ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் கட்சிக்கு எங்கள் ஓட்டு இல்லை! ஒரு மணி நேரத்தில் 2000 ஸ்டிக்கர் ஒட்டி சாதனை!

0

ஹிந்து மதக் கடவுள்களையும், மதத்தையும் இழிவுபடுத்தும் கட்சிக்கு எங்கள் ஓட்டு இல்லை! – என்ற ஸ்டிக்கர்கள் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் ஒட்டப் பட்டுள்ளன. ஒரு மணி நேரத்தில் பொதுமக்களே தங்கள் வீடுகளில் 2000 ஸ்டிக்கர்கள் ஒட்டி சாதனை படைத்ததாக, இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.

இந்துக் கடவுளை அவமதிப்பவர்களுக்கு இந்துக்களின் ஓட்டு கிடையாது… என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப் பட்டுள்ளன. தமிழகத்தின் மேற்குப் பகுதி மாவட்டங்களான திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இத்தகைய ஸ்டிக்கர்கள் ஒட்டப் பட்டு வருகின்றன.

அண்மைக் காலத்தில் மூன்று முக்கிய நிகழ்வுகள், இந்துக்களின் மனதை வெகுவாகப் புண்படுத்தின. திமுக.,வைச் சேர்ந்த கவிஞர் வைரமுத்து, ஒரு நிகழ்ச்சியில் இந்துக்களின் புனித தெய்வமாகப் போற்றப் படும் ஆண்டாளை அவதூறு கிளப்பும் வகையில் பேசினார். கட்டுரை ஒன்றும் எழுதினார். அது ஒரு நாளிதழிலும் பிரசுரமானது. இது இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு இடங்களிலும் வைரமுத்து மற்றும் திமுக.,வை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன.

இந்துக்கள் புனிதத் தலமாகப் போற்றி அதிகம் சென்று வரும் சபரிமலை குறித்த பிரச்னை அடுத்து தலைதூக்கியது. கேரளத்தை ஆளும் கம்யூனிஸ அரசு, ஐயப்பன் வசிக்கும் மலைக்கு இளம் பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் காட்டிய வேகமும் அவதூறுக் கருத்துகளும், அதற்கு தமிழகத்தில் கூட்டணியில் உள்ள திமுக., உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் அவதூறாகப் பேசிய போது, மீண்டும் இந்துக்கள் கொதிப்படைந்தார்கள்.

தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல் சம்பவங்களில், இந்துக்களின் புனித தெய்வமாகப் போற்றப் படும் கிருஷ்ணன் குறித்து பேசி, திக., தலைவர் வீரமணி இழிசொற்களால் விமர்சனம் செய்த போது, மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த முறை திமுக., வீரமணியை அடக்கி வைக்கவோ, தங்களுக்கும் அவர் கருத்துக்கும் தொடர்பில்லை என்றோ விலகவில்லை. மாறாக, அவர் கூறியது நியாயமான கருத்து என்றது. இது இந்துக்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காரணம், பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளும் அதிமுக.,வினர் ஆதரவு இருப்பதாக விமர்சனத்தை திமுக., முன்வைத்த போது, இந்தச் சம்பவத்தில் திமுக., காங்கிரஸ் பிரமுகர்களுக்கே தொடர்பு இருப்பதாக தெரியவந்ததும், அதனை மறைத்து திசைதிருப்பவே, கி.வீரமணியைத் தூண்டிவிட்டு ஸ்டாலின் இத்தகைய பிரசாரத்தை செய்யச் சொன்னதாக சிலர் குற்றம் சாட்டினர்.

இப்படி எத்தனையோ இந்து விரோத சம்பவங்களை திமுக., உள்ளிட்ட கட்சிகள் நிகழ்த்தியிருந்தாலும், இந்த மூன்று சம்பவங்களை மட்டும் முக்கியமாக எடுத்துக் கொண்டு, இந்து இயக்கங்கள் சார்பில் ஒரு பிட் நோட்டீஸ் விநியோகிக்கப் பட்டது. மேலும்,  ஆண்டாள், ஐயப்பன், கிருஷ்ணர் மூன்று தெய்வங்களின் படங்களுடன்,  ஹிந்து மதக் கடவுள்களையும், மதத்தையும் இழிவுபடுத்தும் கட்சிக்கு எங்கள் ஓட்டு இல்லை! என்ற வாசகத்துடன் ஸ்டிக்கர்கள் விநியோகிக்கப் பட்டன. அவற்றை பலரும் தங்கள் வீடுகளில் ஒட்டி வைத்தனர்.

தென்காசியில் தென்காசி பாராளுமன்றத் தொகுதி என்ற பெயரில் அடிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை இன்று ஒரு மணி நேரத்தில் 2000 ஸ்டிக்கர்கள் வீடுகளில் வழங்கப்பட்டு பலரும் அதனை ஒட்டினர்.

இதனிடையே, நெல்லை மாவட்டம் தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் வரும் செங்கோட்டை நகரிலும் இந்து முன்னணியைச் சேர்ந்த முருகன் என்பவர் ஸ்டிக்கர்கள் ஒட்டியதாக, செங்கோட்டை போலீஸாரால் கைது செய்யப் பட்டார்.

தேர்தல் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பயன்படுத்தி ஓட்டு போடக் கூடாது என்று ஸ்டிக்கர் அடித்து ஒட்டுவது குற்றம் என்றும், இது மத மோதலைத் தூண்டி விடும் என்றும் போலீசாரால்  காரணம் கூறப் பட்டது.

இது இந்து இயக்கத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில்  போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருமே இந்துக்கள் எனும் நிலையில், இது தனித்தொகுதி என்பதால் இந்துக்களே போட்டியிடும் நிலையில், ஹிந்து மதக் கடவுள்களையும், மதத்தையும் இழிவுபடுத்தும் கட்சிக்கு எங்கள் ஓட்டு இல்லை! என்று குறிப்பிடுவது எப்படி வேற்று மதத்தை புண்படுத்துவது அல்லது வேற்று மதத்தினருடன் மோதலை ஏற்படுத்துவது என்பது புரியாமல் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும், இது முழுக்க திமுக., வுக்கு ஆதரவான செயல்பாடு, காரணம் இந்த துண்டு பிரசுரங்களே அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் வண்ணம் வெளியிடும் உணர்வுகள்; குறிப்பாக திமுக., என்று பெயர் குறிப்பிட்டுச் சொல்லாமல், எங்களை அவமதித்தவருக்கு எங்கள் வாக்கு இல்லை என்றுதான் சொல்லப் பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தனர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...