தஞ்சாவூர்: சர்காருக்கு பதிலாக பில்லா பாண்டியை திரையிடுகிறது ராணி பாரடைஸ் திரையரங்கம்!
தஞ்சையில் சர்கார் திரைப்படத்தின் முதல் 2 நாள் காட்சிகளை விஜய் ரசிகர் மன்றத்தினரிடமே ஒப்படைக்குமாறு வினியோகஸ்தர்கள் வற்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ள ராணி பாரடைஸ் திரையரங்க உரிமையாளர், தங்கள் திரையரங்கில் ரசிகர் காட்சி முறை பின்பற்றப் படுவதில்லை என்பதால், அதற்கு பதிலாக பில்லா பாண்டி படத்தை திரையிடுவதாகக் கூறியுள்ளார்.
ராணி பாரடைஸ் திரையரங்களில் விஜய், அஜித் உள்ளிட்ட பிரபல நடிகர்களின் படங்கள் திரையிடப் படுவது வழக்கம்தான். அந்த வகையில் இன்று சர்கார் படமும் வெளியாக இருந்தது. ஆனால், தஞ்சை மாவட்ட வினியோகஸ்தர்கள் மினிமம் கியாரண்டி அடிப்படையில், முதல் 2 நாள் காட்சிகளை விஜய் ரசிகர்களிடம் ஒப்படைக்குமாறு வற்புறுத்தினராம்.
இது குறித்துக் கூறியுள்ள திரையரங்க உரிமையாளர் வெற்றிவேல், எங்கள் திரையரங்கில் எப்போதும் ரசிகர் காட்சி என்ற முறை பின்பற்றப்படுவதில்லை என மறுத்தோம். எனவே சர்கார் திரைப்படத்தை தரவில்லை என்றார்.