிக்கும். அவ்வப்போது பெய்யும் மழையால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று திரும்பும் வழியில் குற்றாலத்தில் குளிக்கும் அளவிற்கு தண்ணீர் வரத்து இருந்தது. அவ்வப்போது வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இன்றைய தினம் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
26ஆம் தேதி மற்றும் 27 ஆம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
இந்நிலையில் ராமநாதபுரம் , தூத்துக்குடி , நெல்லை, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.