கர்நாடக அரசை கலைப்பது தான் தீர்வா? : ராமதாஸ்

காவிரி பிடிவாதம் பிடிப்பதால், கர்நாடக அரசை கனத்த
இதயத்துடன் கலைப்பது தான் தீர்வாஎன்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி வீதம் நாளை முதல் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற காவிரி மேற்பார்வைக்குழுவின் தீர்ப்பை ஏற்க முடியாது என்று கர்நாடகம் அறிவித்துள்ளது. காவிரி பிரச்சினையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், அதை பாதுகாக்கும் அமைப்புகளையும் எந்த அளவு அவமதிக்க முடியுமோ, அந்த அளவு கர்நாடகம் அவமதித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்காக வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் வழங்க வேண்டும் என்ற காவிரி மேற்பார்வை குழுவின் தீர்ப்பு தமிழகத்திற்கு பெரிய அளவில் பயனளிக்காது. சம்பா சாகுபடிக்கு  அந்த நீர் போதுமானதல்ல. இதை நேற்று வெளியிட்ட அறிக்கையில் புள்ளி விவரங்களுடன் நான் விளக்கியிருந்தேன். ஆனால், அந்த நீரைக் கொடுப்பதற்கு கூட கர்நாடகம் மறுத்து பிடிவாதம் காட்டுகிறது. காவிரி மேற்பார்வைக் குழு தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே, தமிழ்நாட்டிற்கு காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வழங்க முடியாது என கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறியிருக்கிறார். மேற்பார்வைக் குழு தீர்ப்பு வெளியான பிறகு அதுபற்றி கருத்து தெரிவித்த கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, ‘‘காவிரி மேற்பார்வைக் குழு தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்வோம்’’ என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.
கர்நாடக எதிர்க்கட்சிகளும் காவிரி விவகாரத்தில் பிடிவாதத்தையும், வெற்றுப்புணர்வையும் உமிழ்ந்து வருகின்றன. பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சரும், மாநில பாரதிய ஜனதா தலைவருமான எடியூரப்பா,‘‘ காவிரி மேற்பார்வைக் குழுவின் தீர்ப்பை கர்நாடக அரசு ஏற்கக்கூடாது. எத்தகைய விளைவுகள் ஏற்பட்டாலும் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட திறந்துவிடக் கூடாது’’ என்று கூறியிருக்கிறார். அக்கட்சியின் இன்னொரு மூத்தத் தலைவரான ஈஸ்வரப்பாவும் இதேகருத்தை வலியுறுத்தியிருக்கிறார். தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளமும் தமிழகத்திற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மற்றொரு புறம் கன்னட இனவாத அமைப்புகள் மாண்டியா மாவட்டத்தில் வன்முறையை நடத்தியுள்ளன.
காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்பதற்காக கர்நாடக அணைகளின் நீர் இருப்பைக் குறைத்துக் காட்டும் மோசடியிலும் கர்நாடகம் ஈடுபட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கடந்த 05.09.2016 அன்று நள்ளிரவிலிருந்து தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போதைய நிலவரப்படி கர்நாடக அணைகளின் நீர் இருப்பு 56.81 டி.எம்.சி ஆகும். அன்று முதல் நேற்று வரை  தமிழகத்திற்கு கிடைத்துள்ள தண்ணீரின் அளவு 14 டி.எம்.சிக்கும் குறைவு தான். அதன்படி கர்நாடக அணைகளில் குறைந்தது 43 டி.எம்.சி தண்ணீர் இருக்க வேண்டும். ஆனால், நேற்றைய நிலவரப்படி கர்நாடக அணைகளில் 26.17 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் இருப்பதாக அம்மாநில அரசின் இணைய தளங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால், மீதமுள்ள 17 டி.எம்.சி தண்ணீர் என்னவானது? என்ற கேள்விக்கு கர்நாடகம் பதிலளிக்க வேண்டும். கர்நாடகத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப் படவில்லை; குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் எடுக்கப்படுகிறது என்று அம்மாநில அரசே கூறியுள்ளது.
குடிநீருக்காக ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் எடுக்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும் கடந்த 15 நாட்களில் 2.55 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.  அதன்படி பார்த்தால் அணைகளின் நீர் இருப்பை 14 டி.எம்.சி அளவுக்கு கர்நாடக அரசு குறைத்துக் காட்டுவதாகவே கருத வேண்டியிருக்கிறது. மேலும் சுமார் 500 ஏரிகளில் தண்ணீரை நிரப்பி அதை கணக்கில் காட்டாமல் மறைக்கும் முயற்சியிலும் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. ஒரு மாநிலத்திற்கு உரிமைப்படி வழங்க வேண்டிய நீரை வழங்காமல் இருப்பதற்காக, நீர் இருப்பைக் குறைத்துக் காட்டி நீதிமன்றங்களையும், மக்களையும் ஏமாற்ற முயல்வது நல்ல அரசுக்கு அழகல்ல.
வன்முறைகளை தூண்டி விடுவதன் மூலமும், கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை எனக்கூறி மோசடி செய்வதன் மூலமும் தமிழகத்திற்குரிய தண்ணீரை தர மறுப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், கூட்டாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுத் தத்துவத்தையும் அவமதிக்கும் செயலாகும். இதை மத்திய அரசு அனுமதிப்பது நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தாக முடியும். எனவே, உரிமைப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று  கர்நாடக அரசுக்கு பிரதமர் நரேந்திரமோடி ஆணையிட வேண்டும். அதன்பிறகும் தமிழகத்திற்கு நீர் வழங்க கர்நாடக அரசு மறுத்தால், கர்நாடக முதலமைச்சர் ‘கனத்த இதயத்துடன்’ சில செயல்களை செய்வதைப் போல மத்திய அரசும் ‘கனத்த இதயத்துடன்’ சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவற்றில் அரசியலமைப்பு சட்டத்தின் 356 ஆவது பிரிவை பயன்படுத்தி கர்நாடக அரசை கலைப்பதும்  ஒன்றாக இருக்க வேண்டுமா? என்பதை நாம் முடிவு செய்ய வேண்டிய தருணம் நெருங்கி விட்டது.