spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeNewsஇந்து மத பிரமாணங்கள்

இந்து மத பிரமாணங்கள்

- Advertisement -

இந்து மத பிரமாணங்கள்

நாம் வசிக்கும் பூமிக்கு ஜம்புத்வீபம் (நாவலந்தீவு) என்று பெயர். இது கர்மபூமி எனப்படுகிறது. இங்கு புண்ணிய நூல்கள் பல உண்டு. இறைவனின் அவதாரங்கள் நிகழ்ந்துள்ளன. புண்ணிய நதிகளும், புகழ்பெற்ற தலங்களும் ஏராளம். இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே மதம் என்கிற வாழும் வழிமுறை ஒன்று தோன்றியது. கலைகளிலும், நாகரிகத்திலும் அம்முறையைப் பின்பற்றியவர்கள் ஒப்பற்ற புகழ் பெற்றிருந்தனர். அவர்கள் பேசிய மொழியிலிருந்து மற்ற நாட்டவர் நாகரிகத்தைக் கற்றுக் கொண்டதாகவும் சொல்வதுண்டு. அவர்கள் கடைப்பிடித்த வழிமுறையே, இந்து மதம் அல்லது சனாதன தர்மம் எனப்படுகின்றது.

இதற்கு ஆதாரமான கிரந்தங்கள் சம்ஸ்கிருதத்திலேயே எழுதப்பட்டுள்ளன. அவை பலவாக வேறுபட்டிருப்பினும், ஒரே கடவுளைப் பற்றியே கூறுவன. அந்தக் கிரந்தங்கள், வேதங்களின் கருத்தையே வெளிப்படுத்துகின்றன. உயிரிகளுக்கு உறுப்புகள் எப்படி இன்றியமையாதவையோ, அப்படியே வேதத்துக்கு வேதாங்கங்கள் முக்கியமானவை.

வேதம், சில காரணங்களால் நான்காகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. வேதாங்கங்கள் 6; உபாங்கங்கள் 4… ஆக, 14 வித்யைகள் என்றும், உபவேதங்கள் 4 சேர்ந்தால் 18 வித்யைகள் என்றும் கூறுவார்கள். இவை அனைத்தும் வேதத்தைத் தழுவியவை ஆதலால் இவற்றிலிருந்து உண்டான மதங்களை வைதிக மதம், ஆஸ்திக மதம் என்றனர். வேதத்தை ஆதாரமாகக் கொள்ளாத மதங்களை அவைதிகம் நாஸ்திகம் என்றார்கள்.

வேதம்:

வேதம், அறிவைத் தரும் நூல். அதையே ச்ருதி என்பர். காதால் கேட்டுக்கேட்டு, உபதேசங்களின் மூலமாகப் பரவியதால், அப்பெயர் ஏற்பட்டது. வேதத்தைப் பின்பற்றி சில கிரந்தங்களை இயற்றிய பெரியோர்களும், வேத விளக்கங்களை (பாஷ்யம்) எழுதியவர்களும் வேதம் நித்யமானது; அனந்தமானது; மனிதனால் எழுதப்படாதது; ஈசன் முகத்திலிருந்து வெளிவந்தது; அதை மகரிஷிகள் தங்கள் தவ பலத்தால் அறிந்து உலக நன்மைக்காக வெளியிட்டார்கள் என்றே கூறியுள்ளனர்.

வேதவியாசர், ருக், யஜுர், ஸாம, அதர்வண என்று வேதத்தை நான்காகப் பிரித்தார். வேதத்திலுள்ள பெரும் பகுதி, யாகத்தைக் குறித்தே சொல்கின்றன. யாகத்தைச் செய்து முடிக்க ரித்விக்குகள் (கர்மாவைச் செய்பவர்கள்) வேண்டும். யாகம் செய்யும் எஜமானன், பிரும்மா, அத்வர்யு, ஹோதா, உத்காதா ஆகிய இவர்கள் முக்கியமானவர்கள். அந்தந்த தேவதைக்கு உரிய மந்திரங்களைக் கூறி, அவரவர் குணத்தை வெளியிடும் ஹோதாவுக்கு வேண்டியவற்றைக் கொண்ட ருக்வேதத்தை ஹோத்ருப்ரயோகம் என்பர்.

எல்லாத் தொழில்களையும், எஜமானனுக்காகச் செய்யும் அத்வர்யுவுக்கு வேண்டியவை, யஜுர் வேதத்தில் உள்ளன. பாடல்கள் தோத்திரங்கள் இசைத்து, தேவதைகளை மகிழச் செய்யும் உத்காதா என்பவருக்குரியது சாமவேதத்தில் காணப்படுகிறது. யாகத்துக்கு உபயோகப்படாமல், பொருள் வளர்ச்சி ஏற்படவும், ஆசைகள் உடனே நிறைவேறவும், எதிரியை வீழ்த்தவுமான உபயோகங்கள் அடங்கியது அதர்வண வேதம். இந்த நான்கு வேதங்களும், உலகத்துக்கு தர்ம, அர்த்த, காம, மோட்ச என்ற நான்கு வித புருஷார்த்தத்தை அளிப்பன. வேதம் தர்ம காண்டம், பிரும்ம காண்டம் என இரு வகைப்படும்.

தர்ம, அர்த்த, காமம் என்ற மூன்று பலத்தை அளிக்கத் தக்கது தர்ம காண்டம். மோட்சத்துக்கேற்ற வழியைக் கூறுவது பிரும்ம காண்டம். கர்ம காண்டம், மந்திரம், ப்ராஹ்மணம் என இரு வகைப்படும்.

அனுஷ்டானத்துக்குரிய திரவியம், தேவதை முதலியவற்றை விளக்குவது மந்திரம். அது, பாதங்களோடு கூடி, காயத்ரி முதலிய சந்தஸ்களுடன் சேர்ந்திருந்தால், ருக் மந்திரம் எனவும், பாடலோடு சேர்ந்திருந்தால் சாம மந்திரம் எனவும், இந்த இரண்டோடும் சேரா விட்டால் யஜுர் மந்திரம் எனவும் சொல்லப்படும்.

விதி, அர்த்தவாதம் என, ப்ராஹ்மணம் இரு வகைப்படும். விதி பல வகையானாலும், ஒரு கர்மாவை விதிப்பதே அதன் கருத்து. விதித்த கர்மாவைப் பற்றித் துதிப்பதும், வேண்டாதவற்றை நிந்திப்பதும் அர்த்தவாதம். கர்ம காண்டத்தைப் பற்றி சூத்திரமாகவும் விளக்கமாகவும், மகான்களால் எழுதப்பட்ட சாஸ்திரங்கள் பூர்வ மீமாம்ஸை எனப்பட்டன.

பிரும்ம காண்ட உபநிஷத்தைப் பின்பற்றி, வேதவியாசரால் சூத்திரமாக வெளியிடப்பட்டு, சங்கரர் முதலான ஆசார்யர்களால் விளக்கம் எழுதப்பட்ட கிரந்தங்களுக்கு உத்திர மீமாம்ஸை அல்லது வேதாந்தம்! என்று பெயர்.

இந்த வேத அங்கங்கள் ஆறு வகைப்படும்.

சீக்ஷா:

வேதத்தை தவறாக உச்சரித்தால் பலனைத் தராததோடு, அப்படி சொல்பவரைக் கெடுக்கும் என்பதால், மிகுந்த எச்சரிக்கையோடு வேதத்தை ஓதச் சொன்னார்கள். உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம் என ஸ்வரம் மூன்று வகைப்படும். அச்சு, ஹல் என்று அட்சரங்கள் இரு வகைப்படும். அச்சு – ஹ்ரஸ்வம், தீர்த்தம், ப்லுதம் என மூன்று பிரிவுகளைக் கொண்டது. இவற்றைப் பற்றிக் கூறுவது சீக்ஷா என்ற வேதாங்கம்.

இவை, பாணினி முனிவரால் எல்லா வேதங்களுக்கும் பொதுவாக ஐந்து காண்டங்களாகவும், இன்னும் பலரால் ஒவ்வொரு வேதத்துக்கும் தனித்தனியாகவும் வெளியிடப் பட்டிருக்கின்றன.

வியாகரணம்:

இதை, இலக்கணம் என்பர். ஒவ்வொரு பதத்தையும் பிழை இன்றி உச்சரிக்க வேண்டும். சீக்ஷா என்பதால் எழுத்து சுத்தமாகத் தெரிந்தாலும், பதத்தை அறிய மற்றொரு நூல் அவசியம். நடராஜப் பெருமான் நடனம் செய்தபோது, அவரது உடுக்கையிலிருந்து கிளம்பிய 14 சூத்திரங்களை ஆதாரமாகக் கொண்டு, பாணினி அவற்றை எட்டு அத்தியாயங்களாக எழுதினார். காத்யாயனர், அதற்கு ஒரு அமைப்பினை வகுத்தார். அதற்கு பதஞ்சலி மகரிஷி விளக்கவுரை எழுதினார். இன்னும் பலரால் பல வியாகரணங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.

நிருக்தம்:

பொருளை உணராமல் சொல்லப்படும் வேத உச்சாடனத்துக்கு முழுமையான பலன் கிடைக்காது என்பதால், யாஸ்க முனிவர் பதின்மூன்று அத்தியாயங்கள் கொண்ட நிருக்தத்தை எழுதினார். நாம, ஆக்யாத, நிபாத, உபஸர்க்க என நான்கு வகை பதங்களை விவரித்து, அந்தப் பதங்களுக்கான பொருளும் அதில் கூறப்பட்டிருக்கிறது. வைதிக வார்த்தையின் பொருளை விளக்க, ஐந்து அத்தியாயங்கள் கொண்ட ஒரு நிகண்டுவும் அவராலேயே இயற்றப்பட்டது.

சந்தஸ்:

ஒவ்வொரு மந்திரத்தையும், அதற்குரிய ரிஷி, சந்தஸ், தேவதை இவற்றை அறிந்து உச்சரிக்க வேண்டும். எனவே, சந்தஸ்ஸை விளக்க ரிஷி பிங்களரால் எட்டு அத்தியாயங்களுடன் சந்தஸ் சாஸ்திரம் எழுதப்பட்டது. அதில் மூன்று அத்தியாயங்களில் காயத்ரி முதலிய வேத சந்தஸ்ஸுகளும், ஐந்து அத்தியாயங்களில் புராண இதிகாசங்களுக்குரிய லௌகிக சந்தஸ்ஸுகளும் விளக்கப் பட்டுள்ளன.

ஜோதிடம்:

வேதோக்த கர்மாக்களை அனுஷ்டிக்க, நாள் நட்சத்திரம் லக்னம் முதலியவற்றை விளக்கி, ஆதித்யர், கர்கர் முதலியவர்களால் ஜோதிடம் என்ற வேதாங்கம் எழுதப்பட்டது.

கல்பம்:

வேதம் எல்லையற்றது. எனவே, அதில் மறைந்துள்ள சாகைகளிலிருந்து எந்தக் கர்மாவை, எந்தக் காலத்தில், எதற்குப் பிறகு, எப்படிச் செய்வது என்பதை விளக்குவது கல்பம்.

உப அங்கங்கள்:

முன்னர் கண்ட ஆறு அங்கங்களுக்கும் சாதகமான அங்கங்களே உபாங்கங்கள். அவை புராணம், நியாயம், மீமாம்ஸை, தர்ம சாஸ்திரம் என நான்கு வகைப்படும்.

புராணம்:

உலகப் படைப்பு, அரச வம்சம், பெரிய அரசர்களின் சரிதம், மந்வந்தரம் முதலியவற்றை விளக்குபவை புராணங்கள். பிராம்மம், பாத்மம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்னேயம், பவிஷ்யம், ப்ரும்ம வைவர்த்தம், லைங்கம், வாராஹம், ஸ்காந்தம், வாமனம், கௌர்மம், மாத்ஸயம், காருடம், பிரும்மாண்டம் என்ற பதினெட்டு புராணங்களை வேதவியாசர் இயற்றினார். நரசிம்மம், நாந்தம், சிவதர்மம், நாரதீயம், காபிலம், பிரும்மாண்டம், லிங்கம், ஸாம்பம், மாரீசம் முதலியன சில புராணங்களும் பல்வேறு மகரிஷிகளால் இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு உப புராணம் என்று பெயர்.

நியாயம்:

இது, ஐந்து அத்தியாயங்களாக மகரிஷி கௌதமரால் இயற்றப்பட்டது. பிரமாணம் முதலிய பதினாறு பத அர்த்தங்களின் தத்துவத்தை அறிவதே இதன் பலன். கணாதர் என்பவரால் பத்து அத்தியாயங்கள் கொண்ட தத்துவமான வைசேஷிகம் தோற்றுவிக்கப்பட்டது. அதில் திரவ்யம் முதலிய ஆறு பத அர்த்தங்களின் தத்துவம் கூறப்பட்டுள்ளது. இதுவும் நியாய சாஸ்திரத்திலேயே சேரும். இவ்விரண்டையும் தர்க்க சாஸ்திரம் என்பர்.

கௌதமர், கணாதர் இருவரின் தத்துவங்களைத் தழுவியும் தழுவாமலும் மகான்கள் பலரால் கிரந்தங்கள் பல வெளியிடப்பட்டன. ஒவ்வொரு பொருளின் உண்மையையும் விவரிக்க, நியாய சாஸ்திரம் இன்றியமையாதது. பிரத்யக்ஷம், அனுமானம், உபமானம், சப்தம் முதலிய பிரமாணங்களுக்கு விரிவாக இதில் லட்சணம் கூறப்பட்டிருக்கிறது.

மீமாம்ஸை:

மீமாம்ஸை என்றால், கௌரவமாக விசாரிப்பது என்று பொருள். இது, கர்ம மீமாம்ஸை, சாரீரக மீமாம்ஸை என இரு வகைப்படும். கர்ம மீமாம்ஸை என்பது, ஜைமினி மகரிஷியால் பன்னிரண்டு அத்தியாயங்களாக எழுதப்பட்டது. இதில் தர்ம லட்சணம், எந்த மந்திரத்தை எங்கே படிப்பது முதலிய கர்மாவைப் பற்றிய தத்துவங்களும், கர்மங்களின் பலமும் கூறப்பட்டுள்ளது. வியாசரால் உபநிஷத அர்த்தங்களைக் கொண்ட பிரம்ம சூத்திரம் நான்கு அத்தியாயங்களாக இயற்றப்பட்டது. பக்தி, கர்மம் முதலியவற்றால் பெறும் சுகம் நிலையானது இல்லை. புண்ணியம் உள்ள வரையில்தான் இந்திரலோகம் முதலிய சுகம் கிட்டும். புண்ணியம் குறைந்தவுடன் முன் போலவே பூலோகத்தில் பிறக்க வேண்டும். அதற்கு சாதனமானது வேதாந்த சாஸ்திரம் ஒன்றே. வேதத்தின் முடிவான உபநிஷத்துகளை வேதாந்தம் என்று சொல்வதுண்டு. இவை, பரப்பிரும்மத்தை நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ கூறுவன. இதுவே சாரீரக மீமாம்ஸை.

தர்ம சாஸ்திரங்கள்:

தர்மம் என்ற சொல்லுக்கு (தன்னை அனுசரிப்பவனை நரகத்தில் விழவிடாமல்) நிறுத்தம் என்று பொருள். அவரவர் கடமையைச் செய்யும்படி சொல்வதால் இந்த நூலுக்கு தர்மசாஸ்திரம் என்று பெயர். இதை ஸ்மிருதி என்றும் சொல்வர்.

ராமாயணம்:

ஆதிகவி வால்மீகி இயற்றிய ராமாயணத்தை, நடந்த கதை ஆதலால் இதிகாசம் என்றாலும், ஸ்மிருதிகளுடனேயே சேர்ப்பர். தாய் தந்தையருடன் ஒரு மகன் நடந்து கொள்ள வேண்டிய முறை, பொய் சொல்லாமை, குருபக்தி, சகோதர பாசம், நீதி, மக்களை பாதுகாத்து ஆட்சி செய்வது, தினசரி கர்மாக்களைச் செய்தல், தர்ம யுத்தம், தீர்த்த கௌரவம், விருந்தினரை கௌரவித்தல், தானம், பணிவு, ஆண்&பெண் தர்மம், சத்திரிய தர்மம், பணிவிடை, கற்பு, தர்ம பலம் முதலிய பல தர்மங்களை விரிவாகவும் கதை வடிவிலும் எடுத்துக் காட்டியிருப்பதாலும், வேதமும் தர்மசாஸ்திரமும் எனது ஆக்ஞை என்று வாசுதேவனே நேரில் தர்மத்தை அனுஷ்டித்துக் காட்டியதாலும் ராமாயணத்தை வால்மீகி ஸ்மிருதி என்றனர்.

மகாபாரதம்:

வேதவியாசரால் சொல்லப்பட்ட பாரதத்தில் பல இடங்களில் கதை மூலமாகவும், நேராகவும், கேள்விக்கு பதிலாகவும் விரிவாக தர்ம விளக்கம் தரப் பட்டிருக்கின்றன. பாரத: பஞ்சமோ வேத: என்று ஒரு பழமொழி உண்டு. வேதம் என்றே சொல்லத்தக்க இந்நூலை தர்மசாஸ்திரத்தில் சேர்ப்பது பதினெட்டு புராணங்களையும் வெளியிட்ட வியாசர், மகாபாரதத்தின் இடையே பகவத்கீதை என்ற கிரந்த ரத்தினத்தையும் தந்துள்ளார். கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிப்பதாக அரிய பல தத்துவங்கள் இதில் அடங்கியிருக்கிறது.

உப வேதங்கள்:

நான்கு வேதங்களுக்கும் நான்கு உபவேதங்கள் உண்டு. அவை முறையே, ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வ வேதம், அர்த்த(சாஸ்திரம்) வேதம் ஆகியவை.

ஆயுர்வேதம்:

மனிதனது ஆயுள், உடல், இந்திரியம் முதலியவற்றைப் பற்றிச் சொல்வது ஆயுர்வேதம். இது பிரம்மா, தன்வந்திரி முதலிய பலரால் வெளியிடப்பட்டது. அவற்றைத் தொகுத்து சரக ஸம்ஹிதை என்ற புத்தகமாக சரகர் வெளியிட்டார். வாக்படர் முதலிய பலரும் பல வைத்திய கிரந்தங்களை இயற்றியிருக்கிறார்கள். சுச்ருதர், வாத்ஸ்யாயனர் முதலியோர் வெளியிட்ட ரதி சாஸ்திரமும் இதில் அடங்கும். ஆயுர்வேதம் கிட்டத்தட்ட தர்ம சாஸ்திரத்தை ஒட்டி இருப்பதால், ஆயுர்வேதப்படி உணவுக் கட்டுப்பாட்டு முறைகள், உடலைப் பேணும் முறைகள் போன்றவற்றை கடைப்பிடிப்பவனுக்கு வியாதிகள் கிட்டே வராது. அப்படி கடைப்பிடிக்காததால் வரும் வியாதிகளுக்கும் இதில் பல வித சிகிச்சை முறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

தனுர்வேதம்:

வில், அஸ்திர சஸ்திரங்களைப் பற்றிக் கூறும் இந்த வேதம் நான்கு அத்தியாயங்களாக விஸ்வாமித்திரரால் வெளியிடப்பட்டது. அதில் யந்த்ர விதி, மந்த்ர விதி என இரு வகையான பிரிவுகள் உண்டு. பாணம், சூலம், கத்தி, சக்கரம் முதலியன எறியப்படுதல் முதல் வகையைச் சார்ந்தது. இவை அந்தந்த தேவதா மந்திர உச்சாடம் செய்து பிரயோகம் செய்யப்படும்போது இரண்டாவது வகையில் சேரும். தர்ம யுத்தம் நடக்கும்போது அம்புகளுக்கு பதில் அம்பினை செலுத்தும் நேர்மையைப் பார்க்க பல தேவரிஷிகள் கூடுவது வழக்கமாம். நாகாஸ்திரத்துக்கு கருடாஸ்திரமும் ஆக்னேயாஸ்திரமும் பதில் அஸ்திரங்களாகும். அஸ்திர சஸ்திரங்களுக்கு யார் அதிகாரி, யாரிடத்தில் எப்படிப் பிரயோகம் செய்வது போன்றவை இவ்வேதத்தில் அழகாகக் கூறப்பட்டுள்ளது.

காந்தர்வ வேதம்:

இது பரதரால் இயற்றப்பட்டது. கீதம், வாத்யம், நர்த்தனம் முதலியவை இதில் கூறப்பட்டுள்ளன. ஸ்ருதி லயப்பட்டு தாளம் தவறாமல் பக்தியுடன் இறைவனைப் பாடித் துதிப்பவர்களுக்கு, ஈசன் அருள் எளிதாகக் கிட்டும். கைலாய மலையைத் தூக்கித் தூரத்தில் எறிய எண்ணிய ராவணனின் கைகள், மலையின் கீழ் அகப்பட்டுக் கொண்டன. நாரதர் கட்டளைப்படி சாம கானம் செய்து, இறைவனைத் துதித்து ராவணன் விடுபட்டான். மனத்திலுள்ள எண்ணத்தை சொற்களால் வெளிப்படுத்தாமல் கை, முகம், கண் முதலியவற்றால் வெளிப்படுத்துவதே நர்த்தனம். இறை வழிபாட்டில் இதுவும் ஒரு அங்கம். இவற்றைப் பற்றி மேலும் பலரால் பல கிரந்தங்கள் எழுதப்பட்டன. அவற்றில் சங்கீத ரத்னாகரம் என்பது முக்கியமானது. இதில் ஸ்வர பேதம், தாள பேதம், ராகங்களின் லட்சணம், பெயர், அதற்குண்டான காரணம், அந்தந்த ராகத்துக்கு ஏற்ற காலம், அதன் அதிகாரி முதலிய பல அரிய விஷயங்கள் அடங்கியுள்ளன.

அர்த்த (சாஸ்திரம்) வேதம்:

அரசாங்க விஷயமாக சுக்ர நீதி, கௌடில்ய நீதி என பல கிரந்தங்கள் உண்டு. குதிரை, யானை, பசு முதலிய மிருகங்களை எப்படி அடக்கி வசியப் படுத்துவது, பலன் அளிக்காதவற்றை எப்படி பலன் அளிக்கும்படி செய்வது போன்ற பலவற்றை உள்ளடக்கி சில சாஸ்திரங்கள் வெளியாயின. செடி, கொடி, மரங்களைப் பற்றியும், ஒவ்வொரு பொருளின் இயற்கை குணம், சேர்க்கை குணம், இவற்றைப் பற்றியும், அவற்றின் உடலமைப்பைப் பற்றியும், பட்சிகள் மற்றும் அவற்றின் சகுனத்தைப் பற்றியும், சித்திரம், அலங்காரம், பாகம் முதலியவை குறித்தும் பல கிரந்தங்கள் முனிவர்கள் பலரால் வெளியிடப்பட்டன. இவற்றில் பலவும் தற்போது கிடைக்கவில்லை. இவற்றைச் சேர்த்து அறுபத்துநான்கு கலைகள் என்பர்.

தத்துவங்கள்:

சாங்க்யம் – கபில மகரிஷியால் ஆறு அத்தியாயங்களாக எழுதப்பட்டது இந்தத் தத்துவம். பிரகிருதி, புருஷன் என்ற இரண்டில் ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களின் கூட்டான பிரகிருதியிடமிருந்தே உலகம் தோன்றியது. புருஷன், தான் ஒன்றும் செய்யாதவன் என்று அறிந்து வைராக்ய சம்பந்தனாக இருத்தலே சுகம் பெற வழி என்பது இந்தத் தத்துவம்.

யோகம்:

பதஞ்சலி முனிவரால் நான்கு பாகங்களாகச் செய்யப்பட்டது யோக சாஸ்திரம். இதில் யமம், நியமம் முதலிய எட்டு அங்கங்களால் மனத்தை ஓரிடத்தில் நிறுத்துவது, யோக சித்தியினால் தொலைவிலுள்ள விஷயத்தை இங்கே இருந்தபடியே உணர்தல், ஆகாய வழியிலும், நீரிலும், நெருப்பிலும் சஞ்சரித்தல், விரும்பியதைப் பெறல் போன்ற அணிமாதி, அஷ்ட ஐச்வர்ய ப்ராப்தி, முடிவில் மோட்சம் ஆகியவை கூறப்பட்டுள்ளன.

பாசுபதம்:

பசுபதியால் ஐந்து அத்தியாயங்களாகச் செய்யப்பட்டது. இதில் பதி, பசு, பாசம் என மூன்று உண்டு. பசுவாகிய ஜீவன், பாசமாகிய பந்தத்தை (விபூதி ருத்ராட்சம் அணிதல், பஸ்ம ஸ்நாநம் முதலியவற்றால்) நீக்கி, பதி என்ற பரமசிவனை அர்ச்சித்தல் மோட்சம் என்பது தத்துவம்.

வைஷ்ணவம்:

எல்லாவற்றுக்கும் காரணமான பகவான் வாசுதேவரிடமிருந்து, ஸங்கர்ஷணன் என்ற ஜீவனும் அவனிடமிருந்து ப்ரத்யும்னன் என்ற மனதும், அதிலிருந்து அநிருத்தன் என்ற அகங்காரமும் உண்டாயின. மனம், மொழி, உடலால் எக்காலத்தும் பகவானை அர்ச்சித்துக் கொண்டிருப்பதே மோட்சம் அடைய வழி என்பது தத்துவச் சுருக்கம்.

சூரியனை முதன்மையானவனாகக் கொண்ட சௌரம், சக்தி என்ற அம்பாளை பிரதானமாகக் கொண்ட சாக்தம், கணபதியை மூல காரணமாகக் கொண்ட காணாபத்யம், கபாலியைத் தொழும் காபாலம், பாசுபதம் முதலிய ஆறு வகைக்கு ஷண் மதம் என்று பெயர்.

இப்படி, பல பெயர்கள் கொண்ட மதங்களும் ஒரே கடவுளைப் பற்றியனவே! எவர் எந்த வழியாகச் சென்றாலும், அவர்கள் இறைவனையே அடைகிறார்கள். இதுவே பரந்த எண்ணமுள்ள இந்து மதத்தின் தத்துவம்.

முக்கியமான சொற்களின் விரிவாக்கங்கள்:

மும்மூர்த்திகள்: பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களைக் கொண்டு உலகுக்கு நன்மை செய்கின்றனர்.

முக்குணங்கள்: ஸத்வம், ரஜஸ், தமஸ் இம்மூன்றும் ஒவ்வொரு பொருளிடமும் காணப்படும்.

முக்கரணம்: மனம், மொழி, உடல் ஆகியன.

மூன்று உலகங்கள்: சுவர்க்க லோகம், பூவுலகம், பாதாள உலகம்.

நான்கு வேதம்: ரிக், யஜூர், ஸாம, அதர்வண வேதங்கள்.

நான்கு வித புருஷார்த்தம்: தர்ம, அர்த்த, காம, மோக்ஷம். (அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியன)

நான்கு யுகங்கள்: க்ருத, த்ரேதா, த்வாபர, கலி யுகம் ஆகியன.

ஆச்ரமம்: பிரம்மசர்ய, கிருஹஸ்த, வானப்ரஸ்த, சன்யாஸ ஆச்ரமம் ஆகியன.

அந்தகர்ணம்: மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியன.

ஐம்பூதங்கள்: பிருத்வி(நிலம்), அப்பு(நீர்), தேஜஸ்(தீ), வாயு, ஆகாசம்.

ஞானேந்திரியங்கள்: கண், காது, நாக்கு, மூக்கு, த்வக்.

கர்மேந்திரியங்கள்: வாக், பணி, பாத, பாஸு, உபஸ்தம்.

பிராணம்: பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் ஆகியன.

கோசம்: அன்னமய, ப்ராணமய, மநோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய கோசங்கள்.

பஞ்சாங்கம்: திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம்.

தர்சநம்: ந்யாய, வைசேஷிக, ஸாங்க்ய, யோக, மீமாம்ஸா, வேதாந்தம் ஆகியன.

அரிவர்க்கம்: காம, க்ரோத, லோப, மத, மோஹ, மாத்ஸர்யங்கள்.

கர்ம: யஜந, யாஜந, அத்யயந, தாந, ப்ரதிக்ரஹங்கள்.

சப்த தீவு (ஏழு தீவுகள்): ஜம்பு, சாக, பக்ஷ, குச, கிரௌஞ்ச, சான்மலி, புஷ்கர தீவுகள்.

சங்கல்ப வாரம்: பானு, இந்து, பௌம, ஸௌம்ய, பிருஹஸ்பதி, சுக்ர, சனி வாஸரங்கள்.

அஷ்ட திக்பாலர்: இந்திரன், அக்னி, யமன், நைருரிதன், வருணன், வாயு, குபேரன், ஈசன்.

அஷ்டாங்க யோகம்: யம, நியம, ஆஸந, ப்ராணாயாம, ப்ரத்யாஹார, தியான, தாரண, சமாதி, அணிமா, மஹிமா, கரிமா, லகிமா, ப்ராப்தி, ப்ராகாம்ய, ஈசத்வம், வசித்வம் ஆகியன.

நவக்ரஹங்கள்: ஆதித்யன், சோமன், அங்காரகன், புதன், பிருஹஸ்பதி, சுக்கிரன், சனைச்சரன், ராகு, கேது.

தசாவதாரங்கள்: மத்ஸ்யம், கூர்மம், வராஹம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe