Home இந்தியா மனங்களை வென்ற இசையின் ராணி! நினைவுகூரும் நாக்பூர்வாசிகள்!

மனங்களை வென்ற இசையின் ராணி! நினைவுகூரும் நாக்பூர்வாசிகள்!

MSSubbulakshmi
MSSubbulakshmi

ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்

இசை என்னும் கலைக்கு மொழி ஒரு தடையில்லை. இசை என்பது, ரசிக்கும் மனதை எப்படியாயினும் ஆட்கொண்டு விடும். இசையின் ராணியாய் வலம் வந்து ரசிகர்களின் மனதை இன்றும் கொள்ளை கொண்டுள்ள எம்.எஸ். சுப்புலட்சுமியின் பிறந்த நாளை நாக்பூர் மக்கள் மகிழ்ச்சியுடன் இன்று நினைவுகூர்கின்றனர்.

வெகு காலமாக மூன்று வயது குழந்தைகள் முதல் அறுபது வயது முதியவர்களுக்கும் இசை வகுப்புகளை எடுத்து வருபவரான திருமதி. ரஞ்சனி கிருஷ்ணகுமார் கூறுகையில் “பல மொழிகள் பேசும் மக்கள் ஆர்வத்தோடு நம் கர்நாடக இசையைப் பயில்கின்றனர். எம்.எஸ். அம்மா பாடிய ‘ரெங்க புரவிஹாரா’ , ‘அகிலாண்டேஷ்வரி’ மற்றும் ‘ குறை ஒன்றும் இல்லை’ இன்னும் பல பாடல்களை விருப்பத்துடன் கற்கின்றனர்,” என்றார்.

“எம்.எஸ். அம்மாவின் குரலில் ஹனுமான் சாலிஸாவும், விஷ்ணு சஹஸ்ரநாமமும் கேட்டு அனுபவிக்கும் போது, மனக் கவலைகள் மறந்து போகும்”, என்கிறார், மராட்டியரான திரு. ப்ரதீப் நாயிக்.

தெலுங்கு தேசத்தில் இருந்து நாக்பூர் வந்து தன் வியாபாரத்தை பெருக்கிக் கொண்டிருக்கும் வேணு நாயுடு, ” பாரத ரத்னா எம்.எஸ். அம்மாவின் குரலில் ‘வேங்கடேச சுப்ரபாதம்’ தெலுங்கு, தமிழ் இல்லங்களில் காலை நேரத்தை ரம்யமாக்குகிறது,” என்பதை பெருமையுடன் கூறுகிறார்.

இசையில் விருப்பமுடைய இளைஞரான அபிஷேக் மோகன், ” பல மொழிகளில் பாடிய எம்.எஸ். அம்மா அவர்களின் வார்த்தை உச்சரிக்கும் திறமையானது அவருடைய பாடல்களை கேட்போருக்கு, வளரும் கலைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்,” என்றார்.

அறுபது வருடங்களாக நாக்பூரில் வசித்து வரும் திருமதி. விசாலம் ராஜாமணி, தன் இல்லத்திற்கு நவராத்திரியின் போது வரும் மராட்டியப் பெண்கள், எம்.எஸ். அம்மாவின் சாதனையயும், அவரின் உடையலங்கார நேர்த்தியையும் புகழ்வர். ” நானும் அவர்களுக்கு எம்.எஸ். நீலக் கலர் புடவைப் பற்றி விளக்குவேன்,” என்று தன் அனுபவத்தை பகிர்ந்தார்.

இசையின் ராணியான எம்.எஸ். அம்மா, மொழிகளைக் கடந்து என்றும் மனங்களை கவர்ந்தவர் என்பதற்கு நாக்பூர் இசைப் பிரியர்களின் சொல்லாலேயே வெளிப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version