சமீபத்தில் திருநெல்வேலி அருகே கூந்தன்குளம் நீண்ட காலத்திற்கு பின் செல்ல பணி இருந்தது.

கூந்தன்குளத்தில் கடந்த மாதம் வீசிய சூறைக்காற்றால் உருக்குலைந்த நிலையிலிருந்து தற்போது மீண்டுள்ளது. சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் தமிழக அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக வலம் வரும் வெளிநாட்டு பறவைகள் கூந்தன்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்து தமது குஞ்சுகளுடன் மீண்டும் தாயகம் திரும்புவது வழக்கம்.

இந்த சரணாலயத்தில் உள்ள 1.32 ஏக்கர் குளத்தில் மீன்களை உண்டு தமிழ் மாதங்களில் தை அமாவாசை முதல் ஆடி அமாவாசை வரை தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன.

ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ், நைஜீரியா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்தும், இந்தியாவின் வடமாநிலங்களான இமாச்சல பிரதேசம், அசாம் பகுதிகளில் இருந்தும் பறவைகள் இங்கு வந்து கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொறித்து செல்கின்றன.

சுமார் 250 வகையான பறவைகள் ஆண்டுதோறும் இங்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. அதில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பறவைகள் கூந்தன்குளம் கிராமத்தை சுற்றிலும் உள்ள மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கிறது.

இந்த ஆண்டு செங்கல்நாரை, மஞ்சள்மூக்கு நாரை, ஆள்காட்டி குருவி, சிவப்புமூக்கு ஆள்காட்டி குருவி, கல்குருவி, மணல்புறா, வானம்பாடி ஆகியவை அதிகளவில் வலசை வந்திருந்தன.

பறவைகளின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற தட்பவெட்ப நிலை இங்கு உள்ளது. பறவைகள் வரத்து அதிகமாக இருந்தால் மழை பெய்யும் என தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டில் பறவைகள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி நாங்குநேரி, கூந்தங்குளம் சுற்றுவட்டாரங்களில் சூறைகாற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் கூந்தன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்த வேம்பு, சீமை கருவேலம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மரங்களில் பறவைகள் கட்டிய கூடுகள் உருக்குலைந்தன.

தாய்ப் பறவைகள் காற்றை எதிர்கொண்டு பறந்து உயிருக்கு போராடின. ஆனால் கூடுகளில் தங்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் ஏராளமான குஞ்சுகளுக்கு கால் மற்றும் இறகுகளில் எலும்பு முறிவு ஏற்பட்டது. குளத்துக்குள் இருந்த பறவைகளுக்கு எந்தவித பாதிப்புமில்லை.

இதையடுத்து வனத்துறையினர் மற்றும் கூந்தன்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள இளைஞர்களும் உயிருக்கு போராடிய குஞ்சுகளை மீட்டனர். பலத்த காயமடைந்த பத்துக்கும் மேற்பட்ட பறவைகளுக்கு திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியில் இரும்புத் தகடுகள் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து காயமடைந்த குஞ்சுகள் அனைத்தும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருகின்றன.

காயமடைந்த குஞ்சுகளை மீட்டு சிறப்பு கூண்டுகள் அமைத்து பராமரித்து வருகின்றனர். இந்த பறவைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தினமும் 60 கிலோ மீனை உணவாக கொடுக்கப்படுகிறது மேலும் தினமும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு மாதங்கள் பராமரித்தால் மற்றும் பறவைகளுடன் சேர்ந்து பறந்துவிடும்.

மஞ்சள் மூக்கு நாரை வகைகள் மட்டும் ஊருக்குள் இருக்கும் பெரிய மரங்களில் கூடுகட்டி வசிக்கின்றன. முன்னர் சுமார் மூன்று ஆயிரம் கூடுகள் கட்டி இருந்தன. தற்போது சூறைக்காற்றால் பாதியாக குறைந்துவிட்டது. ஓரிரு மாதங்களில் அவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்   (திமுக., செய்தித் தொடர்பாளர்)

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...