தூத்துக்குடியில் ஆளுநர்; சிறப்பான வரவேற்பு!

தூத்துக்குடிக்கு வந்த தமிழக ஆளுநருக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்

தூத்துக்குடிக்கு வந்த தமிழக ஆளுநருக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி அளவில் நெல்லையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மாவட்ட எஸ்பி முரளி ரம்பா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் 10 மணிக்கு சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முன்பாக ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் வாங்கப்பட்டுள்ள 18 வாகனங்களின் தூய்மைப் பணியை துவக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து மாணவர்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பின்னர் மாநகராட்சி சிறப்பு தேவையுள்ள குழந்தைகள் பள்ளி மாணவர்களை சந்தித்தார், இதைத் தொடர்ந்து மாணவர்களை வகுப்பறையில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பின்னர் தமிழக அரசின் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் குழநதைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை பரிசோதித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் முன்னிலையில் தூய்மை பாரத இயக்கம் உறுதி மொழியை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து 10-30 மணி அளவில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பஸ் நிலையத்தில் இருந்த குப்பைகளை அகற்றிய அவர், அருகில் உள்ள கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக் ஒழிக்க கேட்டுக் கொண்டார்.

பின்னர் பழைய மாநகராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையத்தில் ஆய்வு மேற்க்கொண்டார்.

பின்னர் அரசு சுற்றுலா மாளிகையில் அதிகாரிகளுடன் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.