December 4, 2021, 10:18 am
More

  அரசு சுவர்கள், பாலங்களின் அழகைச் சிதைப்போருக்கு என்ன தண்டனை?

  பொது இடங்களின் அழகை மேம்படுத்தும் வகையில் அவற்றில் அழகான, தமிழர்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான ஓவியங்களை வரைய அரசு முன்வர வேண்டும்.

  h raja bridge - 1

  சென்னை பள்ளிக்கரணையில் பதாகை சரிந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட விபத்தில் சுபஸ்ரீ என்ற பெண் பொறியாளர் உயிரிழந்த விபத்து மற்றும் அதுகுறித்து தானாக வழக்குப் பதிவு செய்த உயர்நீதிமன்றம் தெரிவித்த கடுமையான கருத்துகள் ஆகியவற்றைத் தொடர்ந்து அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த பதாகைகளும், கட் அவுட்களும் வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி சட்டவிரோதமாக பதாகைகள் வைப்போருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

  பொதுமக்களுக்கும், சாலைகள் மற்றும் நடைபாதைகளை பயன்படுத்துவோருக்கும் மிகக்கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் அனுமதி இல்லாத பாதுகாப்பற்ற உயிர்க்கொல்லி பதாகைகள், அலங்கார வளைவுகள், கட்&அவுட்டுகள் ஆகியவற்றை அமைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வருகிறேன். எனது வேண்டுகோள் பிற அரசியல் கட்சிகளால் செவிமடுக்கப் படவில்லை என்றாலும் கூட, உயர்நீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மனநிறை வளிக்கின்றன. இவை வரவேற்கத்தக்கவையாகும். இந்த நேரத்துக்கான நடவடிக்கைகளாக மட்டும் இருந்து விடாமல், இவை தொடர வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பமாகும். இந்த விருப்பம் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

  தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் பதாகை கலச்சாரத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும்  இன்னொரு அருவருக்கத்தக்க கலாச்சாரம் அதன் கோர முகத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது. சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அரசு அலுவலகங்களின் சுவர்கள், பேருந்து நிறுத்தங்கள், பாலங்கள்…. அவ்வளவு ஏன்? பள்ளிக்கூட சுவர்களைக் கூட விட்டு வைக்காமல் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை எழுதுதல், சுவரொட்டிகளை ஒட்டுதல் என பொது இடங்களின் அழகைக் கெடுக்கும் செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். கட்சிகளுடன் போட்டி போடும் வகையில் திரைத்துறை சார்ந்த விளம்பரங்களும், சுவரொட்டிகளும் பொது இடங்களை  அருவருக்கத்தக்கவையாகவும், பெண்களை முகம் சுழிக்க வைப்பவையாகவும் மாற்றிக் கொண்டிருக்கின்றன.

  தைலாபுரத்திலிருந்து சென்னைக்கும், பிற நகரங்களுக்கும் மகிழுந்தில் பயணிக்கும் போது இயற்கை அழகை ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இடமும், வலமும் பார்த்துக் கொண்டிருக்கும் போது, இடைஇடையே பொது இடங்களில் செய்யப்பட்டுள்ள சட்டவிரோத விளம்பரங்களும், சுவரொட்டிகளும் தோன்றி ரசனையைக் கெடுக்கும். தனியார் சுவர்களில் அவற்றின் உரிமையாளர்களின் அனுமதியைப் பெற்று விளம்பரங்களை செய்வது விதிகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொது இடங்களின் அழகைக் கெடுக்கும் செயல்களை அனுமதிக்கக்கூடாது என்று பல தருணங்களில் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் எச்சரித்த பிறகும் இவை தொடருவது தான் வேதனை ஆகும்.

  பொது இடங்களில் விளம்பரங்கள் செய்வதையும், சுவரொட்டிகள் ஒட்டுவதையும் தடுக்கும் வகையில்  1959-ஆம் ஆண்டில் தமிழ்நாடு திறந்தவெளிப்பகுதிகளின் அழகு சீர்குலைக்கப்படுதல் தடைச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின்படி அரசு சுவர்களில் விளம்பரம் செய்வோருக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். ஆனால், இத்தகைய சட்டவிரோத விளம்பரம்  செய்வது தடுக்கப்படாத நிலையில், அது தொடர்பான வழக்கை 13.06.2016 அன்று விசாரித்த சென்னை  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, பொது இடங்களில் விளம்பரங்கள் செய்யப்படுவது தொடர்ந்தால் அதை செய்தவர்கள் மீதும்,  அதை தடுக்கத் தவறியவர்கள் மீதும்  வழக்கமான சட்டத்தின்படி 3 மாத சிறை தண்டனை விதிக்கப் படுவது மட்டுமின்றி, கூடுதலாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, அதற்கான தண்டனையும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அதற்கும் சில காலத்திற்கு பிறகு பயனில்லை.

  இந்த வழக்கில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை கடந்த 08.03.2019 அன்று விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு,  பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகளை அனுமதிக்கவே முடியாது என்றும், இவற்றை அதிகாரிகள் தடுத்தே ஆக வேண்டும் என்றும் கடுமையாக கூறியது. ஆனால், அதன்பிறகும் இத்தகைய அத்துமீறல்கள் தொடகின்றன என்றால் அதற்கு காரணமானவர்களை எப்படி விமர்சிப்பது என்பது தான் தெரியவில்லை.

  பொது இடங்களின் அழகு கெடுக்கப்படுவதைத் தடுக்க சென்னை மாநகராட்சி சார்பில் மா.சுப்பிரமணியன்,  சைதை துரைசாமி ஆகியோர் மேயர்களாக இருந்த போது பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அழகை சிதைப்பவர்களிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் அந்த முயற்சிகள்  வெற்றி பெறவில்லை. அரசுக்கு சொந்தமான இடங்களும், மலைகள், பாலங்கள் போன்றவற்றையும் நமது இல்லத்தின் வரவேற்பறையாக கருதினால் அவற்றின் அழகைச் சிதைக்க மனம் வராது. அதையும் மீறி பொது இடங்களின் அழகைக் குலைப்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான். 

  இதைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களின் அழகை சிதைப்பவர்களுக்கு   கடுமையான தண்டனை வழங்கும் வகையில் 1959-ஆம் ஆண்டின் தமிழ்நாடு திறந்தவெளிப் பகுதிகளின் அழகு சீர்குலைக்கப்படுதல் தடைச் சட்டத்தில் அரசு உரிய திருத்தங்களை செய்து, அதை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்; பொது இடங்களின் அழகை மேம்படுத்தும் வகையில் அவற்றில் அழகான, தமிழர்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான ஓவியங்களை வரைய அரசு முன்வர வேண்டும்.

  • டாக்டர் ராமதாஸ் (நிறுவுனர், பாட்டாளி மக்கள் கட்சி)

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,787FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-