செங்கோட்டை தாலுகாவில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு!

பேச்சுவார்த்தை நடத்தியதில் வழக்கமான பாதையில் விநாயகர் ஊர்வலம் செல்ல இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமைதியான முறையில் ஊர்வலம் நடக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

செங்கோட்டை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டதன் எதிரொலியாக, செங்கோட்டை தாலுகாவில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சில்பா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை  முன்னிட்டு நெல்லை மாவட்டம் செங்கோட்டையில், மேலூர் பகுதியில் வீர விநாயகர் சிலை அழைப்பு ஊர்வலம் நடத்தப் பட்டது. அப்போது, ஒரு தரப்பினர் மசூதியை ஒட்டிய பொதுத் தெரு வழியாக ஊர்வலம் செல்லக கூடாது என்றனர். ஆனால்  அதற்கு ஊர்வலத்தில் வந்தவர்கள் உடன்படவில்லை.

இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அந்த நேரத்தில் விநாயகர் சிலை மீது கற்கள் வீசப்பட்டன. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவானது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், மோட்டார் சைக்கிள்கள், கடைகள், ஏ.டி.எம். மைய முன் பகுதி ஆகியவை  அடித்து நொறுக்கப்பட்டது.  இரு தரப்பினர் மோதலை அடுத்து,  போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

போலீசார் இருதரப்பினரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தியதன்பேரில், அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும், பதற்றம் நீடிப்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், செங்கோட்டை தாலுகாவில் தற்போது முதல் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நெல்லை ஆட்சியர் சில்பா ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை நடத்தியதில் வழக்கமான பாதையில் விநாயகர் ஊர்வலம் செல்ல இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அமைதியான முறையில் ஊர்வலம் நடக்க 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.