ஜம்மு காஷ்மீரில் தேசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவனை ஊர் பொதுமக்கள் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி ஊர்வலமாக அழைத்து சென்று பாராட்டினர்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள கட்டளை குடியிருப்பு பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் குமார் என்பவரை மகன் ஆதிமகேந்திரன்(19), இவர் தடகளப் போட்டியில் ஆர்வம் கொண்ட நிலையில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 12ம் தேதி ஜம்மு காஷ்மீரில் கேரள, பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட பல் பல்வேறு மாநிலங்கள் பங்கேற்ற தேசிய அளவிலான தடகளப்போட்டி நடைபெற்றது.
இதில் 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற நிலையில் தமிழகத்திலிருந்து மாணவர் ஆதிமகேந்திரன் கலந்து கொண்டுள்ளார். இதில் 3ஆயிரம் மீட்டர் தடகள போட்டி பிரிவில் பங்கேற்று முதல் பரிசாக தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமையை சேர்த்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமையை தேடித்தந்த மாணவன் ஆதி மகேந்திரனை ஊர் திரும்பிய நிலையில், தென்காசி மாவட்டம் கட்டளை குடியிருப்பு ஊர் மக்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் மாணவன் ஆதிமகேந்திரனுக்கு இனிப்புகள் வழங்கி மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி உற்சாக ஊர்வலமாக அழைத்துச் சென்று பாராட்டினர்.