அடுத்த அதிர்ச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் தீ விபத்து; ஆட்சியாளருக்கு ஆபத்து!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், அடுத்தடுத்து நடக்கும் அசம்பாவிதங்களால் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சங்கடங்கள் ஏற்படக் கூடும் என்றும், அதற்கான துர் நிமித்தங்கள்தான் இப்படி தீப்பற்றுதல் எல்லாம் என்றூம் கூறுகின்றனர் பக்தர்கள்.

திருச்சி: திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வசந்த மண்டபத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பெரும் பரபரபப்பு ஏற்பட்டது.  ஆஸ்தான மண்டபத்தில் கட்டியிருந்த வெட்டி வேர் தீப் பந்தம் பட்டு எரிந்துள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில், நம்பெருமாள் வசந்த மண்டபம் வழியாக ஆஸ்தான மண்டபத்துக்கு எழுந்தருளி, அங்கே பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.  வசந்த மண்டபத்துக்கும் ஆஸ்தான மண்டபத்துக்கும் இடையே 10 அடி நீளத்திலும், 6 அடி அகலத்திலும் பந்தல் அமைத்து, வெட்டிவேர்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கும்.

இன்று மாலை 6 மணிக்கு வழக்கம் போல் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து, ஆஸ்தான மண்டபத்துக்கு புறப்பாடு கண்டருளினார்.  அப்போது பெருமாளுக்கு முன்புறம் தீவட்டி ஏந்தி சென்று கொண்டிருந்தனர் தீவார்த்திகள். அப்போது திடீரென தீவட்டி நெருப்பு, பந்தலில் கட்டப் பட்டிருந்த  வெட்டி வேர் மீது பட்டு, திடீரென தீ விபத்து ஏற்பட்டது., இதில், வெட்டி வேர் பந்தல் எரிந்து நாசம் அடைந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த கோவில் பணியாளர்களும், பட்டாச்சார்யர்களும் தீயை அணைத்து விட்டு, கோவில் நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயிலில் ஏதாவது அசம்பாவிதங்கள் தற்போது நடந்து வருவதால், பக்தர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இதை அடுத்து, இது போன்ற  அசம்பாவிதம் நேராமல் நிவர்த்தி ஆகட்டும் என்று, பரிகார பூஜைகள் செய்தனர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், அடுத்தடுத்து நடக்கும் அசம்பாவிதங்களால் மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சங்கடங்கள் ஏற்படக் கூடும் என்றும், அதற்கான துர் நிமித்தங்கள்தான் இப்படி தீப்பற்றுதல் எல்லாம் என்றூம் கூறுகின்றனர் பக்தர்கள்.

முன்னர் நம்பெருமாள் சென்ற தோளுக்கினியானில், திடீரென தீப்பந்தத்தில் இருந்து தீக் கங்குகள் பட்டு, பெருமாளின் அலங்கார ஆடையில் பட்டது. அதை அடுத்து அப்போது ஜெயலலிதா உடல் நலக் குறைவால் மருத்துவமனைக்குச் சென்றார். அது, ஆட்சியாளருக்கு நேரும் ஆபத்தைக் காட்டிக் கொடுப்பது போல் அப்போது சொல்லப் பட்டது.