கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆறுமுகசாமி அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா, அரோகரா என சுவாமி தரிசனம்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிக்கு கந்த சஷ்டி விழா கடந்த 02-ஆம் தேதி சிறப்பான முறையில் தொடங்கியது.
அதை முன்னிட்டு கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விசேஷ பூஜைகள் மற்றும் பல்வேறு வகையான அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து காட்சியளித்தார்.
தொடர்ந்து விழாவின் ஆறாம் நாளான இன்று காலையில் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று, மஹா தீபாரதனை காட்டப்பட்டது.
பின்னர் மாலையில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றது.
இதற்காக உற்சவர் சுவாமி ஆறுமுகங்களை கொண்டு கோவிலின் உள் பிரகாரம் பாதையில் வலம் வந்து சூரபத்ம அசுரனை வேல் கொண்டு அழிக்கும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி தத்ரூமான முறையில் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் சுவாமி மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் நடைபெற்ற கந்த சஷ்டி சூரசம்கார விழாவில் காண கரூர் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அரோகரா, அரோகரா என கோஷங்களை எழுப்பியவாறு முருகப்பெருமானை மனம் உருகி தரிசனம் சென்றனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
இந்த சிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.