
தஞ்சாவூர் அருகே அனந்தமங்கலம் பகுதியில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் இன்று மரத்தில் மோதி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள புளியம்பட்டை பகுதியைச் சேர்ந்தவர் அவினாஷ் (26), செட்டிமண்டபம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (23). இவர்கள் இருவரும் உறவினர் வீட்டு திருமணத்திற்காக நேற்று இரவு கொத்துகோவில் திருமண மண்டபத்திற்கு சென்றுவிட்டு அதிகாலை இருசக்கர வாகனத்தில் இருவரும் வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், அனந்தமங்கலம் பகுதியில் அதிவேகமாக சென்றபோது வளைவில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோரம் இருந்த தேக்கு மரத்தில் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காலை அவ்வழியாக சென்றவர்கள் இளைஞர் உயிரிழந்து கிடப்பதை கண்டு திருநீலக்குடி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் இரண்டு இளைஞர்களின் சடங்களையும் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளைஞர்கள் இருவரின் உயிரிழப்பு அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.