திருநெல்வேலி மாநகராட்சி இராஜாஜி அரங்கில்மேயர் பி. எம் சரவணன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் வ. சிவகிருஷ்ணமூர்த்தி , துணை மேயர் கே. ராஜு ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாநகராட்சியில் செயல்படுத்தப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் தொடர்பாக தீ்ர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநகர திமுக கவுன்சிலர்கள் இரண்டு கோஷ்டியினராக செயல்பட்டு பெரும் கூச்சல் போட்டனர். கவுன்சிலர் ரவீந்தர் பேசுகையில், மாநகர செயலாளர் சுப்ரமணியன், பகுதி செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தினமும் மாநகராட்சியில் மேயர் அறையில் மணிக்கணக்கில் உட்கார்ந்து காண்ட்ராக்டர்களிடம் பேசுகின்றனர். எனவே அவர்களை நீண்ட நேரம் இருக்க அனுமதிக்ககூடாது என்றார்.
தி.மு.க கவுன்சிலர் ரவீந்திரனின் பேச்சுக்கு மேயரின் ஆதரவாளர்களான அவர் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களே எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால் அவையில் தி.மு.க கவுன்சிலர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ”மக்களின் நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்துப் பேசுவதற்காகவே தி.மு.க நிர்வாகிகள் எனது அறைக்கு வந்தார்கள். அதில் தவறு எதுவும் கிடையாது” என்று மேயர் பதிலளித்தார்.
ஆனாலும் தி.மு.க கவுன்சிலர்கள் பலரும் தொடர்ந்து மேயருக்கு எதிராகப் பேசியதால் குழப்பம் நீடித்தது
இதுகுறித்து பேசிய கமிஷனர், இந்த பிரச்னையில் தேவைப்பட்டால் போலீசில் புகார் செய்யப்படும் என்றார். மாநகர தி.மு.க., கோஷ்டி பூசல் இன்று மாநகராட்சி கூட்டத்திலும் எதிரொலித்தது. தி.மு.க., கவுன்சிலர்கள் சுந்தர் மற்றும் ரவீந்தருக்கிடையே மோதல் ஏற்பட்டது.பெரும் பரபரப்புக்கிடையே கூட்டம் முடிந்தது.