சோ மறைவுக்கு ராம.கோபாலன் இரங்கல்

சோ மறைவுக்கு ராம.கோபாலன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்…
துக்ளக் பத்திரிகையின் ஆசிரியரும், பாரத அளவில் பிரபலமான அரசியல் விமர்சகருமான சோ எஸ். ராமசாமி அவர்களின் மறைவு
தேசிய அளவில் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு.
நேற்று முன்தினம் தமிழக முதல்வர் மறைந்த நிலையில், இன்று அவரது நெருங்கிய நண்பர் சோ எஸ். ராமசாமி அவர்கள் மறைந்தது, தமிழகத்திற்குப் பெரும் இழப்பு.
சோ எஸ். ராமசாமி, பன்முகத் திறமை கொண்டவர். வழக்கறிஞராக தொடங்கிய அவரது பயணம், திரைப்பட நடிகர், நாடக நடிகர், நாடக எழுத்தாளர், எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாசிரியர் என்று விரிந்துகொண்டே போகிறது. அவை ஒவ்வொன்றிலும் தனி முத்திரைப் பதித்தவர். எதையும் யதார்த்தமாக எடுத்துக்கொண்டு, நகைச்சுவையாக பேசக்கூடியவர். வயதின் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டபோதும் விடாது அவர் ஆற்றிய பத்திரிகைப் பணியானது மகத்தானது.
எனக்குத் தனிப்பட்டமுறையில் பல ஆண்டுகளாக நண்பராக இருந்தவர். அதுவும் இந்திராகாந்தி அம்மையார், பாரதத்தில் அவசர நிலை கொண்டு வந்தபோது, அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. அவரும் நானும் தொடர்ந்து அவசரநிலையை எதிர்த்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டோம்.
தனது பத்திரிகையின் வாயிலாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பற்றி தமிழக மக்களிடம் கொண்டு சென்று நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தினார். தேசிய அரசியலும் நடைமுறை சாத்திய கூறுகளை ஆராய்ந்து முடிவு எடுத்து அதனை செயல்படுத்தவும் செய்தார். திரு. நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் பிரதமராக வர தகுதி படைத்தவர் என அவரைப் பற்றி பலவாறு விமர்சனங்கள் எழுந்தபோதும்அவற்றை எல்லாம் புறந்தள்ளி, அவரைப் பற்றி நம்பிக்கையோடு துக்ளக் ஆண்டு விழாவிலும், பத்திரிகையிலும் எடுத்துக்கூறியவர்.
துணிச்சல் மிகுந்தவர், எந்த நிலையையும் சமாளிக்கும் திறமை கொண்டவர். தனக்கு சரி என பட்ட கருத்தைக் கூற எந்த இடத்திலும் தயங்கமாட்டார். திமுகவைப் பற்றி காரசாரமாக துக்ளக் இதழில் எழுதி வந்த நிலையில், ஒரு நாள் அண்ணாசாலையில் திமுக ஊர்வலம் வந்தபோது, கொஞ்சமும் தயங்காமல், அவர் வந்த வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, ஊர்வலத்தின் ஊடே வந்து அலுவலகம் வந்து சேர்ந்தார். அதுபோல திராவிடர் கழகம் பகுத்திறிவு என்ற போர்வையில் சேலத்தில் நடத்திய இந்துக்களின் தெய்வமான ராமரையும் செருப்பால் அடித்தும், விநாயகரை உடைத்தும் நடத்திய அநாகரிக நாடகத்தை துணிவுடன் வெளியிட்டார். எமர்ஜென்சியாலும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாலும் பல இன்னல்களைச் சந்தித்தாலும் அதனை எதிர்கொள்ளும் மன உறுதி படைத்தவராக திகழ்ந்தார்.
இராமாயணம், மகாபாரதம், இந்து மகா சமுத்திரம் போன்ற மகா காவியங்களைப் படைத்தவர். அவரது எழுத்தாற்றலால் இளைஞர்களுக்கு உத்வேகம் பிறந்து இந்து சமய, சமுதாய பணியில் நெஞ்சை நிமிர்த்தி செயல்பட வைத்தவர்.
இதுபோன்ற பல ஆயிரம் வெற்றிகளுக்கும், உதாணரங்களுக்கும் சொந்தக்காரர் என்றாலும் சோ அவர்கள் எளிமையானவர், இனிமையான, உற்சாகமான மனநிலை போன்ற நற்குணங்களைக் கொண்டவர்.
துக்ளக் பத்திரிகையின் மூலம் அரசியல் விமர்சனத்தால் நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை நடத்திக்காட்டியவர். அரசியல் விமர்சனப் பத்திரிகையின் முன்னோடியாக திகழ்ந்தவர். எல்லா துறைகளிலும் ஏராளமான நண்பர்களை, நம்பிக்கையானவர்களை துணையாகக் கொண்டவர். குறிப்பாக தான் பொதுவாழ்வில் யாரை என்ன விமர்சனம் செய்தாலும், தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு பாராட்டக்கூடியவர்.
தனிப்பட்ட முறையில் நான் எனது நண்பரை, தேசியவாதியை இழந்த சோகத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவரது இழப்பினால் துயரப்படும் அவரது குடும்பத்தினர், வாசகர்கள்., நண்பர்கள் அனைவருக்கும் இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறோம்.
– என்று தெரிவித்துள்ளார்.