தாமிரபரணி நதிக்கரையில் உள்ள குரு ஸ்தலங்கள் இவை…
1. திருக்குருகூர் (ஆழ்வார் திருநகர்):-
நவதிருப்பதிகளுள் ஒன்றான இந்த ஸ்தலம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது.
இந்த ஸ்தலத்தில் பாயும் தாமிரபரணி ‘பிரம்ம தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.
நம்மாழ்வார் அவதரித்த பெருமை இந்த ஸ்தலத்திற்கு உண்டு. அவர் 11 பாசுரங்கள் பாடி மங்களா சாசனம் செய்துள்ளார்.
குருவின் அம்சமாக ஆதிநாதப் பெருமாள்- ஆதிநாதவல்லி (குருகூர்வல்லி) இங்கே அமர்ந்துள்ளனர்.
2. முறப்பநாடு:-
தாமிரபரணிக் கரையில் உள்ள நவ கைலா யங்களுள் ஒன்றான இந்த ஸ்தலம், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ளது.
இங்கே கைலாச நாதர் குருவின் அம்சமாக அமர்ந்துள்ளார். மகாபுஷ்கர புண்ணிய நாட்களில் இவ்விரு ஸ்தலங்களிலும் நீராடுவது அதிக மகிமையானது.
குரு தோஷம் நீங்க
நவக்கிரகங்களில் குருபகவானை ‘புத்திரகாரகன்’ என்று ஜோதிட சாஸ்திரம் கூறும், புத்திர உற்பத்திக்குக் காரண கர்த்தா இவரே. குருபகவானின் அனுக்கிரகம் நிரம்பப் பெற்ற இவ்விரு தலங்களிலும், தாமிரபரணியில் புனித நீராடினால் புத்திரப்பேறு கிட்டுவது நிச்சயம். குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள், இங்கே வந்து நீராடினால் மல்லிகை, முல்லை போல மணக்கும் வாழ்வு. புஷ்கர நீராடலால் புது வாழ்வு புஷ்பிக்கும். அதற்கு இப்போதே ஆயத்தமாவீர்!