தஞ்சாவூரில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஒரே இடத்தில் நடைபெற்ற 24 கருட சேவையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், தஞ்சை ராமனுஜ தர்சன சபா ஆகியவை இணைந்து 24 கருட சேவை விழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றன. இந்தாண்டு 88வது ஆண்டு கருடசேவை இன்று நடந்தது.
தஞ்சாவூர் பகுதியில் மொத்தம் 24 பெருமாள் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் உள்ள உற்சவர்கள் ஆண்டுதோறும் வைகாசி திருவோண நட்சத்திரத்தில், கருட வாகனத்தில் ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படி வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோயிலில் 88-வது ஆண்டு கருட சேவை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கருட சேவையை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு தஞ்சாவூர் நீலமேகப்பெருமாள் கோயில், மணிகுன்றாப் பெருமாள் கோயில், மேல சிங்கப்பெருமாள் கோயில், வேளூர் வரதராஜர் கோயில், கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில், கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், வரதராஜபெருமாள் கோயில், நவநீதகிருஷ்ணன் கோயில், மேலவாசல் ரெங்கநாதர் கோயில், விஜய ராமர் கோயில், கோவிந்தராஜ பெருமாள் கோயில், ஜனார்த்தன பெருமாள் கோயில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், கீழ கோதண்டராமர் கோயில், கீழ சிங்கபெருமாள்கோயில், பூலோக கிருஷ்ணர் கோயில், படித்துறை வெங்கடேசப்பெருமாள் கோயில், பஜார் ராமர் கோயில் உள்ளிட்ட 24 கோயில்களிலிருந்து கருடவாகனத்தில் பெருமாள் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு, வரிசையாக கொடிமரத்து மூலை, கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக பொதுமக்களுக்கு அருள்பாலித்தனர்.
அப்போது பக்தர்கள் பெருமாளுக்கு புஷ்பம் தேங்காய், பழம் வழங்கி அர்ச்சனை செய்து வழிபட்டனர். 24 பெருமாள் சுவாமியையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்ய வெளியூர் மற்றும் உள்ளூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் நான்கு ராஜ வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கருடசேவையின் போது ஆண்கள்,பெண்கள் கோலாட்டம் ஆடியும், மங்களாசாசனம் படியும் வழிப்பட்டனர். இதில், நான்கு வீதிகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, நாளை திங்கட்கிழமை நவநீத கிருஷ்ணன் சேவை விழா அல்லது வெண்ணெய்த்தாழி மகோற்சவ விழா நடக்கிறது. காலை 6:00 மணிக்கு 15 பெருமாள்களும் நவநீத சேவைக்காக புறப்பட்டு காலை 7:30 மணிக்கு கொடிமரத்து மூலைக்கு, அங்கிருந்து கீழராஜவீதி, வடக்குராஜ வீதி வழியாக மீண்டும் கொடிமரத்து மூலையை அடைந்து அவரவர் கோவில்களுக்கு சென்றவடைவர். நிறைவு நாளான 21ம் தேதி விடையாற்றி திருவிழா நடக்கிறது. பெருமாள் நகர்வலத்தின் போது பரிகாரமாக நீராட்டு விழா முதலிய சிறப்பு வழிபாடுகள் வெண்ணாற்றங்கரை விண்ணகரங்களில் மேற்கொள்ளப்படுகிறது. காலை 9:30 மணிக்கு மேலசிங்கர் கோவிலில் தொடங்கும் திருமஞ்சனம், தளிகை, அலங்காரம், தீபாரதனை மதியம் 12 மணி வரை நடக்கிறது. இத்துடன் பன்னிரு கருடசேவை பெருவிழா நிறைவடைகிறது.