Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் ஆடிக் கிருத்திகை, ஆடிப் பெருக்கு ‘ஹிந்து’ பண்டிகைகள்: தமிழகம் முழுதும் முக்கியக் கோயில்களில் தரிசனத்துக்கு தடை!

ஆடிக் கிருத்திகை, ஆடிப் பெருக்கு ‘ஹிந்து’ பண்டிகைகள்: தமிழகம் முழுதும் முக்கியக் கோயில்களில் தரிசனத்துக்கு தடை!

pudukkottai temple
pudukkottai temple

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணிய சுவாமி, திருவப்பூர் முத்துமாரியம்மன், புதுக்கோட்டை டவுன் சாந்தநாதர் உடனாய வேதநாயகி அம்பாள் கோயில், கொன்னையூர் முத்துமாரியம்மன், நார்த்தாமலை முத்துமாரியம்மன், பெரம்பூர் வீரம்மாகாளி, இளஞ்சாவூர் முத்துமாரியம்மன் ஆகிய கோயில்களிலும் வரும் 3-ஆம் தேதி வரை தரிசனம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கவிதாராமு அறிவித்துள்ளார்.

அதேசமயம், திருக்கோயில்களில் அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொண்டு ஆகம விதிகளின்படி கால பூஜைகள் செய்ய அனுமதிக்கப்படுகிறது எனவும், கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..

சென்னை, ஆடி கிருத்திகை, ஆடிப் பெருக்கு விழா வெகு விமரிசையாக நடைபெறும் கோயில்ககளில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.1) முதல் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 3) வரை தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பிரதான கோயில்களில் ஆடி கிருத்திகை தரிசனம், ஆடி பெருக்கு கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கம் தொடா்பாக முடிவெடுக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியா்கள், காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில குறிப்பிட்ட பகுதிகளில் அதிகளவு கூட்டம் சேருவது தொடா்ந்து காணப்பட்டால் அந்தப் பகுதிகளை மூடும் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா்கள், மாநகராட்சி ஆணையா்கள், காவல் துறையினா் மேற்கொள்ள முதல்வா் அனுமதி வழங்கினாா். இது தொடா்பான அவரது அறிவிப்பில், பொதுமக்கள் நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுக்கலாம் என முதல்வா் தெரிவித்திருந்தாா்.

இதன் தொடா்ச்சியாக முதல் கட்டமாக சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் 9 இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றில் கடைகள் இயங்கத் தடை விதிக்கப்பட்டது.

ஆடி கிருத்திகை-ஆடிப் பெருக்கு: தமிழகத்தின் பிரதான முருகன் கோயில்களில் ஒவ்வோா் ஆண்டும் ஆடி கிருத்திகை, ஆடிப் பெருக்கு ஆகியன வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். பக்தா்களும் அதிகளவு திரண்டு சுவாமி தரிசனம் செய்வா். கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக இந்த ஆண்டு ஆடி கிருத்திகையையொட்டி, மாநிலத்தில் முருகன் கோயில்கள் உள்பட முக்கிய கோயில்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட கோயில்கள் அமைந்துள்ள மாவட்டங்களைச் சோ்ந்த ஆட்சியா்கள் பிறப்பித்துள்ளனா்.

திருச்சி ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருவானைக்காவல், சமயபுரம் உள்பட 5 கோயில்களிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகா் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களிலும், பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிா்சோலை முருகன் கோயில்களிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆடி கிருத்திகை (ஆக.2) வரும் திங்கள்கிழமையும், ஆடிப் பெருக்கு (ஆக.3) தினம் வரும் செவ்வாய்க்கிழமையும் வருகின்றன. பக்தா்களின் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (ஆக.1) முதல் செவ்வாய்க்கிழமை (ஆக.3) வரை கோயில்களில் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

திருச்சி காவிரி கரையோரப் பகுதிகளில் பக்தா்கள் புனித நீராடவும் தடைவிதிக்கப் பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோயிலிலும் பக்தா்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளாா்.

  • டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version