spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeலைஃப் ஸ்டைல்காயக சிகாமணி - ஹரிகதா சக்ரவர்த்தி - முத்தையா பாகவதர்!

காயக சிகாமணி – ஹரிகதா சக்ரவர்த்தி – முத்தையா பாகவதர்!

- Advertisement -

ஹரிகதா சக்கரவர்த்தி’ என்று புகழ்பெற்ற
ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், தியாகப்பிருமத்தின் சீடர் பரம்பரையில் வந்தவர். தியாக பிருமத்தைப் போலவே புதிய ராகங்களைக் கையாளும் ஆற்றலும் பெற்றிருந்தார்.

தியாகப் பிரும்மம் சங்கராபரண மேளத்திலிருந்து கருடத்வனி, கோலாஹலம், விவர்த்தனி, கன்னட என்று புதிய ராகங்களை ஏற்படுத்தியது போல், இவரும் சங்கராபரணம் மேளத்திலிருந்தே நிரோஷ்டா, கெüடமல்ஹார், ஸôரங்க மல்ஹார், பசுபதிப்ரியா, புதமனோகரி என்று பல புதிய ராகங்களை உண்டாக்கி தமது சாகித்யங்களை அமைத்திருக்கிறார்.

இன்று திரைப்பட இசையமைப்பாளர்கள் நிறையக் கையாளும் வலசி, ஹம்ஸôனந்தி, விஜயநாகரி, மோஹனகல்யாணி ராகங்கள் இவரது கண்டுபிடிப்புதான்!

இந்த நிரோஷ்டா ராகம் ஏற்படுத்தப்பட்டதே ஓர் அரிய சம்பவம். மைசூரில் பாகவதர் இருந்த சமயம், கிருஷ்ணராஜ உடையார் பாரிச வாயுவால் தாக்கப்பட்டுச் சரிவரப் பேச முடியாமலும் கை, கால் உதவாமலும் இருப்பதைப் பார்த்த பாகதவர் சாமுண்டீஸ்வரி சன்னிதிக்கு விரைந்து, “மகாராஜாவைக் காப்பாற்று…” என்று பொருள்பட, உதடுகூடாமல் வரும் ஒரு சாகித்யம் அமைத்து, ராக ஸ்வரமும் உதடு கூடாமல் வரும்படியாகப் பாடிப் பிரார்த்தித்தார். அதுதான் “ராஜ ராஜ ராதிதே…’ என்னும் “நிரோஷ்டா’ ராகக் க்ருதி. உஷ்டம் என்றால் உதடு. “நிர் + உஷ்ட’ என்றால் உதடு கூடாதது என்பது பொருள்.

அம்பாளின் அனுக்ரஹமோ, அன்பனின் வேண்டுதலோ மகாராஜாவின் வியாதி குணமாகிவிட்டது. சங்கீத உபாசகர்கள் சர்வ சித்தி கைவரப்பெற்றவர்கள் என்பது நிச்சயம்.

மைசூர் மகாராஜா, முத்தையா பாகவதரை மற்றுமொரு முறையும் சோதனை செய்திருக்கிறார்.

“”சாகித்தியங்கள் செய்வதில் நீர் சமர்த்தரானால் ஒரே இரவிற்குள் நூறு கீர்த்தனைகள் செய்துகாட்டும்..” என்று பணித்திருக்கிறார்.

பாகவதரும் அம்பாளை இறைஞ்சி வேண்டி அம்பாளின் அஷ்டோத்திர அர்ச்சனை நாமாக்களைக் கொண்டு நூறு கீர்த்தனைகளைப் பாடி முடித்திருக்கிறார். அதுதான் “சாமுண்டாம்பா அஷ்டோத்ர’ கீர்த்தனைகள்! அனைத்தும் கன்னட மொழியில் இயற்றப்பட்டவை.

இதைக் கண்டு மகாராஜா அதிசயித்துப் போனார். உடனே பாகவதருக்கு “காயகசிகாமணி’ என்னும் விருதை அளித்துக் கெüரவப்படுத்தினார். பின்பு அஷ்டோத்திரமும் செய்ய வேண்டினார். பாகவதர் சம்ஸ்கிருதத்தில் அவற்றைச் செய்தார். அதைத் தொடர்ந்து நவகிரக கீர்த்தனைகள், நவாவரண ராகமாலிகை என்பனவைகளை முத்துஸ்வாமி தீட்சிதரின் அடியொட்டிச் செய்திருக்கிறார். வேத அத்யயனம் செய்தவரல்லவா? விஷய ஞானம் நிரம்பப்பெற்றவர்!

“அம்புஜம் வேதாந்தம்’ எழுதிய “ஹரிகதைச் சக்கரவர்த்தி’ என்ற கட்டுரையிலிருந்து…

“ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே…..”
(எதுவும் பிஞ்சில் பழுத்துவிடக் கூடாது)

முத்தையா பாகவதர் ஒரு ஊருக்கு ஹரிகதை நிகழ்ச்சிக்குப் போயிருந்தார். அவரது நிகழ்ச்சிக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருந்தது. ஜாகையில் சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண்டார் பாகவதர்.

அவருக்குத் தெரியாமல் அவருடன் இருக்கும் சீடர் அதே ஊரில் தானும் ஹரிகதை செய்வதாகச் சொல்லி ஒரு நிகழ்ச்சியை ஏற்றுக் கொண்டிருந்தார். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் தூங்கிவிட்டார் என்று நினைத்து அவருடைய சலங்கையையும் எடுத்துக்கொண்டு நிகழ்ச்சி நடத்தக் கிளம்பிவிட்டார் சீடர். கண்ணயர்ந்த முத்தையா பாகவதருக்கு சட்டென்று விழிப்பு கொடுத்தது. மைக்கில் “ஆதெள கீர்த்தனாரம்பத்திலே…’ என்று ஹரிகதை நிகழ்ச்சியை யாரோ நடத்துவது காதில் கேட்டது. எழுந்து கதை கேட்கலாம் என்று அவர் சென்று பார்த்தால் சலங்கையைக் கட்டிக்கொண்டு மேடையில் நிற்கிறார் அவரது சீடர்.

“ஆதெள கீர்த்தனாரம்பத்திலே, ஆதெள கீர்த்தனாரம்பத்திலே…’ என்று தொடங்கத்தான் அவரால் முடிந்ததே தவிர, அதற்கு மேல் தொடர அந்த சிஷ்யனுக்கு முடியவில்லை. இதற்கிடையில் தனது குருநாதர் முத்தையா பாகவதர் அங்கே இருப்பதை அந்த சீடர் பார்த்துவிட்டார். ஓடிப்போய் குருநாதரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்புக் கேட்டார் அவர். முத்தையா பாகவதர் மேடையில் ஏறினார். ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே பகவான் என்ன சொன்னார் என்றால் எதுவும் பிஞ்சில் பழுத்துவிடக் கூடாது என்று சொன்னார்’ என்று கைதட்டலுக்கு இடையில் சொல்லியபடி நின்றுபோன அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி முடித்தாராம். தனது சீடனையும் மன்னித்தார் என்று சொல்வார்கள்.

  • ஆஸ்திக சமாஜம் நரசிம்மன்

(முத்தையா பாகவதர் பிறந்த நாள் இன்று)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe