spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகச்சேரி அனுபவங்கள்

கச்சேரி அனுபவங்கள்

- Advertisement -

பாடாய்ப் படுத்திய வான் மழை சற்றே ஓய்ந்து பாட்டால் படுத்தும் இசை மழை சென்னையைக் கலக்கப் போகும் டிசம்பர் சீசன் வந்துவிட்டது. மார்கழி மகோத்ஸவம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இறைவனுக்கு உகந்த மாதமாயிற்றே! அவன் நினைவால் அவன் புகழ்பாடி உய்வதற்கு உகந்த மாதமும் கூட!

படுத்தும் இசை என்று குறிப்பிட ஒரு காரணமும் உண்டு. திரைத்துறையில் பாட்டா மெட்டா என்று பட்டி மன்றம் நடந்த காலம் போய், சவுண்ட் எபட்டுக்கு ஏற்ற ஒற்றை வார்த்தைகளால் பாடல்கள் வெளிவரும் முன்னேற்றம் கண்டுள்ளது இப்போது! இசைத்துறையிலும் இப்படியோர் புதுமை ஏற்பட்டு வருகிறது… மெல்ல மெல்ல… நாளை எப்படியோ?
தாளத்திற்கு ஏற்ப குரல் வளத்திற்கு ஏற்ப, பாடல்களைப் பதம் பிரித்து அவர் பாட்டுக்குப் பாடும் போக்கை சிலர் கையாண்டு வருகின்றனர். விவரம் அறிந்த பழுத்த இசை ரசிகர்கள், கொஞ்சம் வெளிப்படையாகவே மனம் நொந்து இவற்றை என்னிடம் சொன்னதுண்டு.

இசைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் அதற்கு அடித்தளமாய் அமைந்திடுக்கும் பாடல் வரிகளுக்கும் (கீர்த்தனைகளுக்கும்) முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக பாடப்படும் பாடலின் பொருள் அறிந்து அனுபவித்துப் பாடினால், கேட்பவர்களையும் ஆனந்தத்தில் திளைக்க வைக்கலாமே!

ஒரு மார்கழி உத்ஸவத்தில்… சகோதரிகள் இருவர் பாடிக்கொண்டிருந்தனர். அருமையான சாரீரம். மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். மார்கழிக்கே உரிய திருப்பாவை பாசுரம். “மாலே மணிவண்ணா” பாடினார்கள். ரசித்துக் கேட்டுக்கொண்டே வந்தபோது, ஒரு இடத்தில் சற்றே துணுக்குற வைத்தது-அந்த உச்சரிப்பு… பாடலில் “கோல விளக்கே! கொடியே! விதானமே! ஆலின் இலையாய்…” என்னுமிடத்தில் தாளத்தின் தன்மைக்கேற்ப, தட்டித்திருப்ப வேண்டுமாம்! இடைவெளியின்றி அவசரமாய் “கொடிய விதானமே!” என்று உச்சரிக்க ‘சுருக்’ என்றது. ‘ஏ!’ என்ற விளி வேற்றுமைதானே அடுக்கடுக்காக வரும் அச்சொற்றொடரின் சிறப்பு?! அதையா சிதைத்து அர்த்தம் அனர்த்தமாகப் போகும்படி செய்ய வேண்டும்?

நிறுத்திப் பாடவேண்டியதை சேர்த்துப் பாடியதால் எழுந்த அனர்த்தம் போல், சேர்த்துப் பாடவேண்டியதை நிறுத்திப் பாடி சிலர் புதுப்புது அர்த்தங்களைக் கண்டுபிடித்துக் கொடுப்பார்கள். ஒரு சினிமா பாடல் காதில் விழுகிறது… ‘பார்வதி பரமேஸ்வரெள’ என்பது, ‘பார்வதீப ரமேஸ்வரெள’ என்று!
நவராத்திரி கொலுவின் போது, ஒருநாள்… பக்கத்துவீட்டில் ஒரு சிறுமி பாடினாள். இப்போதுதான் சங்கீதம் கற்றுக்கொள்கிறாளாம். எம்.எஸ்ஸின் கேசட்டுக்களைப் போட்டுக் கேட்டு, அதேபோல் பாட முயற்சித்து வருகிறாளாம். வாழ்த்தி உற்சாகமூட்டினேன். ‘கண்டதுண்டோ கண்ணன் போல்-சகியே’ பாடினாள். ராகத்துக்கு ஏற்ப, ‘போலப் போலப் போல…’ என்று வரும் இடத்தில், ‘போ’வுக்கு அழுத்தம் கொடுத்து, ‘லபோ லபோ’ என்று பாட…. கேட்கக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

ஊத்துக்காடு மகாகவியின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. புரந்தரதாசரின் கீர்த்தனங்களும்தான்! கிருஷ்ண பக்தியை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துபவை அவை! ‘ஜகதோத்தாரண அடிசிதள யசோதா’ வை யாரேனும் பாடினால், எந்த வேலை என்றாலும் கேட்டுவிட்டுத்தான் மறுவேலை! ஆனால் பலரும் ‘அடிசிதளசோதா’ எனப் பாடும்போது வருத்தமாக இருக்கும். பின்னே… ‘சோதா சோதா’ என்றால் எப்படி ஜீரணிக்க? எதற்கெடுத்தாலும் ‘யா’ ‘யா’ எனப் பிளந்து கட்டுபவர்கள், யசோதாவிலுள்ள ‘ய’வை மட்டும் மறப்பது ஏன்? அது ஒரு ஸ்டைலா?

பெரிய பாடகர் ஒருவர். ஒரு நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க அவரை அழைத்திருந்தார்கள். நிகழ்ச்சியில் ‘டைப்’ செய்யப்பட்ட ஒரு தாளைக் கொடுத்து பாடச் சொன்னார்கள். பாடிய போது, அதிர்ச்சியில் உறைந்தேன். பாடியது புரியவில்லை. ‘உறிந்து நீ எழுந்து நில்’ என்று பாடினால் என்ன அர்த்தம் எடுத்துக் கொள்வது? அவர் பாடி முடித்தபின் அந்தத் தாளை வாங்கிப் பார்த்தால்… இன்னும் அதிர்ச்சி! ‘டைப்ரைட்டர் மிஷினில்’ தமிழில் டைப் செய்யும்போது, ‘ஹ’ என்ற எழுத்தை அடிக்க, ‘உ’ அடித்து, அடுத்து ‘ற’ அடிக்க வேண்டும். தாளில் அப்படித்தான் ‘டைப்’ செய்யப்பட்டிருந்தது….
பொருள் தெரிந்து பாட வேண்டும் என்று எல்லோருமே சொல்கிறார்கள். சரிதான்! தியாகராஜ ஸ்வாமிகள் ‘தெலிஸி ராம சிந்தநதோ’ கீர்த்தனத்தில், எப்படிப் பொருள் விளங்கிக் ‘கொள்வது’ என்று பாடியது நமக்கு நினைவுக்கு வருகிறது. ‘ராம’ என்ற சொல்லுக்கு, பெண் என்றும் ஒரு பொருள். இப்படிப் பொருள் கொள்வோர், காமத்தில் உழன்று, அவற்றோடு போர் புரிவராம்! அர்க்க என்பதற்கு, எருக்கஞ்செடி, சூரியன்… இப்படிப் பல அர்த்தங்கள். சூரியன் என்ற பொருள் உணர்வோர், மன இருள் நீங்கப் பெறுவர். ‘அஜ’ என்ற சொல்லுக்கு பிரம்மா, ஆடு என இருள் பொருள்கள். பிரம்மா என்ற பொருள் உணர்ந்தால் வெற்றி கிட்டும்…

இது, இரண்டில் எந்தப் பொருளை உணர்ந்தால் என்ன பலன் ஏற்படும் என தியாகராஜ சுவாமிகள் சொன்னது. இதுபோல் அர்த்தம் புரியாமல் சிலர் எப்படி சொற்களைப் பிரித்து பொருள் எடுத்துக் கொள்கிறார்கள் என்று சம்ஸ்க்ருதம் படித்த ஒரு பெரியவர் சிலவற்றை என்னிடம் பகர்ந்தார். கேட்டபின் தகர்ந்தது உள்ளம்.

காஞ்சித்தலத்தில் கோயில் கொண்டுள்ள ஏகாம்ரேச்வரரின் மேல் முத்துஸ்வாமி தீட்சிதர் இயற்றிய பைரவி ராக க்ருதி – ‘சிந்தய மாகந்த மூலகந்தம் சேத ஸோமாஸ்கந்தம்…’ என்பது. இதன் பொருள் அறியாமல் பலரும், ‘சிந்தயமாம் கந்தமூல கந்தம்’ என்று பாடுகிறார்கள். ‘மாம்’ என்றால் ‘என்னை’ என்று பொருள். ‘சிந்தயமாம்’ என்றால், ‘என்னை நினை’ என்றாகிவிடும். தீட்சிதர் பஞ்ச லிங்கங்களைப் பாடியதில், காஞ்சித்தலத்தில் ஒரு மாமரத்தடியில் உள்ள ‘ம்ருத்’ லிங்கத்தைத் துதித்துப் பாடிய கீர்த்தனம் இது. எனவே, ‘சிந்தய மாகந்த மூலம் (மாமரத்தடியிலுள்ள) என்பதே சரியாம்!
பல கீர்த்தனங்களில் சம்ஸ்க்ருத பதங்களும் கலந்திருக்கும். அவற்றை பதம் பிரித்துப் பாடும்போது எச்சரிக்கை உணர்வு தேவைப்படுகிறது.

கரஹரப்ரியா ராக, ‘ஸக்கநி ராஜ மார்க்கமு’ பாடும்போது சிலர் ‘ராஜா மார்க்கமு’ என, ஜ வை நெடிலாக இழுத்துப் பாடுகிறார்கள். ராஜ மார்க்கம் – ராஜ வீதி. மற்றதன் பொருள் – அரசனின் பாதை! ‘ராம நீ ஸமான மெவரோ’ என்று பாடுவதற்கு பதில், ஸ்டைலாக ‘ரமணீ ஸமானமெவரோ’ என்று பாடுகிறார்கள். ரமணி – என்றால் அழகிய பெண் என்ற பொருளல்லவா?
தமிழ்ப் பாடல்கள் என்றால் நமக்குப் பொருள் புரிகிறது… கேட்டு ஆனந்திக்கிறோம். அதுபோல் சம்ஸ்க்ருத, தெலுங்கு கீர்த்தனங்களைப் பாடும்போது, இயன்றால் அந்தப் பாடல் விளக்கும் பாவத்தைச் சொல்லி, ரசிகர்களை பாட்டோடு ஒன்ற வைக்க முயலலாம். அதற்கு கீர்த்தனங்களின் பொருள் தெரிவது மட்டுமல்லாது, உச்சரிப்பும் நேர்த்தியாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

எப்போது பார்த்தாலும் பகவானையே மனசால் நினைத்துக் கொண்டு, அவன் திருவடிகளில் சரண் புகுந்து பிரார்த்தித்தும் அவனுடைய அருள் கிடைக்காததால், உனக்கு யார் இப்படி பொருத்தமில்லாத பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள்? உனக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்கள் அவ்வளவு பொருத்தமாக இல்லையே!- என மனத்தில் அங்கலாய்த்து ஒரு கீர்த்தனத்தில் தியாகராஜ ஸ்வாமி பகவானைக் கேட்கிறார்.

அடாணா ராகத்தில் அமைந்த அருமையான கீர்த்தனை. ‘இலலோ ப்ரணதார்த்திஹர’ என்ற இந்த கீர்த்தனையைப் பாடும்போது, தியாகராஜ ஸ்வாமியின் இந்த உளப்பாங்கு வெளித்தெரிய குழைந்து பாடினால் கேட்போரும் அதில் லயித்து விடுவர். ‘ப்ரணதார்த்திஹரன்’ என்றால், ‘வணங்குபவர் கஷ்டத்தைப் போக்குபவன்’ என்று பொருள். சங்கரன் என்றால் நலம் புரிபவன். இப்படிப் பெயர்களை வைத்துக் கொண்டு எனக்கு ஏன் கருணை காட்டவில்லை என்பது தியாகராஜ ஸ்வாமியின் ஆதங்கம்.

ப்ரணதார்த்திஹர என்ற பெயர் அவரவர் போற்றும் எல்லா தெய்வங்களுக்கும் உரிய பெயர்தான்! மகான் ஸ்ரீராமாநுஜர் தமது கத்யத்ரயத்தில் இந்தப் பெயரை நாராயணனுக்குச் சூட்டி அழகு பார்க்கிறார். ஹர – என்றால் அற்றுப் போதல், நீக்குதல்… இப்படிப் பல பொருள்கள். விநாயகர் அருள் பெறும் சங்கட ஹர சதுர்த்தியை பலரும் சங்கட சதுர்த்தி என்று அவசரமாகச் சொல்கிறார்கள். சங்கடங்களை நீக்கும் சதுர்த்தியா, சங்கட சதுர்த்தியா எனப் பொருள் உணர்ந்தால், அவர்கள் இதைத் திருத்திக் கொள்வர்.

‘ஆர்த்தி’ என்றால் ‘கஷ்டம்’ என்ற பொருள். இன்று பெரும்பாலும் பொருள் தெரிகிறதோ இல்லையோ, சம்ஸ்க்ருதப் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டுவதில் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படித்தான் ஆர்த்தி என்பதும்! ‘ஆர்த்தி! ஆர்த்தி!’ என்று அழைக்க, ‘கஷ்டம்! கஷ்டம்!’ என சொல்லாமல் சொல்கிறது உள்ளம்.

பெயர் சூட்டல் – என்றதும் பெரியாழ்வார் நினைவுக்கு வருகிறார். ஒரு பாசுரம்….
நம்பிபிம்பி என்று நாட்டு மானிடப் பேரிட்டு அழைத்தக்கால்
நம்பியும் பிம்பியும் நாலுநாளில் அமுங்கிப்போம்
செம்பெருந் தாமரைக் கண்ணன் பேரிட்டு அழைத்தக்கால்
நம்பிகாள் நாரணன் தன் அன்னை நரகம் புகாள்!

இந்தப் பாசுரத்தில், நம்பி, பிம்பி என்று பேரிடல் தவறு என்கிறார் பெரியாழ்வார்.

“ஆனால் அழகிய நம்பி, வடிவுடைய நம்பி … இப்படி நம்பி என்று பெருமாள் பெயரும் உண்டே… அப்படி இருக்க, இறைவன் பெயரைச் சூட்டுங்கள் என்று கடைசி வரியில் சொல்லும் ஆழ்வார், முதல் வரியில் நம்பி என்று பெயரிடாதீர் என்று சொன்னால்… முரண்பாடாக இருக்கிறதே!” – இப்படி ஒரு கேள்வியை ஒரு பெரியவர் கேட்டார். அவர் பணிஓய்வு பெற்ற பேராசிரியர்.

உண்மைதான்! சீனிவாசனை – சீனு, சீனி, சீச்சு… நாராயணனை-நாணு, வெங்கடேசனை-வெங்கி,வெங்கு, வெங்கட், டேசு…. கிருஷ்ணனை-கிச்சா, கிச்சு, கிட்டா… இன்னும் விக்னேஷ், விக்கி, மகேஷ், சுரேஷ்… இப்படி ‘ஷ்’ ‘ஸ்’ வகையறா பெயர்கள்…. முழுமுதற்கடவுள் பெயர் சூட்டியும் முழுதாய்க் கூப்பிடாமல், அரைகுறைக் கொலை செய்து அழைத்தால் என்ன புண்ணியம்? அவற்றுக்கு என்ன பொருள்? ஆழ்வார் அங்கலாய்ப்பு சரிதான் என்றே தோன்றுகிறது.

– செங்கோட்டை ஸ்ரீராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe