டாஸ்மாக்கை கண்டித்து தற்கொலை செய்த தினேஷ் பிளஸ்-2வில் எடுத்த மார்க் என்ன தெரியுமா?

நன்றாகப் படிக்கக் கூடிய தினேஷ், நீட் தேர்வை சிறப்பாக எழுதி டாக்டராக வேண்டும் என்பது எங்கள் விருப்பமாக இருந்தது என்று கூறும் அவரது மாமா சங்கரலிங்கம், அவனது மதிப்பெண் விவரத்தைப் பார்த்து குடும்பத்தினர் அனைவருமே மிகுந்த சோகமடைந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

நேற்று பிளஸ் டூ முடிவுகள் வெளியாயின. இதில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் குறித்த விவரங்கள் பல வெளியாயின. அதிர்ச்சிகளும் துக்கங்களும் சந்தோஷங்களும் பகிரப்பட்டாலும், பல்வேறு கனவுகளுடன் வாழ்க்கையைக் கொண்டு செல்ல நினைத்து, அண்மையில் தன் தந்தையின் குடிப்பழக்கத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நெல்லை மாவட்ட மாணவன் தினேஷ் எடுத்த மதிப்பெண்கள் அவரது குடும்பத்தாரை மட்டுமல்ல, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கே.ரெட்டியபட்டி மாடசாமியின் மகன் தினேஷ். குடிப்பழக்கத்துக்கு அடிமையான கூலித் தொழிலாளி மாடசாமி. அவரது மகன் தினேஷ் நல்லசிவன், நாமக்கல் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதி முடித்துவிட்டு, நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். தந்தையின் குடிப் பழக்கத்தால் படிக்க இயலாமல் மன உளைச்சலில் இருந்த தினேஷ், அவரை திருத்த இயலாத நிலையில் கடந்த 2-ம் தேதி நெல்லை வண்ணாரப்பேட்டை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதற்கு முன் தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில், நான் இறந்த பிறகாவது நீ குடிக்காமல் இரு என்று கூறியிருந்தான். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மாணவன் தினேஷ் மரணம், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக இளைஞர்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், மன உளைச்சலுக்கு நடுவிலும் படித்து, பிளஸ்-டூ தேர்வில் மாணவன் தினேஷ் நல்லசிவன் எடுத்துள்ள மார்க், அவரது குடும்பத்தாரை மட்டுமல்ல, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. மொத்தம் 1024 மார்க் எடுத்துள்ள தினேஷ், தமிழ்- 194,  ஆங்கிலம்-148, இயற்பியல்-186, வேதியியல்- 173, உயிரியல்-129, கணிதம் -194 என மதிப்பெண் பெற்றுள்ளார்.

நன்றாகப் படிக்கக் கூடிய தினேஷ், நீட் தேர்வை சிறப்பாக எழுதி டாக்டராக வேண்டும் என்பது எங்கள் விருப்பமாக இருந்தது என்று கூறும் அவரது மாமா சங்கரலிங்கம், அவனது மதிப்பெண் விவரத்தைப் பார்த்து குடும்பத்தினர் அனைவருமே மிகுந்த சோகமடைந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.