spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeNewsகம்பனும் ராமசேதுவும்

கம்பனும் ராமசேதுவும்

- Advertisement -

வணக்கம்

உச்ச நீதிமன்றத்தில் கம்பன் பெயர் அடிபட்டிருக்கிறது. அதற்காக கம்பனை கொஞ்சம் திருப்பிப் பார்த்து, சில தகவல்களைத் திரட்டியுள்ளேன். முடிந்தால், இந்த வாதங்களை முன்வைக்கலாம். காரணம் தமிழ் படித்தவன் என்ற காரணத்தால், அடியேன் படித்த சில இலக்கிய உலகத் தகவல்களை இங்கே தந்திருக்கிறேன்.

கம்பராமாயணத்தில் ராமனே பாலத்தை சேதப்படுத்திவிட்டான் என்று சொல்லும் தகவல், முழுமையானது அல்ல. அது இடைச்செருகல் பாடல். அதுகுறித்த விவரங்களை இங்கே தந்துள்ளேன்.

ஒரு சந்தேகம் எனக்கு உண்டு…

ஸ்ரீஹரிக்கோட்டாவில் ராக்கேட் ஏவும்போதெல்லாம், சென்னையிலுள்ள பத்திரிகையாளர்கள் உட்பட நாட்டின் பல இடங்களில் இருந்தும் பணி நடக்கும் காலம் உட்பட எல்லோரையும் அழைத்துச் சென்று காட்டுவார்கள். ராக்கெட் ஏவப்படுவதையும் நாங்கள் கண்டிருக்கிறோம். காரணம் பல கோடி ரூபாய் ப்ராஜக்ட் அது. நாட்டு மக்கள் பணம் என்பதால் வெளிப்படையாகச் செய்யவேண்டும் என்பது தர்மம்.

ஆனால், சேது சமுத்திரத் திட்ட விஷயத்தில், எந்த பத்திரிகையாளரையும் திட்ட பணிகள் நடக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று நடப்பது இதுதான் என்று காட்டியதில்லை. எவ்வளவு மண் அள்ளுகிறார்கள், எங்கே கொட்டுகிறார்கள் என்பதெல்லாம் மர்மம். மேலும் திட்டம் நடக்கும் விஷயத்தை, அரசுத் துறையினரே போட்டோ மற்றும் வீடியோ எடுத்துவந்து, ஒரு பிரஸ் மீட் நடத்தி, அதைப் போட்டுக் காண்பித்து விடுகிறார்கள். நேரில் காணும் வாய்ப்பு யாருக்கும் கிட்டியதில்லை.

இனி, உச்சநீதிமன்றத்தில் கம்பன் பெயரைச் சொன்னதற்காக, அடியேன் தரும் தகவல்கள்….

கம்பராமாயணத்தில் சேது:

சென்னை கம்பன் கழகம் வெளியிட்ட கம்பராமாயணம் (முதல் பதிப்பு 1976)

யுத்த காண்டத்தில் 37வது படலம்

மீட்சிப் படலம்

இதில் பாடல் எண் 166 முதல் 180 வரையில் ‘சேதுவைக் காட்டி அதன் தூய்மையைப் புகழ்தல்” என்ற தலைப்பில் சேதுவின் மகிமைகள் ராமனால் பேசப்படுகின்றன.

ஆனால் முதல் ஆறு பாடல்களே சேது (166-171) பற்றிய புகழைப் பேசுகின்றன. (பக்கம் 1565)
அதாவது புஷ்பக விமானத்தில் ஏறி, இலங்கையிலிருந்து ராமன் அயோத்திக்கு திரும்பச் செல்லும்போது, நிலத்தில் இலங்கை அழகையும், போர் நடந்த இடங்களையும், யார் யாரை வதம் செய்த இடம் என்றெல்லாம் காட்டிக் கொண்டு வரும்போது, சேது அமைக்கப்பட்ட இடத்தையும் சேதுவையும் காட்டி, இது இல்லை என்றால் இம்மாபெரும் வெற்றி கிடைத்திருக்காது, இது நளன் அமைத்த பாலம் என்று கூறுகிறார் ராமன்.

————————————————————–

இவை கம்பன் பாடல்கள் ( 164-165 ) இந்தப் பாடல்கள், சேதுவைக் காட்டி அதன் தூய்மையைப் புகழ்தல் என்ற பகுதிக்கு முன்னால் வரும். இந்தப் பாடல்களில் இலங்கைக் காட்சிகளை ராமன் சீதைக்குச் சொல்கிறார். பிறகு வருபவை சேதுக் காட்சிகள்….

——————————————————-

‘இலங்கையை வலஞ் செய்து ஏக’ என நினைந்திடுமுன், மானம்

வலம் கிளர் கீழை வாயில் வர, ‘பிரகத்தன், நீலன்

நலம் கிளர் கையின் மாண்டது இவண்’ என, நமன் தன் வாயில்

கலந்திட, ‘ஈங்குக் கண்டாய், சுபாரிசற் சுட்டது’ என்றான். 20-10

குட திசை வாயில் ஏக, ‘குன்று அரிந்தவனை வென்ற

விட நிகர் மேகநாதன் இளவலால் வீழ்ந்தது’ என் முன்,

வட திசை வாயில் மேவ, ‘இராவணன் மவுலி பத்தும்,

உடலமும் இழந்தது இங்கு’ என்று உணர்த்தி, வேறு உரைக்கலுற்றான்: 20-11

——————————–

இதைத் தொடர்ந்து வரும் ஆறு பாடல்கள் சேது மகிமையைப் போற்றுகின்றன.

————————————————-

‘நன்னுதல்! நின்னை நீங்கி, நாள் பல கழிந்த பின்றை,

மன்னவன் இரவி மைந்தன், வான் துணையாக நட்ட

பின்னை, மாருதி வந்து, உன்னைப் பேதறுத்து, உனது பெற்றி

சொன்னபின், வானரேசர் தொகுத்தது, இச் சேது கண்டாய். 166

‘மற்று இதன் தூய்மை எண்ணின், மலர் அயன் தனக்கும் எட்டா;

பொன் தொடித் தெரிவை! யான் என் புகழுகேன்! கேட்டி, அன்பால்

பெற்ற தாய் தந்தையோடு தேசிகற் பிழைத்து, சூழ்ந்த

சுற்றமும் கெடுத்துளோரும் எதிர்ந்திடின் சுரர்கள் ஆவார். 167

———————————————————

இதற்குப் பிறகு இடைச் செருகல் பாடல்கள்.

—————————————————————–

கம்ப ராமாயணத்தில் பல்வேறு காலகட்டங்களில் அதனைப் படித்த புலவர்கள் தங்கள் மேதைமையை கம்பனில் சேர்த்து, தங்கள் பாடல்களையும் கம்பராமாயணப் பாடல்கள் என்று நுழைத்து விட்டார்கள்.

அப்படி, கம்பராமாயணத்தில் இடைச்செருகல்கள் நிறைய உண்டு என்று வருத்தப்பட்டார் ரசிகமணி டி.கே.சி. அவர் கம்பனில் கரை கண்டவர். கம்பராமாயணத்தில் உள்ள இடைச்செருகல்களை சரியாக அறிந்து, அவற்றை நீக்கி, அந்தப் பாடல்களை எல்லாம் தனியாக ஒரு பக்கத்தில் தொகுத்து பிற்சேர்க்கை என்று அறிவித்தார். அவர் தள்ளிய பாடல்களில் கம்பனின் கவிப் புலமையும் இல்லை; சொற்களில் பிற்காலத்திய கட்டுமானம் இருக்கும்; நவீன தமிழ்ச் சொற்கள் கையாளப்பட்டிருக்கும். பேச்சு நடை அமைந்திருக்கும்.

அப்படி அவர் முதலாக, அமரர் அ.ச.ஞானசம்பந்தன் போன்ற தமிழ் சான்றோர்கள் பலரும் நீக்கிய இடைச் செருகல் பாடல் ஒன்றில்தான், சேதுவின் முகப்பை ராமன் அம்பு கொண்டு கீறியதாக ஒரு வரி வருகிறது. அது கம்பன் பாடல் இல்லை என்று அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அந்தப் பாடல்…

கப்பை எனும் கன்னியையும், கந்தனார் தாதையையும்

அப்பொழுதே திருவணைக்குக் காவலராய் அங்கு இருத்தி,

செப்ப அரிய சிலையாலே திருவணையை வாய் கீறி,

ஒப்பு அரியாள் தன்னுடனே உயர் சேனைக் கடலுடனே.. (170-23)

__________________________

– மேற்சொன்ன இந்தப் பாடலில் இரண்டு பேரை காவலுக்கு வைத்துவிட்டு, அதன் முனையை அதாவது (செப்ப அரிய சிலையாலே திருவணையை வாய் கீறி,) சிலை – அம்பு; வாய் – முனை என்றால், இருவரைக் காவலுக்கு வைத்துவிட்டு, அதன் முனையை மட்டும் அகழி போல் சிதைத்ததாகச் சொல்லியிருக்கிறாரே தவிர, அந்த அணையை முழுவதுமாக சிதைத்ததாகச் சொல்லவில்லை. இந்தப் பாடலும் இடைச்செருகல் பாடல் என தள்ளப்பட்டுள்ளது.

காரணம், ஒரிஜினல் கம்பன் பாடலிலோ, வால்மீகியிலோ, அணையின் அழகைக் காட்டி அதைப் பார்த்து சீதை பிரமிப்பது போல் வருகிறது. மேலும் இந்தப் பாலத்தை வந்து தரிசிப்பவர்களுக்கு சகல பாவங்களும் விலகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பின்னாளில் இந்தப் பாலத்தினைப் பற்றிய ஆன்மிக நம்பிக்கை அதிகரித்ததால், பின்னாளில் கம்பனில் இடைச்செருகலாகப் பாடல்களைச் சேர்த்தவர்கள், உலகத்தில் என்னென்ன பாவங்கள் உண்டு என்று சொல்லி, அது இந்த சேது தரிசனத்தால் நீங்கும் என்று எழுதிவைத்திருக்கிறார்கள் என்பதால், சேது, சில நூற்றாண்டுகள் வரை அப்படியே தரிசனத்துக்கு இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது.

அதனால்தான் அவர்களும் இப்படி எழுதி வைத்தார்கள். அந்தப் பாடல்கள் சில உங்களுக்கு உதாரணத்துக்காக,
இந்தப் பாடல்களில் நவீன தமிழ் வருவதை கவனிக்கலாம். மேலும் பாவங்கள் என்ன என்ற லிஸ்ட் வருவதையும் கவனியுங்கள்…..

———————————————————————-

கீழ்வரும் பாடல்கள் இடைச்செருகல் ( 162-6 முதல் 162-8 வரை)

————————————————————————-

‘கருங் கடல் நிகர்ப்ப ஆன அகழி ஓர் மூன்றும் காணாய்;

மருங்கு அடர் களபக் கொங்கை மதி நுதல் மிதிலை வல்லி!

இருங் கட முகத்த யானை இவுளி, தேர், காலாள், துஞ்சி,

பொரும் சுடர் நிறத்தர் வீய்ந்த போர்க்களம் தன்னைப் பாராய்.

‘கொடி மதில் இலங்கை வேந்தன் கோபுரத்து உம்பர்த் தோன்ற,

அடு திறல் பரிதி மைந்தன் அவன் நிலை குலையத் தாக்கி,

சுடர் முடி பறித்த அந் நாள், அன்னவன் தொல்லை வெம் போர்ப்

படியினை நோக்கி நின்ற சுவேல மால் வரையைப் பாராய்.

‘பூக் கமழ் குழலினாய்! நின் பொருட்டு யான் புகலா நின்றேன்;

மேக்கு உயர் தச்சன் மைந்தன் நளன் இவன் விலங்கலால் அன்று

ஆக்கிய இதனை, வெய்ய பாதகம் அனைத்தும், வந்து

நோக்கிய பொழுதே, நூறும் சேதுவை, நீயும் நோக்காய்.

——————————————————————–

169-1 மற்றும் 169-2 இப்படி பல பாடல்கள் இடைச்செருகலாக உண்டு. இவை உதாரணத்துக்கு

————————————————————————

ஆவினை, குரவரோடும் அருமறை முனிவர்தம்மை,

பாவையர் குழுவை, இன் சொல் பாலரை, பயந்து தம் இல்

மேவின அவரை, செற்றோர், விரி கடல் சேது வந்து

தோய்வரேல், அவர்கள் கண்டாய், சுரர் தொழும் சுரர்கள் ஆவார்.

மரக்கலம் இயங்கவேண்டி, வரி சிலைக் குதையால் கீறித்

தருக்கிய இடத்து, பஞ்ச பாதகரேனும் சாரின்,

பெருக்கிய ஏழு மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி,

நெருக்கிய அமரர்க்கு எல்லாம் நீள் நிதி ஆவர் அன்றே.

—————————————————————————

170-1 முதல் 170-12 வரை… இப்படி பல பாடல்கள் இடைச்செருகலாக உண்டு. இவை உதாரணத்துக்கு

——————————————————————–

ஆங்கு அது காட்டக் கண்ட ஆயிழை, ‘கமலம் அன்ன

பூங் கழற் புயல்போல் மேனிப் புனித! என் பொருட்டால் செய்த

ஈங்கிதற்கு ஏற்றம் நீயே இயம்பு’ என, இரதம் ஆங்கே

பாங்குற நிறுவி நின்று, இங்கு இவை இவை பகரலுற்றான்:

‘அந்தணர்தம்மைக் கொன்றோர், அருந் தவர்க்கு இடுக்கண் செய்தோர்,

செந் தழல் வேள்வி செற்றோர், தீ மனை இடுவோர், தம்பால்

வந்து இரந்தவர்க்கு ஒன்று ஈயா வைக்கும் வன் நெஞ்சர், பெற்ற

தந்தையைத் தாயைப் பேணாத் தறுகணர், பசுவைச் செற்றோர்,

‘குருக்களை இகழ்வோர், கொண்ட குலமகள் ஒழியத் தங்கள்

செருக்கினால் கணிகைமாரைச் சேர்பவர், உயிர் கொல் தீம்பர்,

இருக்குடன் அமரும் தெய்வம் இகழ்பவர், ஊன்கள் தின்று

பெருக்கிய உடலர், பொய்ம்மை பிதற்றுவோர், பீடை செய்வோர்.

‘வெய்யவன் உச்சி சேர மிக வழி நடந்து போவோர்,

மை அறும் முன்னோன் தன்னை வலிசெயும் தம்பிமார்கள்,

கை உள முதல்கள் தம்மைக் கரந்து தம்பிக்கு ஒன்று ஈயார்,

துய் அன சொற்கள் சொல்வோர், சோம்பரைச் சுளித்துக் கொல்வோர்,

‘ஊரது முனிய வாழ்வோர், உண்ணும்போது உண்ண வந்தோர்க்கு

ஆர்வமோடு அளியாது இல்லம் அடைப்பவர், அமணே சென்று

நீரினுள் இழிவோர், பாவ நெறிகளில் முயல்வோர், சான்றோர்

தாரமது அணைவோர், மூத்தோர் தமை இகழ் அறிவிலாதோர்.

‘கண்டிலாது “ஒன்று கண்டோம்” என்று கைக்கூலி கொள்வோர்,

மண்டலாதிபர் முன் சென்று வாழ் குடிக்கு அழிவு செய்வோர்,

மிண்டுகள் சபையில் சொல்வோர், மென்மையால் ஒருவன் சோற்றை

உண்டிருந்து, அவர்கள் தம்பால் இகழ்ச்சியை உரைக்கும் தீயோர்,

‘பின்னை வா, தருவென்’ என்று பேசித் தட்டுவிக்கும் பேதை,

கன்னியைக் கலக்கும் புல்லோர், காதலால் கள்ளுண் மாந்தர்,

துன்னிய கலை வல்லோரைக் களிந்து உரைத்து இகழ்வோர், சுற்றம்

இன்னலுற்றிடத் தாம் வாழ்வோர், எளியரை இன்னல் செய்வோர்.

‘ஆண்டவன் படவும் தங்கள் ஆர் உயிர் கொண்டு மீண்டோர்,

நாண் துறந்து உழல்வோர், நட்பானவரை வஞ்சிப்போர், நன்மை

வேண்டிடாது, இகழ்ந்து, தீமை செய்பவர், விருந்தை நீப்போர்,

பூண்டு மேல் வந்த பேதை அடைக்கலம் போக்கி வாழ்வோர்.

‘கயிற்றிலாக் கண்டத்தாரைக் காதலித்து அணைவோர், தங்கள்

வயிற்றிடக் கருவைத் தாமே வதைப்பவர், மாற்றார்தம்மைச்

செயிர்க்குவது அன்றிச் சேர்ந்த மாந்தரின் உயிரைச் செற்றோர்,

மயிர்க் குருள் ஒழியப் பெற்றம் வெளவு வோர், வாய்மை இல்லோர்,

‘கொண்டவன் தன்னைப் பேணாக் குலமகள், கோயிலுள்ளே

பெண்டிரைச் சேர்வோர், தங்கள் பிதிர்க்களை இகழும் பேதை,

உண்டலே தருமம் என்போர், உடைப்பொருள் உலோபர், ஊரைத்

தண்டமே இடுவோர், மன்று பறித்து உண்ணும் தறுகண்ணாளர்,

‘தேவதானங்கள் மாற்றி, தேவர்கள் தனங்கள் வௌவும்

பாவ காரியர்கள், நெஞ்சில் பரிவிலாதவர்கள், வந்து

‘கா’ எனா, ‘அபயம்’ என்று, கழல் அடைந்தோரை விட்டோர்,

பூவைமார் தம்மைக் கொல்லும் புல்லர், பொய்ச் சான்று போவோர்.

‘முறையது மயக்கி வாழ்வோர், மூங்கை அந்தகர்க்குத் தீயோர்,

மறையவர் நிலங்கள் தன்னை வன்மையால் வாங்கும் மாந்தர்,

கறை படு மகளிர் கொங்கை கலப்பவர், காட்டில் வாழும்

பறவைகள், மிருகம், பற்றிப் பஞ்சரத்து அடைக்கும் பாவர்.

——————————————————-

இப்படி மேலே கண்ட பாடல்கள் பலவும் நவீன கால சொற்களைத் தாங்கி, கதையின் போக்கில் பாடலாசிரியரின் கருத்தை உட்புகுத்தி இருக்கின்றன. இவற்றை எப்படி சரியான கம்பன் பாடல்கள் என்று சொல்லி, கம்பராமாயணத்தில் பாடப்பட்டதாக ஏற்க முடியும்?

————————————————–

வால்மீகி ரெபரன்ஸ்

யுத்த காண்டம், ஸர்க்கம் 126 – ராமன் சீதைக்கு வழியிலுள்ள தலங்களைக் காட்டியது… என்ற தலைப்பில்

———————————————-

இதில் எங்குமே ராமன் சேதுவை சேதப்படுத்தியதாக தகவல் இல்லை. நாம்தான் ராமசேது என்கிறோமே தவிர, ராமன் சீதைக்குச் சொல்லும் இடங்களில் எல்லாம், இது நளன் கட்டிய பாலம் என்று சீதைக்கு தெரிவித்து, தன்னுடைய இஞ்சினியர் பேரையே பயன்படுத்தியிருக்கிறார். இவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் பாலத்தைக் கட்டியது உன் கண்களின் அழகுக்காக என்று சொல்கிறார்….

——————————————

—————————

அன்பன்

செங்கோட்டை ஸ்ரீராம்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe