‘திமுக.,வையோ – தி.மு.க.,காரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை’ எனக் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில் பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, பாஜக., தொண்டர்களை மிரட்டினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், முதல்வர் ஸ்டாலின் பாஜக., தொண்டர்களை நேரடியாக மிரட்டியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரைக்கு வந்த அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியபோது… செந்தில் பாலாஜி கைதுக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் பதற்றத்தில் இருக்கிறார். முதல்வர் வரம்பு மீறி பேசியுள்ளார். பாஜக., தொண்டர்களை நேரடியாக மிரட்டியுள்ளார்.
திமுக சட்டத்தை கையில் எடுப்பது தமிழகத்திற்கு புதிதல்ல. இம்முறை இது பாஜக.,பக்கம் திரும்பியுள்ளது. பாஜக., தொண்டர் மீது கை வைத்துப் பாருங்கள் என நானும் முதல்வருக்கு சவால் விடுக்கிறேன். நிலைமை கை மீறிப் போனால் கோட்டையை நோக்கி வருவோம். கொடுத்தால் திருப்பிக் கொடுப்போம்; நாங்கள் பழைய பாஜக., அல்ல. எதற்கும் தயாராக உள்ளோம்.
2016ல் இதே வழக்கில் செந்தில் பாலாஜியை ஊழல்வாதி எனக் கூறிய ஸ்டாலின், இப்போது அவருக்கு ஆதரவாக கோபப்பட்டு பேசுகிறார். சொந்த அமைச்சரையே அரசு மருத்துவமனையில் வைக்க மாட்டோம் என்கின்றனர். அப்படியெனில் திராவிட மாடல் தோற்றுவிட்டது என்று அர்த்தம்.
தமிழகம், புதுச்சேரியில் 40க்கு 40 லோக்சபா தொகுதியில் பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். எதிர்க் கட்சிகள் இணைந்தால் பாஜக.,விற்கு லாபம் தான் என்றார்.