முதல்வராக பொறுப்புகளைத் தொடங்குகிறார் ஓ.பி.எஸ்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது பொறுப்புகளை புதன்கிழமை (டிச.7) முதல் தொடங்கவுள்ளார்.
ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், ஏழு நாள்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் அரசு நிகழ்ச்சிகள் ஏதும் இல்லாவிட்டாலும், அவர் தனது வழக்கமான அலுவலகப் பணிகளை புதன்கிழமை (டிச.7)
முதல் தொடங்குவார் எனத் தெரிகிறது.
கடந்த 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம்.
இதைத் தொடர்ந்து, 2001-ஆம் ஆண்டு மாநில சட்டப் பேரவைத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது, முக்கிய துறையான வருவாய்த் துறைக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, டான்சி வழக்கில் ஜெயலலிதாவால் முதல்வராக பொறுப்பேற்க முடியாத சூழலில் தலைமையின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கிய ஓ.பன்னீர்செல்வம், முதல்வராக பொறுப்பேற்றார்.
2001-ஆம் ஆண்டில்…: அவர், 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 21-லிருந்து, 2002 ஆம் ஆண்டு மார்ச் வரையில் தமிழக முதல்வராக பணியாற்றினார். வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டவுடன், மீண்டும் அவரிடமே முதல்வர் பொறுப்பை ஒப்படைத்தார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் பொதுப்பணித் துறை அமைச்சராக தொடர்ந்து பதவி வகித்தார்.
2006-ஆம் ஆண்டில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலிலும் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அப்போது, அதிமுக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்ததால், சட்டப் பேரவை எதிர்க் கட்சித் துணைத் தலைவராகச் செயல்பட்டார். பேரவைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா வராத காலங்களில் அவரே கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்களை வழிநடத்தினார்.
தொடர் தேர்தல் வெற்றி: 2001-இல் தொடங்கிய சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றி 2011-இலிலும் நீடித்தது. போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றிக்கனியைப் பறித்தார். இதைத் தொடர்ந்து, அவர் நிதியமைச்சர், அவை முன்னவர் பொறுப்பை வகித்தார். சில காலங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருந்தார்.
2014-ஆம் ஆண்டில்…2014-ஆம் ஆண்டு செப்டம்பரில் பெங்களூரு நீதிமன்றத் தீர்ப்பால் ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழக்க நேரிட்டது. இதையடுத்து, இரண்டாவது முறையாக முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா கடந்த ஆண்டு மே மாதம் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தான் வகித்து வந்த முதல்வர் பொறுப்பை ராஜிநாமா செய்து ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார்.
2016 சட்டப் பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் நிதி அமைச்சராகவும், அவை முன்னவராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில், முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து சட்டப் பேரவை அதிமுக கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தேர்வால், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல்வராக பொறுப்பேற்றார். ஜெயலலிதா அமைச்சரவையில் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த 31 பேர் அப்படியே அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
பணிகளைத் தொடர்கிறார்: உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் துறைகளை ஏற்கெனவே கடந்த அக்டோபர் 11-ஆம் தேதியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் கவனித்து வந்தார். அப்போது முதல்வர் துறைகளை மட்டுமே கவனித்து வந்த அவர் இப்போது முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை நடந்தன. இதையடுத்து தனது அலுவல் பணிகளை அவர் புதன்கிழமை (டிச.7) முதல் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.