மேக்கேதாட்டு விவகாரத்துக்காக… திருச்சியில் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்!

திருச்சி: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கான மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்யக்கோரி திமுக., கூட்டணிக் கட்சித் தலைவர்கள், கூட்டணியில் இல்லாத தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெறுகிறது.

உழவர் சந்தை திடலில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களான திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ். திருநாவுக்கரசர், கம்யூனிஸ்ட் தலைவர்கள் கே. பாலகிருஷ்ணன், இரா. முத்தரசன், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் கே.எம். காதர் மொய்தீன், பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்களான மதிமுக., தலைவர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.