எனக்கு பின்னும் அ.தி.மு.க., ஜெ., உருக்கம்

தமிழக சட்டசபையில், 2016 ஜன., 23ல் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா, ‘எனக்கு பின்னும், அ.தி.மு.க., இருக்கும்’ என உருக்கமாக பேசினார். அவரது பேசியதாவது: சிலர் கேட்கலாம் குறிப்பில்லாமல் பேச முடியாதா என்று. பேச முடியும், மணிக் கணக்கில் பேச முடியும். பொதுக் கூட்டங்களில் பேசுவதுபோல் முழங்க முடியும். செந்தமிழில் முழங்க முடியும். ஆனால், இத்தனை புள்ளிவிவரங்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா? ஒவ்வொரு துறையை எடுத்துக் கொண்டாலும், 36 துறைகள் இருக்கின்றன அராசங்கத்தில் ஒவ்வொரு துறையை எடுத்துக் கொண்டாலும் நாங்கள் செய்திருக்கின்ற சாதனைகளைச் சொல்ல வேண்டு மானால் ஒரு துறைக்கு ஒரு நாள் தேவை.
ஒரு நாள் முழுவதும் தேவை. அப்படியானால், இந்த ஐந்து ஆண்டு காலத்தில் நாங்கள் செய்துள்ள சாதனைகள் முழுவதையும் சொல்லி முடிக்க வேண்டுமென்றால் 36 நாட்கள் நான் பதிலுரை இங்கே வழங்க வேண்டும். 36 நாட்கள் இந்த அவை கூட வேண்டும். 36 நாட்களும் சொல்லக்கூடிய அளவுக்கு அத்தனை சாதனைகளைப் புரிந்துள்ளோம்.
அவற்றையெல்லாம் சுருக்கி, கிட்டத்தட்ட ஒன்றரைமணி நேரத்தில் சொல்லக்கூடிய அளவுக்கு கொண்டுவருவது என்பது பகீரதப்பிரயத்தனம். எதைச் சொல்வது, எதை விடுவது என்று பார்த்துப் பார்த்து தயாரிக்கப்பட்ட பதிலுரை இது. ஆகவே, இன்னும் நாங்கள் செய்துள்ள சாதனைகளைச் சொல்ல வேண்டும் என்றால், ஏராளமானவை உள்ளன.ஆனால் நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், எங்களுடைய செயல்பாடு, எங்களுடைய திட்டங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான்.எங்களைப் பொறுத்தவரை எந்தச் சுயநலமும் இல்லை. பொது நலம் தான்.
மக்கள் நலம் தான். அ.திமு.க. தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம்.மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட ஒரு இயக்கம்.
இந்த இயக்கம் இருக்கும் வரை, நான் இருக்கும் வரை, இந்த இயக்கம் மென்மேலும், தமிழர்கள் வாழ்வு வளம் பெறச் செயல்படும். எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா உருக்கமாக பேசினார்.