தாமிபரணி என்றாலே நெல்லை மாநகர் தான். திருநெல்வேலிதான் மாவட்டத்தின் தலைநகர். தற்போது தாமிரபரணி புஷ்கர திருவிழாவிற்கு முக்கிய பங்கு வகிக்கும் இடமே திருநெல்வேலி தான். குறிப்பாக தாமிரபரணிக்கு உற்சவர் சிலை உள்ள இடம் நெல்லையப்பர் கோயில்தான்.
நெல்லையப்பர் கோயிலுக்கு தீர்த்தவாரி மண்டபம் தை பூச மண்டபம்தான். இங்கு புஷ்கர திருவிழா நடத்தாமல் மற்ற இடத்தில் நடத்துவதில் எந்தவொரு நற்பயனும் இல்லை.
2006ல் புஷ்கரம் நடந்த போது தீர்த்தமாடல் நடந்த ஒரே ஒரு இடம் நெல்லை தை பூச மண்டபம்தான். இங்கு தான் ஆந்திர யாத்திரியர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வந்து நீராடினர். இங்கு பூஜை நடந்தது. அன்னை எழுந்தருளலும் நடந்தது. அந்த இடத்தில் தான் இந்த வருட புஷ்கர விழாவிற்கு தடை என்பது மனதுக்கு நெருடல் தான்.
நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் நல்லவர்தான். அவர் இங்குள்ள வழிபாடுகளை அறியும் படி யாரும் அவரிடம் கூறவில்லை. எனவே தான் இங்கு ஏதாவது விபத்து ஏற்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தடை விதித்து இருக்கலாம். அதுவும் அவர்கள் ஆடர் போடமல் அறநிலை துறை மூலமாக தடை விதித்து இருக்கிறார்கள். விளகத்தினை அவர்களிடம் தெரிவித்தால் அவர்களே தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என என்னை போல தாமிரபரணி மீது தீவிர பற்று வைத்த அன்பர்கள் நம்புகிறார்கள்.
தைப்பூச புஷ்கர மண்டபத்துக்கு பூட்டு…பாபநாசத்தில் நீர்ச் சூழல் உள்ளது. ஆனால் ஆண்டாண்டு காலமாக அங்கு தடுப்பு கம்பி வைத்து ஸ்நானம் செய்ய விடுகிறார்களே. அதை மாவட்ட ஆட்சி தலைவர் கவனத்துக்கு யாரும் கொண்டு செல்லவில்லை எனவே நினைக்கிறேன்.
அதோடு மட்டுமல்லாமல் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர்ந்து பணி புரிந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் சுத்தம்செய்து வைத்து இருப்பதால் மிக அதிகமான பக்தர்கள் இங்கே நிற்க வாய்ப்பு உள்ளது. மற்ற இடத்தில் இதுபோன்ற வாய்ப்பே இல்லை.
மேலும் ஸ்நானம் செய்பவர்களை வரிசையில் நிறுத்தி, 25 பேர் 25 பேராக ஸ்நானம் செய்து அனுப்பி விடலாம். எனவே பாதுகாப்பும், எந்த வித பாதிப்பும் இல்லாமல் நிகழ்ச்சியை நடத்தி விடலாம்.
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோயில் திருவிழா, திருச்செந்தூர் திருவிழாவையெல்லாம் சந்தித்த நமது காவல் துறை இந்த கூட்டத்தினை கட்டுப்படுத்தாமலா போய் விடும்.
தை பூச மண்டபம் வி.ஐ.பிகள் வர பயன்படுத்தினாலும், எதிர்கரையில் மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு கம்புகள் வைத்து மறைத்து மக்கள் வரிசையாக வந்து ஸ்நானம் செய்ய பயன்படுத்தலாம்.
நதியில் மறைவு, வலை போன்றவற்றை அடைத்து வைத்து வடநாட்டு நதியை போலவே இங்கும் குளிக்க பயன்படுத்தலாம். எனவே இதில் பெரிய அளவு பிரச்சனை எதுவும் வரபோவதில்லை.
தாமிரபரணியை நேசிக்கிறவர்கள், ஆண்டாண்டு காலமாக தாமிரபரணி தீர்த்த மாடும் இந்த இடத்தில் மக்களை ஸ்நானம் செய்வதை தடை செய்ய வேண்டாம்.
உங்களுக்கு என்ன விதிகள் உண்டோ, அந்த விதியை எல்லாம் சரியாக பயன்படுத்த தை பூச மண்டபத்தில் புஷ்கரம் நடத்துபவர்களிடம் அறிவுறுத்தி திருவிழாவை செம்மையாக நடந்த ஏற்பாடு செய்யுங்கள்.
விழா சிறப்பாக நடந்து முடிந்தால் அந்த பெருமையெல்லாமே மாவட்ட ஆட்சி தலைவரை தான் சேரும், அருமையான அந்த வாய்ப்பை ஆட்சியாளர் தவற விடாமல் தாமிரபரணி மைந்தர்களுக்கு உதவ வேண்டும்.
– தாமிரபரணி கரை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு