19/10/2019 7:35 AM
உள்ளூர் செய்திகள் கல்லெறி தடியடிக்கு நடுவே செங்கோட்டையில் அமைதியாக முடிந்த விநாயகர் ஊர்வலம்!

கல்லெறி தடியடிக்கு நடுவே செங்கோட்டையில் அமைதியாக முடிந்த விநாயகர் ஊர்வலம்!

செங்கோட்டை நகரில் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அங்குள்ள 36 சிலைகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன. இதை அடுத்து தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது.

-

- Advertisment -
- Advertisement -

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சிலைகளை தங்கள் பகுதி வழியாக எடுத்துச் செல்லக் கூடாது என பள்ளிவாசலை அடுத்த பெரிய தெருவில் வசிக்கும் ஒரு தரப்பினர் கூறியதால் நேற்று இரவு வாக்குவாதம் முற்றியது. தொடர்ந்து விநாயகர் சிலை மீதும், விநாயகர் அழைப்பு ஊர்வலத்தினர் மீதும் கற்கள் வீசப் பட்டன.

இந்த மோதலில் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப் பட்டன. இதையடுத்து விநாயகர் சிலை கரைப்பதில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க செங்கோட்டை பகுதியில் இன்று 144 தடை உத்தரவு போடப்பட்டது.

செங்கோட்டை நகரில் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அங்குள்ள 36 சிலைகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன. இதை அடுத்து தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது.

இந்நிலையில் மதியம் 3 மணி அளவில் நேற்று பிரச்னை ஏற்பட்ட அதே இடத்தில், மர்ம நபர்கள் சிலர் வீடுகளுக்குள் ஒளிந்திருந்து, திடீரென ஊர்வலத்தின் மீது கல் வீசி தாக்கினர். இதனால் மீண்டும் கலவரம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கல் வீசியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இந்தச் சம்பவத்தில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், சரக டிஐஜி கபில்குமார், மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமார் ஆகியோர் விரைந்தனர். ஊர்வலத்தை அமைதியாக நடத்தி முடிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

முன்னதாக, காவல் நிலையத்தில் வைத்து ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு சில அறிவுரைகள் கொடுக்கப் பட்டன. அதன்படி, கோஷம் எதுவும் போடக் கூடாது; தள்ளாட்டம் ஆடக் கூடாது; தேவையற்ற ஆர்ப்பாட்டம் கூடாது; போக்குவரத்துக்கு இடையூறு கூடாது; இசைக்கருவிகள் டிரம்ஸ் இசைக்க தடையில்லை!தீர்மானிக்கப் பட்ட பதையில் போகத் தடை இல்லை. ஆனால் பிரச்னை ஏதாவது வந்தால் நாங்கள் சொல்லும் பாதையில் செல்ல வேண்டும்.

– இப்படி சில நிபந்தனைகள் காவல்துறையினரால் முன்வைக்கப் பட்டன. இவை எல்லாவற்றையும் ஏற்று ஊர்வலத்தை முன்னின்று நடத்தினர் வீர விநாயகர் விழா கமிட்டியினர். 144 தடை உத்தரவு போடப் பட்டிருந்ததால், எங்கும் எந்த விதமான கோஷங்களும் எழுப்பப் படவில்லை. விநாயகருக்கு ஜே கோஷம் கூட எழுப்பப் படவில்லை. வாத்தியங்களின் இசைச் சத்தம் மட்டுமே கேட்டது.

வழக்கத்தை விட அதிக அளவில் ஊர் மக்கள் விநாயகர் ஊர்வலத்தைக் காண திரண்டனர்.  பெண்கள் பலர் ஆர்வத்துடன் வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டு, பார்த்து ரசித்தனர். வழக்கத்துக்கு மாறாக காவல்துறை உயரதிகாரிகள், போலீஸார் விநாயகருக்கு முன்னும் பின்னும் அதிக அளவில் சென்றனர்.

மாலை நேரம் 6 மணி நெருங்க நெருங்க, ஊர்வலத்தின் பின்பகுதியில் வந்தவர்களை நேரம் ஆகிறது சீக்கிரம் நகர்த்துங்கள் என்று காவல்துறை அதிகாரிகள் விரைவு படுத்தினர். அதையும் ஏற்று அதிக ஆட்டம்பாட்டம் இன்றி இளைஞர்கள் கட்டுப்பட்டனர்.

பின்னர் மாலை 7 மணி அளவில் செங்கோட்டை குண்டாற்றுப் பகுதியில் கிரேன் உதவியுடன் விநாயகர் சிலைகள் எடுக்கப் பட்டு, அவை கரைக்கப் பட்டன. ஊர்வலம் பின்னர் அசம்பாவிதம் ஏதுமின்றி நடைபெற போலீஸார் அதிக அளவில் கவனம் எடுத்துக் கொண்டனர். பாதுகாப்புப் பணிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: