நெல்லையில் பத்திரிக்கையாளர் மன்ற கட்டிடத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டார் நெல்லை ஆட்சியர்‌.

இன்று காலை காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்,

இதைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் மீறியதாக பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு ஆட்சியர் ஷில்பா பிரபாகர் உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை வட்டாட்சியர் கனகராஜ் தலைமையிலான பறக்கும் படையினர் “சீல்” வைத்தனர்.

முன்னதாக பத்திரிகையாளர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில், நெல்லை பத்திரிகையாளர் மன்றத்துக்கு சீல் வைக்கப் பட்டதற்கு,  நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலர் பாரதி தமிழன் விடுத்த அறிக்கையில்,

மக்களவைத் தேர்தல் 2019 அறிவிப்பு வெளியான நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகி உள்ளதை அனைவரும் அறிவோம். இந்த தேர்தல் நடத்தை விதிகளை சரியாக புரிந்து கொள்ளாமல் ஏதேச்சதிகாரமாக ,கருத்துரிமையை நசுக்கும் விதமாகவும் ஜனநாயக விரோதமாகவும் , திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நெல்லை பத்திரிகையாளர் மன்றம் இன்று (11-03-2019) சீல் வைக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் , நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று காரணம் சொல்லப்பட்டு இந்த சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

பொது மக்கள் , சமுக அமைப்புகள் , அரசியல் கட்சியினர் செய்தியாளர் சந்திப்பை பத்திரிகையாளர் மன்றத்தில் நடத்துவது என்பது காலங்கலமாக நடந்து வரும் ஒன்று. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஒரே காரணத்தால் செய்தியாளர் சந்திப்பு எப்படி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகும்.?நெல்லை பத்திரிகையாளர் மன்றம் அரசின் ஆளுமைக்கு உட்பட்ட அரசு அலுவலகம் அல்ல, அரசின் இடத்தில் இருப்பதால் அரசின் /தேர்தல் ஆணையத்தின் கட்டுபாட்டுக்குள் பத்திகையாளர் மன்றத்தை கொண்டு வர முயற்சி செய்வதையும் , மன்றத்திற்கு பூட்டுப் போடுவதையும் பத்திரிகை சுதந்திரத்துக்கு போடப்பட்ட வாய்ப் பூட்டாக கை விலங்காகவே கருதுகிறோம் .

அடிப்படை புரிதல் இல்லாமல் தவறான நோக்கத்துடன் நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தை முடக்கும் நெல்லை மாவட்ட , மாநகராட்சி அதிகாரிகளை , திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் – நெல்லை மாநகராட்சி ஆணையரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

உடனடியாக நெல்லை பத்திரிகையாளர் மன்றத்துக்கு போடப்பட்டுள்ள பூட்டும் சீலும் அகற்றப்பட வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.

மக்களவைத் தேர்தல் நடவடிக்கைகளில் பத்திரிகையாளர் மற்றும் பத்திரிகையாளர் அமைப்புகளின் பங்களிப்பு மகத்தானது. கருத்துரிமை பத்திரிகை சுதந்திரம் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் நெல்லை பத்திரிகையாளர் மன்ற தோழர்களுக்கு துணை நிற்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகிறது .

நெல்லை பத்திரிகையாளர் மன்றம் தொடர்ந்து இயங்கிட குரல் கொடுப்போம். பத்திரிகை சுதந்திரம் பாதுகாப்போம் – என்று குறிப்பிட்டுள்ளார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...