குமரி அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி – தென்மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யும்!

மாலத்தீவு அருகே நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் புயலாக மாறும் வாய்ப்புள்ளதால், தென்மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் கடந்த 8-ந்தேதி திடீரென குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.

இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் சூறாவளி காற்றும், பலத்த மழையும் பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. குறிப்பாக காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக குமரி கடல் பகுதியில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாகும் அபாயம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை கன்னியாகுமரி மாவட்ட கடலோர கிராமங்களில் பீதியை ஏற்படுத்தியது.

இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று வரை கடலோர கிராமங்களில் வானிலை ஆய்வு மைய அறிக்கைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.

இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குமரி கடல் பகுதியில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மாலத்தீவு நோக்கி நகர்வதாக தெரிவித்தனர்.இந்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

இதன் காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவின் தென் பகுதியிலும் பலத்த மழை பெய்யுமென்று கூறப்பட்டுள்ளது. இந்த மழை இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை 3 நாட்களுக்கு பெய்யுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையின்போது கடலில் சுமார் 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும். அலைகள் சுமார் 6 மீட்டர் உயரத்திற்கு எழும்பும். இதுபற்றி மீன்வளத்துறை அதிகாரிகள் கடலோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். நேற்று முன்தினம் முதலே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டனர். இந்த எச்சரிக்கை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

குமரி கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக மாவட்டத்தின் உட்புற பகுதிகளிலும் நேற்று மாலை முதல் பலத்த காற்று வீசியது. அதோடு சாரல் மழையும் பெய்தது.