சமூக வலைத்தளங்களில் பொய்களைப் பரப்பாதீர்கள்: நெல்லை ஆட்சியர் கண்டிப்பு!

செங்கோட்டை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் அழைப்பு ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தால்  பாதிக்கப்பட்ட செங்கோட்டையில் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார். 

செங்கோட்டை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் அழைப்பு ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தால்  பாதிக்கப்பட்ட செங்கோட்டையில் அமைதி திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.

இன்று செங்கோட்டையில் நடைபெற்ற அமைதிக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ். அப்போது அவர் கூறியவை…

செங்கோட்டை தாலுகாவில் கடந்த இரண்டு நாட்கள் முன்னதாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது. அப்போது விரும்பத்தகாத சில சம்பவங்கள் நடைபெற்றன. அவை மீண்டும் பெரிதாகக் கூடாது எந்த விதமான அசம்பாவிதமும் நடக்க கூடாது என்று நேற்று 8 மணியிலிருந்து 22ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது

இந்தத் தடை உத்தரவு வெளி நபர்கள் யாரும் ஊருக்கு உள்ளே வரக்கூடாது என்பதற்காகவும் வெளியூரிலிருந்து ஐந்து பேருக்கு மேல் ஊருக்குள் வந்து கூடிப் பேசுவதோ கூட்டம் போடுவதோ, ஊர்வலம் நடத்துவதோ கூடாது என்பதற்காகவுமே இந்தப் பிரிவு போடப்பட்டுள்ளது.

இப்போது அனைத்து சமுதாய மக்களையும் கூட்டி, ஒரு கூட்டம் நடத்தினோம். அனைவரும் இங்கே சகோதரர்களாகவே நடந்து கொள்கிறார்கள். மக்கள் அனைவரும் மிகவும் ஒத்துழைப்புடன் நடந்து கொள்கிறார்கள். இந்த அமைதிக் கூட்டத்தில் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள். இத்தனை வருடங்கள் மிகவும் அமைதியாக இருந்த இடம், அந்த இடத்தில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தது அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மீண்டும் தொடராமல் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாமல் எந்த வித பிரச்னைகளும் இடம் கொடுக்காமல் இந்த இடத்தில் மீண்டும் அமைதி காப்போம் என்று உறுதிமொழி கொடுத்து இருக்கிறார்கள்.

முக்கியமாக சோஷியல் மீடியாக்களில் இருக்கும் மெசேஜ்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அனைவரும் கூறுகிறார்கள். நடக்காத விஷயங்களை நடந்தது போல் மற்ற மதத்தினரை பற்றி தவறாகப் பேசுவது அவர்களின் உணர்ச்சியை தூண்டுவது போன்ற விஷயங்களைத் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பேஸ்புக் வாட்ஸ்அப் போன்றவை மூலம் இது போன்ற விஷயங்கள் பரப்பப் படுவதை கண்டிக்கிறோம். இவை போன்ற மெசேஜ்கள் தயாரிப்பவர்கள் அவற்றை பகிர்பவர்களை நாங்கள் கண்காணிக்கிறோம். இதுபோன்ற மெசேஜ்களை தயாரிப்பது மிகவும் தவறு அவர்கள் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைவரும் இதற்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். இங்கே அமைதியைக் காத்து செங்கோட்டையில் மீண்டும் அமைதி திரும்ப அனைத்து ஒத்துழைப்புகளும் கொடுக்க வேண்டும். இதற்காக, போலீசார் கடந்த 3 நாட்களாக மிகவும் விழிப்புடன் பணியாற்றி இருக்கிறார்கள். அமைதி திரும்ப போலீஸார் உறுதுணையாக இருப்பார்கள்… என்றார் ஆட்சியர்.