- Ads -
Home தாமிரபரணி புஷ்கரம் இறை, சித்தர், தாமிரபரணி அருளை பெறுவதற்கு தாமிரபரணி புஷ்கரம் அழைக்கின்றது

இறை, சித்தர், தாமிரபரணி அருளை பெறுவதற்கு தாமிரபரணி புஷ்கரம் அழைக்கின்றது

அடியார் பெருமக்களே… நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழு சித்தர்களின் அருள் பெற்று வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும் குறிப்பாக சித்தருக்கெல்லாம் தலைமை சித்தராய் விளங்கும் அகத்தியர் பெருமானின் அருளை பூரணமாக பெற்று வருகின்றது. இதனை நாம் ஒவ்வொரு மாத ஆயில்ய பூசையின் போது உணர்ந்து வருகின்றோம். இந்த பதிவும் அகத்தியர் பெருமானின் உத்தரவினால் தான் தரப்படுகின்றது. அகத்தியர் என்றதும் நமக்கு எப்படி பல செய்திகள் ( ஆயில்யம், தலைமை சித்தர்,பாபநாசம், அகத்தியர் அருவி, கல்யாண தீர்த்தம், பஞ்செட்டி, கூடுவாஞ்சேரி, பொதிகை மலை,தமிழ், மருத்துவம், சித்தர்கள்  என பட்டியல் நீளும்) தோன்றுகின்றதோ, அதில் குறிப்பிடத்தக்க இடம் பெறுவது தாமிரபரணி ஆகும்.

இந்த தாமிரபரணி அகத்தியரால் தனித்தன்மை பெற்று, தென்னாட்டிற்கு உயிர் கொடுத்து கொண்டு வருகின்றது. இத்தகு சிறப்பு மிக்க தாமிரபரணியில் புஷ்கரம் பூசை செய்ய உள்ளார்கள். இதனை தாமிரபரணி புஷ்கரம் என்றும் கூறுவார்கள். அதென்ன புஷ்கரம்?

புஷ்கரம் என்பது ஒவ்வொரு வருடமும் ஒரு புனித நதியின் கரையில் நடைபெறும் ஆன்மிகத் திருவிழா. குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதையொட்டி  இந்த விழா நடத்தப்படுகிறது. குரு எந்த ராசிக்குச் செல்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா கொண்டாடப்படுவது மரபு.

புராணப்படி, ஒவ்வொரு புண்ணிய நதிக்கும் ஒரு ராசி உண்டு. மேஷ ராசி கங்கைக்கும்; ரிஷப ராசி நர்மதைக்கும்; மிதுன ராசி சரஸ்வதிக்கும்; கடக ராசி யமுனைக்கும்; சிம்ம ராசி கோதாவரிக்கும்; கன்னி ராசி கிருஷ்ணா நதிக்கும்; துலாம் ராசி காவிரிக்கும்; விருச்சிக ராசி தாமிரபரணிக்கும்; தனுசு ராசி சிந்து நதிக்கும்; மகர ராசி துங்கபத்ரா நதிக்கும்; கும்ப ராசி பிரம்மபுத்ரா நதிக்கும்; மீன ராசி பரணீதா நதிக்கும் உரியதாக சொல்லப்பட்டிருக்கிறது.

குருபகவான் எந்த ராசியில் பிரவேசிக்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கரம் கொண்டாடப்படும். அந்த வகையில் குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு அக்டோபர் மாதம் இடப்பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு அதிதேவதையாக விளங்கக் கூடிய தாமிரபரணி நதிக்கு 10 நாட்கள் மகா புஷ்கர விழா நடைபெற உள்ளது. தாமிரபரணி மகாபுஷ்கர விழா புரட்டாசி 25ஆம் தேதி அக்டோபர் 11 அன்று தொடங்கி ஐப்பசி 7ஆம் தேதி அக்டோபர் 24 வரை நடைபெற உள்ளது. இது 144 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறக்கூடியதாகும்.

நம் பாரத தேசத்திலுள்ள கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்ரா, துங்கபத்ரா, சிந்து, பரணீதா என்ற 12 நதிகளிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கரம் கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவையொட்டி பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல் வரை தாமிரபரணிக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறும். தாமிரபரணி ஆற்றின் இருகரைகளிலும் உள்ள 200 புஷ்கரணி படித்துறைகள் (தீர்த்தக்கட்டம்) சீர் செய்யப்பட்டு, பொதுமக்களின் தீர்த்தமாடலுக்காக ஆயத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. பாபநாசம் தொடங்கி புன்னைக்காயல் வரை தாமிரபரணி ஆறு பாய்கின்ற 127 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் தீர்த்தமாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மகா ஆரத்தி விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.இந்த விழாவில் கலந்து கொண்டு தாமிரபரணி நதியில் புனித நீராட இந்தியா முழுவதும் இருந்து 1 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புஷ்கர விழாவுக்குப் பின்னால் ஒரு புராண சம்பவம் இருக்கிறது.

துறவியர்கள் மாநாடு நடக்கிறது. 12 நாட்களும் ஆற்றில் உள்ள அனைத்து படித்துறைகளிலும் மகா ஆர்த்தி நடைபெறுகிறது. இதுமட்டுமா? மகா புஷ்கர விழாவில் ஆன்மிக சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், மகா ஆரத்தி உற்சவம், சைவ திருமுறை இசை நிகழ்ச்சிகள், சுவாமி தீர்த்தவாரி உற்சவம், சுவாமி புறப்பாடு என பற்பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
தாமிரபரணி தோற்றம் பற்றி
“திங்கள் முடிசூடும் மலை
தென்றல் விளையாடும் மலை
தங்கும் முகில் சூழும் மலை
தமிழ் முனிவர் வாழும் மலை
அங்கையற்கண் அம்மைதிரு
அருள் சுரந்து பொழிதெனப்
பொங்கருவி தூங்குமலை
பொதிய மலையென்மலையே”
என குற்றால குறவஞ்சியில் குற்றால குறத்தியிடம் பொதிகை மலை குறத்தி பொதிகை மலை பெருமையை கூறுவதாக உள்ள பாடல் இது. குற்றால மலையை திரிகூட மலை என்று கூறுவார்கள். தாமிரபரணி தோன்றும் இடத்தை ஐந்து தலை பொதிகை என்பர். தாமிரபரணி பற்றி தனியாக தொகுத்து தரும் அளவிற்கு செய்திகள் நமக்கு கிடைத்திருக்கின்றது. குருவருளால் மட்டுமே இதனை பற்றி நாம் சிந்திக்க முடியும். நதி,நீர்நிலைகள் வழிபாடு என்பது நம் முன்னோர்கள்,சித்தர்கள் வழிபாட்டில் மிக மிக முக்கியமானது. இதனை நாம் தொடர் வேண்டும் என்பதே சிறப்பு செய்தியாகும்.தினசரி வழிபாட்டில் நாம் நீர்நிலைகளை நினைத்து வழிபட வேண்டும். அன்றைய காலத்தில் நீர்நிலைகள் அருகில் தான் பல பூசைகள் நடைபெறும்.ஆனால் இன்று நீர்நிலை என்பது வெறும் எழுத்தின் மூலம் தான் சொல்ல முடிகின்றது.இருக்கின்ற நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இது நம் பொறுப்பும் கடமையும் கூட.

புஷ்கர புண்ணிய காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் நதிகளில் வாசம் செய்வதால், இந்த புண்ணிய காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் புனித நீராடிய பலன் கிடைக்கும். அன்னதானம், வஸ்திரதானம் போன்ற பல தானங்கள் செய்தால் பன்மடங்கு பலனை தந்து நம்மை மோட்சத்திற்கு போக வழி வகுக்கும். புஷ்கர புண்ணிய காலத்தில் நீராடி பிதுர்களுக்கு தர்ப்பணம் முதலிய சடங்குகள் செய்வதால் பிதுர்சாபம் நீங்கி நல்வாழ்க்கை வாழ வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது.

இறை, சித்தர், தாமிரபரணி அருளைப் பெறுவதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். அதுவும் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வு என்றால்…பெறுதற்கரிய பேறாகும்.

தாமிரபரணி புஷ்கர் உதவி தேவை. அகத்தியர் அடியவர்கள் தொடர்புக்கு 09894269986 / 7904612352. அகத்தியர் அடியவர்கள் குழுக்களாக செல்வதாக இருந்தால் கொடுத்துள்ள எண்ணில் மேலதிக விபரங்கள் பெறலாம்.

தொகுப்பு: ராகேஷ் Raakesh 

Source: https://tut-temple.blogspot.com

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version