அதிரடி காட்டிய நெல்லை ஆட்சியர்; ஆர்ப்பாட்டம் நடத்த விஏஓ.,க்கள் முடிவு!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்

திருநெல்வேலி: வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் நேற்று ஒரு ஆடியோவும் தகவலும் வெளியானது. அதனை வைத்து, நெல்லை மாவட்ட ஆட்சியரை அனைவரும் பாராட்டினர். இப்படி ஒரு ஆட்சியர் இருந்தால் தான் சரியாக வரும் என்று பாராட்டு மழைகள்தான்!

மத்திய அரசின் சார்பில் கிசான் சம்மான் யோஜனா – விவசாயிகள் நலவாழ்வுத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ 6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை அண்மையில் மத்திய மோடி அரசு அறிவித்தது.

இந்நிலையில் இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளை அறிய, இதற்கான கணக்கெடுப்பு நடக்கிறது. இதற்கு கிராம நிர்வாக அதிகாரிகள் (விஏஓ.,க்கள்) கையெழுத்து, அவர்களின் பரிந்துரை தேவை.

இந்நிலையில், சில இடங்களில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியில் இல்லாததால் சம்பந்தப்பட்ட விவசாயிகள் மனுக்களை மனு நீதி நாளிலும் நேரடியாகவும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, ஆட்சியரிடமே நேரடியாக அளிக்கின்றனர்.

இது போல், வயது முதிர்ந்த ஒருவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷை சந்தித்து மனு அளித்தார். அப்போது அவர், தாம் விஏஓ., பின்னர் ஆர்.ஐ., தொடர்ந்து தாலுகா அலுவலகம் என்று அலைந்ததாகவும், 80 வயது நெருங்கிய தமக்கு இது மிகவும் கடினமாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

எனவே ஆட்சியர் ஷில்பா பிரபாகர், மிகவும் கடினமான மொழியில், உத்தரவு ஒன்றை பிறப்பிப்பது போல், ஒரு ஒலிப்பதிவை அனுப்பினார். அது, அனைத்து விஏஓ.,க்களுக்கும், தொடர்புடைய அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப் பட்டது. அது அப்படியே இணையத்திலும் பரவியது.

அந்த ஒலிப்பதிவில், நான் அடிக்கடி இன்ஸ்பெக்‌ஷன் என்று வருவேன். நான் வரும்போது, பணியிடத்தில் விஏஓ., இல்லை என்றால், அவர் உடனே சஸ்பெண்ட் செய்யப்படுவார் என மிரட்டல் தொனியில் கூறியிருந்தார். இதனை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றனர். சமூக வலைத்தளங்களிலும் இது வைரலானது.

ஆட்சியரின் ஆடியோ… பதிவு:

இந்நிலையில் இந்த ஒலிப்பதிவுக் கோப்பு கிராம நிர்வாக அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஒரு பெண் விஏஓ., பதில் ஒலிப்பதிவை பரவவிட்டுள்ளார். அதில், ஆட்சியரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், தாங்கள் இரவு வரையிலும் மனுக்கள் வாங்க வேண்டும் என்கிறார் ஆட்சியர், இப்படி, தனியார் நிறுவனத்தை விட கசக்கிப் பிழிகிறார்கள் என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், வியாழக்கிழமை இன்று பிற்பகல் 3 மணிக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் விஏஓ.,க்கள் மத்தியிலும் ஆட்சியரகத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...