spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்நெல்லைத் தமிழ் நயம்! அகத்தியர் வகுத்த தமிழ் இலக்கணம்!

நெல்லைத் தமிழ் நயம்! அகத்தியர் வகுத்த தமிழ் இலக்கணம்!

- Advertisement -

குறுமுனி அகத்தியன் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார்… பொதிகை மலையையும் பரணி நதியையும் நினைத்தால் அகத்தியர் நினைவும் சேர்ந்தே வந்துவிடும். நெல்லைத் தமிழ் தனிச் சிறப்பும் நயமும் கொண்டது.

இன்றும் மலையாள மொழியின் சில வார்த்தைகளை உற்றுநோக்கினால் நெல்லைத் தமிழின் தாக்கம் புலப்படும். இங்கே வார்த்தைகளிலும் வாக்கியங்களிலும் அங்கங்கே அழுத்தம் கொடுத்து, ஏற்றியும் இறக்கியும் பேசும் பாணி நெல்லைக்காரர்களுக்கே உரியது. கேரளம் அருகிலிருப்பதால், சில வேர்ச் சொற்கள் இரண்டுக்கும் பொதுவாக அமைந்திருக்கிறது.

ஒரு பழமொழி “நல்லவர்களுக்கு அடையாளம் சொல்லாமல் கொள்ளாமல்…’ இதுவே நெல்லைத் தமிழில் “நல்லவுகளுக்கு அடையாளம் சொல்லாம பறயாம’… என்று வழங்கப்படும். இங்கே “பறைதல்’ “சொல்லுதல்’ எனும் பொருளில் வரும்.

இப்படி ஒத்துப்போகும் சில சொற்கள்: இந்தா, இதோ, அந்தா, அதோ இவையெல்லாம் இன்னா, அன்னா என்றே புழங்கப்படும். இங்கே, அங்கே, எங்கே என்ற சுட்டுச் சொற்கள் இங்கணே, அங்கணே, எங்கணே என்றும், “இப்பொழுது, அப்பொழுது, எப்பொழுது’ என்பன, “இப்பம், அப்பம், எப்பம்’ என்றும் உருமாறி ஒலிக்கப்படும். இதுபோலவே மற்ற சொற்களும்.

நெல்லைத்தமிழ் என்றாலே, இன்றைய சினிமா கதாநாயகனோ, நகைச்சுவை கதாபாத்திரமோ உடனடியாய் பயன்படுத்தும் வார்த்தைகள், “ஏலே, ஏட்டி’ என்பனவாக இருக்கிறது. அடே, டேய் போன்ற சொற்களின் நெல்லைத் தம்பிதான் ஏலே. “அடி,அடீ’ இவற்றின் தங்கச்சிதான் “ஏட்டி.’ அதுபோல் இன்னொரு சொல் “லேய்.’ இதனுடைய பாடபேதம் “ஓய்.’ பாரதியின் பாட்டில், “”ஓய் திலகரே, நம்ம ஜாதிக்கடுக்குமோ’ என்ற வரியில் ஏறியிருக்கும் “ஓய்’ இதுதான்!

வயதில் சிறியவரானால் “ஏட்டி’ எனலாம். பெரியவரானால்…? பெண்களை விளிக்கும் பொதுவான, நெல்லைத் தமிழுக்கே சிறப்பான சொல் “ஏளா.’ சாதாரணமாக 20, 25 வயதுக்குக் குறைவான பெண்கள் விஷயத்தில் “ஏளா’ உபயோகிப்பதில்லை. ஏறக்குறைய சமவயதுப் பெண்கள், குடும்பத்தில் வயதில் பெரியவரானாலும் அன்பு மிகுதியில் “நீ’ என ஒருமையில் அழைக்கும் உரிமையுள்ளவர்கள் விஷயத்தில் “ஏளா’ பயன்படும்.

“பாட்டு பாடுகிறான்’ என்று சொல்லச் சொன்னால், ஒரு தம்பி “பாட்டு படிக்கான்’ என்பான். வினைச்சொல் விகுதிகள் சாதாரணமாகப் பேச்சு வழக்கில் திரிந்தே வழங்கப்பட்டாலும் பொருனைத் தமிழில் இன்னும் சில சிறப்புகள் உண்டு. பாட்டு பாடுறான் என்பது “பாடுதான்’ என்றாகும். “ஆஹா திருநெல்வேலி அல்வா என்னமாய் இனிக்கி(ற)து’ என்று நீங்கள் சொன்னால், பக்கத்தில் கட்டிய வேட்டியோடு அல்வா சாப்பிடும் நெல்லை அன்பர் “நல்லா இனிக்கி’ என்பார். இப்படித்தான் வந்தாக, போனாக, இருக்காக என்ற சொற்களெல்லாம் தொக்கி நிற்கும்.

நெல்லைத் தமிழில் சில இலக்கியச் சொற்கள் அழகாகப் பளிச்சிடும். இதுபோன்ற இலக்கியச் சொற்களை வேறெந்தப் பேச்சுவழக்கிலும் கேட்க முடியாது. பெரியாழ்வார் பாசுரத்தில் (பெரியாழ்வார் திருமொழி அம்புலிப் பருவம் 4)

சக்கரக்கையன் தடங்கண்ணால் மலரவிழித்து
ஒக்கலை மேலிருந்து உன்னையே சுட்டிக்காட்டும்’
தக்கது அறிதியேல் சந்திரா! சலம் செய்யாதே;
மக்கட் பெறாத மலடன் அல்லையேல், வா, கண்டாய்
என்பதில், எதன் மேலிருந்து கண்ணன் அம்புலியை சுட்டிக் காட்டுகிறான் தெரிகிறதா?

தாய் யசோதையின் இடுப்பு மேல் அமர்ந்து கொண்டு! ஆம்! ஒக்கலை என்பது இடுப்பு என்ற பொருளில் வந்தது. இந்த வார்த்தையை நெல்லையில் மிகச் சாதாரணமாகப் புழங்கக் கேட்கலாம். “குறுக்கு’ என்றும் கூட இடுப்பைச் சொல்வர். நெல்லைத் தாய்மார் தம் குழந்தைகளை ஒக்கலில் தான் இடுக்கிக் கொள்கின்றனர்!

தாயின் ஒக்கல் மேலிருந்து வானத்து அம்புலியைக் கைநீட்டி அழைக்கும் பேசும் பொற்சித்திரத்திடம் சென்று, “ஏலே இதாரு’ என்று அவன் தாயாரைச் சுட்டிக்கேட்டால் அவன் “அம்..ம்..மெ’ எனக் குழைவான். அன்னையை “அம்மை’ என விளித்தல் நெல்லை மண்வாசம்! அதுபோல் தந்தையை “ஐயா’ எனல் பொதுவழக்கு. ஆனால் இப்போதெல்லாம் ஐயா அப்பாவாகி வருகிறார்.

1098 ஆம் குறளைக் காணுங்கள். “யான்நோக்கப் பசையினள் பைய நகும்’ என்பதிலும், “பையவே சென்று பாண்டியற்காகவே’ என்ற சம்பந்தரின் வரிகளிலும் “பையத்’ தெரிவது என்ன? “மெல்ல’ என்ற பொருள் அல்லவா?

இதைப்போல எத்தனையோ சொற்கள். “போல’ என்றதும்… இன்னொன்று! உவமஉருபுகள் படித்திருப்போமே! “போல புரைய ஒப்ப உறழ மான கடுப்ப நேர நிகர அன்ன இன்ன… என்று இலக்கணம் அடுக்குகிறது.

இத்தனை இருந்தால் அடுக்குமா நமக்கு! ஒரே வார்த்தையில் மற்றது எல்லாம் காலைப் பனி “கணக்கா’ காணோம். ஆமாம்! மரங்கணக்கா நிக்கான், புலி கணக்காப் பாயுதான், நாய் கணக்கா கொரைக்கான் … இத்தனை “கணக்கா’ வருவதும் உவம உருபாகிவிட்டது நெல்லைத் தமிழில்!

அகமும் புறமும் படித்திருப்போம். புறம் என்றால் “வெளியில்!’ இங்கே கூடவே பின்புறம் / பின்னால் என்பதற்கு “புறத்தே’ என்பதை உபயோகிப்பதுண்டு. தாயின் பின்னாலேயே தளிர் நடையிட்டு அவசரத்தால் கால்களுக்குள் விழும்போதெல்லாம், “ஏம்லே என் புறத்தாலேயே வாறே?’ என்று “அம்மை’ கடிந்து கொண்டதுண்டு.
தாய் மாமனை “அம்மான்’ எனல்போல, உடன் பிறந்தான், உடன் பிறந்தாள் என்று சகோதர சகோதரியை “அம்மை’ அறிமுகம் செய்ததுண்டு.

காலை எழுந்து, கொல்லைப்புறக் கதவு திறந்து, உயரமான அந்த முதல் தென்னை மரத்தில், முந்தின நாள் ஆசையாய்ப் பார்த்துவைத்த தேங்காயைக் காணாமல், “ராவோட ராவா எவனோ களவாணிப்பய, தேங்காயக் களவாண்டு போய்ட்டான்’ என்று அப்பாவிடம் “ஆவலாதி’ (புகார்) சொன்னதுண்டு.

வசவுகள் கேட்காமல் இளம் பிராயத்தைக் கழிப்பதாவது?! பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளையோ மற்றவர்களையோ கடிந்துபேச உபயோகிக்கும் ஒரு வார்த்தை பொருனைத் தமிழுக்கே உரியது மூதி. இந்த இரண்டெழுத்துள் அஞ்ஞாதவாசம் புரிபவள் வேறுயாருமில்லை! சாட்சாத் சீதேவியின் சோதரி! மூதி சாதாரண ரகம்! கரிமூதி அடுத்த ரகம். வெறுவாக்கெட்ட மூதி விசேஷ ரகம்! வெண்சாமர மரியாதையைக் குறிப்பது “எடு வாரியல !’ என்ற வார்த்தை! விளக்குமாறும் துடைப்பமும் விலக்கப்பட்டவை இங்கே!

பத்தாம் வகுப்பில், “சார் இந்தக் கணக்குக்கு விடை வரமாட்டேங்கி’ என்றபோது, “பிரியக்கட்டி இழுல, வரும்’ என்ற வாத்தியாரின் பதில்…

+2 வில் கெமிஸ்டிரி வாத்யார் வீட்டில் ஸ்பெஷல் கிளாஸ். ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விறுவிறுப்பான இந்திய பாகிஸ்தான் மோதல். ஸ்கோர் பார்க்க அவர் உள்ளே போக, ஓரமாய் இருந்த ஒருவன் திரைச் சீலையை லேசாய் இழுத்துவிட்டு ஓரக்கண்ணால் மேட்ச் பார்க்க, வேகமாய் வந்த வாத்தியார்… “எலே எருவமாடுவளா! இங்கன என்னல பார்வ!’ எனக் கத்தியது… 

வசவுகளில் கூட இசைநயம்! அதுதான் நெல்லைத் தமிழ்நயம்!

2 COMMENTS

  1. நெல்லை கீழப்பாவூரில் பிறந்து திருநெல்வேலிக்கருகில் திருப்பணி கரிசல் குளத்திலுள்ள தாய்வழித் தாத்தா வீட்டில் வளர்ந்து பேட்டையில் படித்து பெங்களூரில் பணிபுரிந்து இன்று ஆஸ்திரேலியாவில் மெல்பனில் வாழும் எனக்கு “ஏலே எருமைமாடு! வெருவாக்கெட்ட மூதி!” என்று வாத்தியார் என்னைப் பார்த்து பலமுறை கூறியது நினைவுக்கு வருகிறது. நெல்லைத் தமிழினிமையை பற்றிக் கூறியதை பாராட்ட வர்த்தையே இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe