அரசியலுக்கு முழுக்கு இல்லை: சரத்குமார்

தான் பல்வேறு தடைகளை தாண்டி வந்தவன் என்றும், தான் அரசியலுக்கு முழுக்கு போடப்போவதாக வெளியான செய்தி தவறானது என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: நான் ஆரம்ப காலத்தில் இருந்து பத்திரிகையாளராக துவங்கி பல கஷ்டங்களை பட்டு அரசியலுக்கு வந்தவன். ஒரு குறிக்கோளுடன் வந்தவன் நான். வாழ்க்கையில் நான் பல்வேறு தடைகளை கண்டவன், தோல்வியை கண்டு துவள மாட்டேன். என்னை பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். பத்திரிகை இந்த நாட்டின் தூண்கள். எனவே அவர்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும். அரசியலுக்கு முழுக்கு என்று வெளியான செய்திக்கு எனது மறுப்பை தெரிவித்து கொள்கிறேன். தற்போது நடப்பது டிஜிட்டல் உலகம். இந்த காலத்தில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே எதையும் சாதிக்க முடியும். எனது பொருளாதார வளத்திற்காக நான் தற்போது சில சினிமாக்களில் நடித்து வருகிறேன். சேவை செய்யும் நோக்கத்தில் இருந்து வருகிறேன். கூடுதல் நேரம் இருப்பதால் சினிமாவில் நடிக்கிறேன். தொடர்ந்து நடிப்பேன் இதில் மாற்றம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.